மும்பை ஐஐடி: 412 பேராசிரியர்களில் 5 பேர் மட்டுமே பட்டியல் சமூகத்தவர்கள்; RTI சொல்லும் தகவல் என்ன?
மும்பை ஐ.ஐ.டி வளாகத்தில் சமீபத்தில் சாஹில் என்ற மாணவர் தனது அறையில் தற்கொலை செய்து கொண்டார். தங்களது மகன் பேராசிரியரின் சாதி ரீதியான துன்புறுத்தல் காரணமாகவே தற்கொலை செய்து கொண்டான் என்றும், எனவே சம்பந்தப்பட்ட பேராசிரியரைக் கைது செய்ய வேண்டும் என்றும் கோரி சாஹில் தந்தை மும்பை ஆசாத் மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
அடிக்கடி மும்பை ஐ.ஐ.டி வளாகத்தில் சாதிப் பிரச்னை தலைதூக்குவது வழக்கமாக இருந்து வருகிறது.
இதையடுத்து அகில இந்திய இதர பிற்படுத்தப்பட்ட மாணவர் சங்கத்தின் தலைவர் கவுட் கிரண் குமார் மும்பை ஐ.ஐ.டியில் எந்தெந்தச் சாதியில் எத்தனை பேராசிரியர்கள் பணியாற்றுகின்றனர் என்பது குறித்து தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் மனுவைத் தாக்கல் செய்தார்.
சமீபத்தில் கிடைத்த அந்த அறிக்கையில் முக்கிய தகவல்கள் கிடைத்து இருக்கிறது. இதில் பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் பட்டியலில் பட்டியல் இனம், பழங்குடியினர் இனம், மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கிறது.
செப்டம்பர் 2026 நிலவரப்படி, மும்பை ஐ.ஐ.டியில் 412 பேராசிரியர்கள் இருந்தனர். அவர்களில் ஐந்து பேர் மட்டுமே பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஆறு பேர் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் இல்லை என்று தெரிய வந்துள்ளது.
இது தவிர இணைப் பேராசிரியர் மற்றும் உதவிப் பேராசிரியர் நிலைகளில், இந்நிறுவனத்தில் 363 பேர் இருக்கின்றனர். அவர்களில் 29 பேர் பட்டியல் இனத்தையும், எட்டு பேர் பழங்குடியினத்தையும் 35 பேர் இதர பிற்படுத்தப்பட்ட இனத்தையும் சேர்ந்தவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து முதன்மை கல்வி நிறுவனங்களில் பட்டியல் இனம், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பிரதிநிதித்துவத்தின் அளவு குறைவாக இருப்பது குறித்து கிரண் குமார் கேள்வி எழுப்பினார்.

மேலும் இந்தப் பாகுபாடு மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களிடையே சாதி தொடர்பான பாகுபாடுகளை ஏற்படுத்துமா என்றும் கேள்வி எழுப்பினார்.
மேலும் ஐ.ஐ.டி போன்ற கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பழங்குடியினர் மற்றும் பட்டியல் இனத்தை சேர்ந்தவர்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)