`AC அறையில் நவீன விவசாயம்; 7 நாள்களில் அறுவடை'- மைக்ரோ கிரீன்ஸ் விற்பனையில் அசத்தும் திருச்சி இளைஞர்
துரித உணவுகளின் ஆதிக்கத்தால் ஆரோக்கியத்தைச் தொலைத்துவிட்டு நிற்கும் நகர்ப்புற மக்களுக்கு, 'மைக்ரோ கிரீன்ஸ்' எனப்படும் நுண்கீரைகள் ஒரு வரப்பிரசாதமாகும். ரசாயனக் கலப்பற்ற, சத்துக்கள் நிறைந்த இந்த சூப்பர் உணவை திருச்சியில் வெற்றிகரமாக உற்பத்தி செய்து, மாடித்தோட்ட அமைப்பிலேயே அசத்தி வருகிறார் 23 வயதான இளம் வேளாண் பட்டதாரி ஜி.கே. வேந்தன்.
திருச்சி திருவானைக்கோவிலில் உள்ள தனது நவீனப் பண்ணையில் வளர்த்து விற்பனை செய்துவரும் நுண்கீரைகள் வளர்ப்பு குறித்த தன் சுவாரஸ்யமான கள அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்.
"எனது சொந்த ஊர் திருச்சிதான். பள்ளிப் படிப்பை திருச்சியிலும் தஞ்சாவூரிலும் முடிச்சுட்டு, பொள்ளாச்சியில உள்ள தனியார் கல்லூரியில வேளாண்மைப் பட்டப்படிப்பு பி.எஸ்.சி.அக்ரி படிச்சேன். படிக்கும்போதே எனக்குள்ள ஒரு கேள்வி ஓடிட்டே இருந்தது... 'நம்ம ஊர்ல சாப்பிடுற உணவுகள்ல நச்சுத்தன்மை அதிகமாயிடுச்சே, மக்களுக்கு எப்படி சுத்தமான, சத்துள்ள உணவைக் கொண்டு போய் சேர்க்குறது?' அப்படின்னு யோசிச்சப்போதான், பாடப்புத்தகத்துல படிச்ச 'மைக்ரோ கிரீன்ஸ்' (நுண்கீரைகள்) என் கண்ணுல பட்டது.

காய்கறிகள் மற்றும் மூலிகைகளின் விதைகள் முளைவிட்டு, முதல் இலைகள் வரும் கட்டத்தில் பறிக்கப்படும் இளம் கீரைகளே இந்த நுண்கீரைகள். சாதாரண முதிர்ந்த தாவரங்களை விட, இந்த இளம் தளிர்கள்ல விட்டமின்கள், தாதுக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் பல மடங்கு அதிகம்! அதனாலதான் இதை 'சூப்பர் உணவுகள்'னு சொல்றாங்க. உடனே இதையே தொழிலா தொடங்கலாம்னு முடிவு பண்ணி களத்துல இறங்கினேன்" என்று சந்தோஷம் பொங்கக் கூறுகிறார்.
ஏசி அறை... சண்டிகர் விதைகள்!
"மைக்ரோ கிரீன்ஸ் வளர்க்கப் பெரிய நிலமோ, தோட்டமோ தேவையில்லைங்க. வீட்டின் உள்ளேயே தேங்காய் நார் கழிவு நிரப்பிய தட்டுகள்ல எளிதா வளர்க்கலாம். வீட்டிலேயே ஒரு மாடித்தோட்டம் மாதிரி அறையை அமைத்து, அதை முழுசா ஏசி அறையா மாத்தியிருக்கேன். அறை வெப்பநிலை எப்போதும் 24°C முதல் 29°C வரை இருக்கணும். தாவரங்கள் ரொம்ப உணர்திறன் கொண்டவை என்பதால், கிருமித்தொற்று வராம இருக்க யாரையும் பண்ணைக்குள்ள அதிகமாக அனுமதிக்குறதில்லை. மைக்ரோ கிரீன்ஸ்க்கு என்றே தனியாகத் தட்டுகள் இருக்கின்றன, விளக்குகளும் எப்போதும் எரிந்துகொண்டே இருக்கும்.

அடுத்து முக்கியமான விஷயம்... விதைகள். நம்ம ஊர் விதைகள் இதுக்குச் செட் ஆகல. நான் நிறைய இடத்துல வாங்கி வளர்த்துப் பார்த்துட்டேன். ஆனால், மரபணு மாற்றம் செய்யப்படாத (Non-GMO), ரசாயனம் கலக்காத தூய்மையான விதைகளைச் சண்டிகரிலிருந்து வரவழைத்துப் பயன்படுத்துறதுதான் கரெக்டா வந்தது.
பச்சைப்பயறு, பாசிப்பயறு எல்லாம் அளவாத்தான் சாப்பிடுவோம். அளவா சாப்பிடலன்னா சிலருக்கு வாயுத் தொல்லை பிரச்சனைலாம் வரும். ஆனா, வெறும் 30 கிராம் நுண் கீரையிலேயே உடம்புக்குத் தேவையான அத்தனை சத்துக்களும் கிடைச்சுடும்.

நம்ம ஊருல திருவிழாக்களுக்கு முளைப்பாரி போடுவோம்ல... அதே முறைதான்! விதைச்சு 7 நாள்ல இதை அறுவடை செஞ்சிடனும். 7 நாட்களுக்குள் வளர்க்குறதால இதுக்கு எந்த ரசாயன உரமோ, பூச்சிக்கொல்லி மருந்தோ அடிக்கத் தேவையே இல்லை. குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால் 5 முதல் 7 நாட்கள் வரை கெடாம ஃபிரெஷா இருக்கும்."
பண்ணையில் உற்பத்தியாகும் நுண்கீரை வகைகள்!
வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப 1 கிலோ, 500 கிராம், 100 கிராம் மற்றும் 50 கிராம் பாக்கெட்டுகளில் தூய்மையான முறையில் உற்பத்தி செய்யப்பட்டு விற்கப்படுகின்றன.
இளஞ்சிவப்பு தண்டுக்கீரை, கலவை நுண்கீரைகள், பச்சை துளசி, பீட்ரூட், ப்ராக்கோலி, கொத்தமல்லி, சியா விதை, மக்காச்சோளம், பச்சை கேல், இளஞ்சிவப்பு கேல், கோல் ராபி, வெந்தயக் கீரை, கடுகுக் கீரை, வெங்காயக் கீரை, பட்டாணி, சீனா ரோஸ் முள்ளங்கி, ஊதா முள்ளங்கி, வெள்ளை முள்ளங்கி, சிவப்பு முட்டைக்கோஸ், ரெட் வைன் சோரல், பசலைக் கீரை, சூரியகாந்தி, கோதுமைப் புல் மற்றும் சங்குப்பூ ஆகியவற்றின் நுண்கீரைகள் அடுத்தடுத்து வரிசையாகக் கிடைக்கின்றன.

வியாபாரமும்... விலையும்...!
"ஆரம்பத்துல சோசியல் மீடியா மூலமாதான் ஆர்டர்கள் எடுத்தேன். 7 நாளைக்கு முன்னாடி ஆர்டர் கொடுத்தா ஃப்ரெஷா ரெடி பண்ணி தருவேன். இப்போ திருச்சியில் உள்ள சில பெரிய ஹோட்டல்கள், தில்லைநகர் பகுதி வீடுகள்ல இருந்து நல்ல வரவேற்பு இருக்கு. முன்னாடி உயர் ரக உணவகங்களில் மட்டுமே கிடைச்ச இதை, இப்போ சமோசா, கட்லெட், பஃப்ஸ், சாலடுகள் போன்ற மதிப்பு கூட்டப்பட்ட உணவுகள்லயும் சேர்த்து மக்கள் சாப்பிடத் தொடங்கிட்டாங்க.
'விலை கொஞ்சம் கூடுதலா இருக்கே'னு சிலர் கேட்கலாம். ஆனா, ஆரோக்கியம் பத்தி விழிப்புணர்வு உள்ளவங்களுக்கு விலை ஒரு பொருட்டே கிடையாது. ஏசி கரண்ட் பில், ஸ்பெஷல் தட்டுகள், வெளி மாநில விதைகள், விளக்குகள் எரியும் செலவுனு இருக்குறதால, ஒவ்வொரு கீரைக்கும் தனித்தனியா ரேட் பிக்ஸ் பண்ணியிருக்கோம். நல்ல பொருளுக்கு நல்ல விலை கொடுக்க மக்கள் தயங்குறது இல்ல."

குடும்பத்தின் ஆதரவும்...
மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களும்!
படிப்பு முடிந்தவுடன் வேறு எங்கும் வேலைக்குச் செல்லாமல் உடனே இந்தச் சொந்தத் தொழிலைத் தொடங்கிவிட்டதாகக் கூறும் வேந்தன்,
இந்தத் தொழில் தொடங்கி 5 மாதங்கள்தான் ஆகின்றன என்றும், இப்போதைக்குத் தனக்கு மாதம் ரூ.60,000 முதல் ரூ.70,000 வரை வருமானம் கிடைப்பதாகவும் பெருமிதத்துடன் தெரிவிக்கிறார். இத்தொழிலில் தனக்குக் குடும்பத்தின் முழுமையான ஆதரவு உள்ளதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
மேலும், மைக்ரோ கிரீன்ஸ் தவிர்த்து வாழைப்பூ பருப்பு பொடி, முருங்கைக் கீரை இட்லி பொடி, முருங்கைக் கீரை சூப் (இன்ஸ்டன்ட் சூப் மிக்ஸ்) போன்ற பொருட்களையும் தயாரித்து விற்பனை செய்து வருவதாகவும், வாடிக்கையாளர்கள் தங்களது இணையதளம் மூலமாகவும் ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறுகிறார்.

அரசின் ஆதரவும்... நேரடி பயிற்சியும்!
"வேளாண் பட்டதாரியான நான், கற்ற கல்வியை வைத்து இந்தத் தொழிலைத் தொடங்கியுள்ளேன். விவசாயத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில், தமிழக அரசின் நடப்பாண்டு வேளாண் பட்ஜெட்டில் ‘நுண்கீரை’ திட்டத்தின் கீழ் ரூ.1.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எங்களுக்குக் மிகப்பெரிய பலம். மேலும், திருச்சி EDII-TABIF (தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம்) சார்பில் நடத்தப்படும் விழிப்புணர்வு அமர்வுகளும் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. புதிதாக தொழில் தொடங்க வர்றவங்களுக்கு நாங்களே 3 நாள் நேரடிப் பயிற்சி கொடுத்து, அவங்களையே சொந்தமாக வளர்க்கும் தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொடுக்கிறோம்.
இதுவரை திருச்சி, புதுக்கோட்டை, கரூர், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 40 மற்றும் 50 வயதுடையவர்கள் உட்பட சுமார் 10 பேருக்கு மேல் நேரில் வந்து பயிற்சி பெற்றுச் சென்றுள்ளனர்.
குறைந்த முதலீடு, சிறிய இடம் இருந்தா போதும்... நீங்களும் இதில் ஜெயிச்சு காட்டலாம்!" என நம்பிக்கையுடன் புன்னகைக்கிறார் வேந்தன் நேச்சுரல்ஸ் உரிமையாளர், வேந்தன்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)