புதிய தலைமை செயலகம்: `எந்தத் திட்டம் கொண்டு வந்தாலும் மக்கள் சிலர் எதிர்ப்பார்கள்'- செங்கோட்டையன்

Sep 12, 2026 - 10:00
0
புதிய தலைமை செயலகம்: `எந்தத் திட்டம் கொண்டு வந்தாலும் மக்கள் சிலர் எதிர்ப்பார்கள்'-  செங்கோட்டையன்

முதல்வர் விஜய் முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு பயணம் மேற்கொண்டிருக்கும் நிலையில், அமைச்சர் செங்கோட்டையன் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``தமிழ்நாட்டில் இன்றைக்கு நாம் எதிர்கொள்ள வேண்டிய இரு முக்கியமான பிரச்சினைகள் உள்ளன., 'சூப்பர் எல் நினோ' (Super El Niño) எனப்படும் வெப்பநிலை உயர்வு. புவி வெப்பநிலை அதிகரித்து வருகிறது. காலநிலை மாறி புதிய சூழல் உருவாகியுள்ளது. வடகிழக்குப் பருவமழை இந்த ஆண்டு கூடுதலாக மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது. எனவே அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது குறைவாக இருந்தாலும், கவலைப்படத் தேவையில்லை. இயற்கையின் மாற்றங்களால் இன்னும் 15 நாட்களுக்குள் மேட்டூர் அணைக்குத் தேவையான கூடுதல் நீர் வரத்து கிடைக்க வாய்ப்புள்ளது. காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் மக்களுக்கு முழுமையாகப் பயன்படும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

புதிய தலைமைச் செயலகம் அமைப்பது தொடர்பாக நீண்டகாலமாக எதிர்க்கட்சிகள் கருத்துகளைக் கூறி வருகின்றன. முதன்முதலில் திமுக புதிய அலுவலகத்தைக் கட்டியபோதே, அது மருத்துவமனையாக மாற்றப்பட்டது. அதன்பின் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் ராணி மேரி கல்லூரியில் புதிய தலைமைச் செயலகம் கட்ட முற்பட்டபோதும் தடைகள் எழுந்தன. தற்போதுள்ள தலைமைச் செயலக வளாகம் 4.5 ஏக்கர் மட்டுமே கொண்டுள்ளது. அனைத்து அரசுப் பணிகளையும் மேற்கொள்வதற்கு இந்த இடம் போதுமானதாக இல்லை என்பதால், புதிய தலைமைச் செயலகத்தைக் கட்ட வேண்டும் என்று முதலமைச்சர் முடிவு செய்துள்ளார்.

பரந்தூர் கிராமம்

எந்த இடத்தில், எந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தாலும் மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பது இயல்புதான். மின்சார சப்-ஸ்டேஷன், உயர் அழுத்த மின் கோபுரங்கள், கட்டடங்கள் அல்லது குடிநீர்க் குழாய்கள் என எது அமைத்தாலும் பொதுமக்கள் சிலர் ஆட்சேபனை தெரிவிக்கவே செய்கிறார்கள். எனவே, அனைவரும் மனம்திறந்து புதிய தலைமைச் செயலகம் அமைக்க ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.

பரந்தூர் பகுதியில் சிப்காட் (SIPCOT) அமைப்பதற்கும் விமான நிலையம் அமைப்பதற்கும் வேறுபாடுகள் உள்ளன. சிப்காட்டிற்கு 2,000 முதல் 3,000 ஏக்கர் நிலம் போதுமானது. ஆனால் விமான நிலையத்திற்கு கூடுதல் நிலம் தேவைப்படுகிறது. இதில் பல்வேறு தொழில்நுட்ப ரீதியான மாற்றங்கள் இருப்பதால், கேள்விகள் கேட்பதன் மூலம் மட்டுமே இதைப் புரிந்து கொள்ள முடியாது.

சட்டமன்ற இடைத்தேர்தலில் எங்களின் வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக இருக்கும். எங்களுக்கு அந்தந்தப் பகுதிகளில் உள்ள எல்லைகளும் செல்வாக்கும் நன்றாகத் தெரியும்.

செங்கோட்டையன்

கொங்கு மண்டலத்தில் உள்ள 58 தொகுதிகளில் நாங்கள் 29 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளோம். சரியான வேட்பாளர்களைத் தேர்வு செய்திருந்தால் 200 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்திருப்போம். பொதுமக்கள் எங்களை யார் என்றே தெரியாது. வேட்பாளரை விட முதலமைச்சர் விஜயைப் பார்த்து வாக்களிக்கிறார்கள். நமது சட்டமன்றம் சண்டை போடும் இடமாக இல்லை. மக்கள் அனைவரும் சட்டமன்ற நிகழ்வுகளை மிகவும் ஆர்வத்துடன் நேரலையில் பார்த்து வருகிறார்கள். தொலைக்காட்சியில் நாடகங்களைப் பார்ப்பதை விடச் சட்டமன்ற நிகழ்வுகளையே விரும்பிப் பார்க்கிறார்கள். மக்கள் கவனிக்கும் அளவிற்கு முதலமைச்சரின் செயல்பாடுகள் அமைந்துள்ளன." என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User