ராணிப்பேட்டை: கடத்தப்பட்ட பெண் குழந்தை 35 நாள்களுக்குப் பிறகு ஆந்திராவில் மீட்பு; 5 பேர் கைது
ராணிப்பேட்டை மாவட்டம், லாலாபேட்டையைச் சேர்ந்த நாடோடி சமூக தம்பதி சேகர் - பிரேமா. இவர்கள் குப்பைகளிலிருந்து பழைய பொருள்கள் மற்றும் பாட்டில்களைச் சேகரித்து காயலான் கடையில் விற்று அதில் கிடைக்கும் வருவாய் மூலம் வாழ்வாதாரம் ஈட்டி வருகின்றனர். இவர்களுக்கு ஒரு வயதில் மகேஸ்வரி என்ற பெண் குழந்தை இருக்கிறது.
இந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 23-ம் தேதி இரவு ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வானாபாடி மாணிக்கம் நகர்ப் பகுதியில் பழைய பொருள்களைச் சேகரித்துவிட்டு, சாலையோரமாக குழந்தையுடன் படுத்து தூங்கினர். நள்ளிரவு 1 மணியளவில், குழந்தை மாயமானது.

சிப்காட் போலீஸார் வழக்குப் பதிவு செய்து குழந்தையைத் தீவிரமாகத் தேடினர். குழந்தையைக் கண்டுபிடிக்க முடியாததால் குழந்தையின் புகைப்படத்துடன்கூடிய அறிவிப்பையும் போலீஸார் வெளியிட்டிருந்தனர். குழந்தை பற்றிய துப்பு கிடைக்காததால் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டது.
இந்த நிலையில், 35 நாள்களுக்குப் பிறகு ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா பகுதியில் வசிக்கும் மல்லீஸ்வரி என்ற பெண்ணின் வீட்டில் இருந்து குழந்தையைப் பத்திரமாக மீட்டது தனிப்படை போலீஸ். மல்லீஸ்வரியைக் கைது செய்த போலீஸார், அவரிடம் குழந்தையைக் கடத்தி விற்றதாக ராணிப்பேட்டையைச் சேர்ந்த தம்பதி உட்பட மேலும் 4 பேரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)