மதுராந்தகம் என்றால் நினைவுக்கு வருபவர்; தவெக மேடையில் திமுக தளபதி பெயர் - யார் இந்த மதுராந்தகத்தார்?

Oct 06, 2026 - 13:30
0
மதுராந்தகம் என்றால் நினைவுக்கு வருபவர்; தவெக மேடையில் திமுக தளபதி பெயர் - யார் இந்த மதுராந்தகத்தார்?

மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கடந்த சில தினங்களாகவே தமிழ்நாடு முழுக்க கவனம் ஈர்த்த ஊர்கள் இவை என்றால் மிகையில்லை.

இந்த இரண்டு தொகுதிகளில் மதுராந்தகத்தில் போட்டியிடும் முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்கள் அனைவருமே அந்தத் தொகுதியைச் சார்ந்தவர்கள் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடந்த வாரம் த.வெ.க-வின் தேர்தல் பிரசார மேடையில் பேசிய காங்கிரஸ் கட்சி எம்.பி விஷ்ணு பிரசாத், ``மதுராந்தகம் என்றால் நினைவுக்கு வருவது மூன்று விஷயங்கள். முதலில் மதுராந்தகம் ஏரி. இரண்டாவது இங்குள்ள ஏரி காத்த ராமர் ஆலயம். மூன்றாவது மதுராந்தகம் ஆறுமுகம்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

ஏரியும் ஏரி காத்த ராமரும் எல்லாருக்கும் தெரியும்.

மதுராந்தகம் ஆறுமுகம் குறித்து இப்போதைய தலைமுறையில் எத்தனை பேருக்குத் தெரியும்?

மதுராந்தகத்தை நன்கு அறிந்தவரும் அவருடன் அரசியலில் பயணித்தவருமான கே.எஸ்.ராதாகிருஷ்ணனிடம் பேசினோம்.

மதுராந்தகம் ஆறுமுகம்

"திமுகவின் முக‌மா இருந்தவர் பத்தி தவெக மேடையில பேசியிருக்காங்க" என்றவர், ஆறுமுகம் குறித்த நினைவுகளைப் பகிரத் தொடங்கினார்.

''திமுக-வில் கலைஞர், பேராசிரியர், ஆற்காட்டாருக்குப் பிறகு இரண்டாவது வரிசைத் தலைவர்கள்னு ஒரு வரிசை இருக்கும். வீரபாண்டி ஆறுமுகம், கோ.சி மணி உள்ளிட்ட சிலர் இந்த வரிசையில் இருந்தாங்க. இவங்க தத்தமது ஏரியாவுலயும் பெரிய செல்வாக்கோட இருப்பாங்க. அதேபோல கலைஞரும் எந்தவொரு விஷயம்னாலும் இவங்ககிட்டயும் நேரடியாப் பேசி கருத்துக் கேட்பார். இந்த வரிசையில இருந்தவர்தான் மதுராந்தகம் ஆறுமுகம். மதுராந்தகத்தார்னு கூப்பிடுவாங்க. முரசொலியில மாவீரர் மதுராந்தகத்தார்னெல்லாம்கூட எழுதுவாங்க‌.

திமுக-வின் முக்கியத் தலைவர்களில் ஒருவரா இருந்தார். கட்சியின் பொதுக்குழு உறுப்பினரா இருந்தார். அப்போதைய ஒருங்கிணைந்த செங்கல்பட்டு மாவட்டச் செயலாளரா இருந்தார். திமுக-வின் முக்கியமான ஓர் அங்கமான திமுக அறக்கட்டளையின் உறுப்பினரா இருந்திருக்கார். மூணு முறை எம்.எல்.ஏ-வாக இருந்திருக்கார். அவர் காலத்துல ஏரியாவை திமுக-வின் கோட்டையா வச்சிருந்தார். எந்த நேரத்துலயும் கலைஞர்கிட்ட நேரடியாகப் பேச முடிகிற சிலர்ல இவரும் ஒருத்தரா இருந்தார்.

கே.எஸ் ராதாகிருஷ்னன்

கடந்த தேர்தல்ல திமுக, தவெக-வைத் தாண்டி அதிமுக ஜெயிச்சதே... அப்படியெல்லாம் ஆறுமுகம் காலத்துல வேறு கட்சிகள் அங்க ஜெயிச்சிட முடியாது.

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு இந்திய அரசியலமைப்புச் சட்ட நகலை எரித்தார்னு 45 நாள்கள் ஜெயிலுக்குப் போனார்.

கட்சித் தலைமையில இருந்து யார் செங்கல்பட்டை கிராஸ் செய்தாலும் மதுராந்தகம் ஆறுமுகத்தோட ஹோட்டலுக்கு ஒரு எட்டுப் போகாமப் போக மாட்டாங்க.

ஒருமுறை இவருடைய பிறந்தநாள் வந்தது. கலைஞர் மதுராந்தகம் போய் இவரை வாழ்த்தினார். அப்ப கலைஞருடன் நானும் போயிருந்தேன்.

இப்படியான செல்வாக்குடன் இருந்தவரை கடைசியில் திமுக கண்டுக்கலைங்கிறது நிஜம்தான். அதுக்கு காரணம், வைகோ வெளியேறியபோது அவரை நம்பி வந்தவங்கள்ல இவரும் ஒருத்தர். அதனால ஸ்டாலினுக்குப் பிடிக்காமப் போச்சு. எனக்கு ஏற்பட்ட அதே நிலைதான் கொஞ்சம் முன்னாடி இவருக்கும் நிகழ்ந்தது.

மதுராந்தகம் தொகுதியில் ஸ்டாலின் பிரசாரம்
மதுராந்தகம் தொகுதியில் ஸ்டாலின் பிரசாரம்

வைகோவை நம்பி வந்து பிரயோஜனமில்லைனு தெரிஞ்சதும் மறுபடியும் திமுக-வுக்குப் போனார். அங்க பழைய மரியாதை இல்லை. கலைஞர் இருந்தவரை கிடைச்ச மதிப்பும் மரியாதையும் அவர் காலத்துக்குப் பிறகு கிடைக்கலை. கடைசியில 2025-ன்னு நினைக்கிறேன், காலமாகிட்டார்" என்ற கே.எஸ்.ஆர், `` `மறப்போம் மன்னிப்போம்'ங்கிறதையெல்லாம் ஸ்டாலின்கிட்ட எதிர்பார்க்கவே முடியாது" என முடித்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User