புகழ்பெற்ற கன்னட நடிகர் அனந்த் நாக்-க்கு தாதாசாகேப் பால்கே விருது; பிரதமர் மோடி வாழ்த்து!

Sep 16, 2026 - 22:31
0
புகழ்பெற்ற கன்னட நடிகர் அனந்த் நாக்-க்கு தாதாசாகேப் பால்கே விருது; பிரதமர் மோடி வாழ்த்து!

இந்தியத் திரைத்துறைக்கு ஆற்றிய மிகச்சிறந்த பங்களிப்பிற்காக, மூத்த நடிகர் அனந்த் நாக் அவர்களுக்கு 2024-ம் ஆண்டிற்கான புகழ்பெற்ற ‘தாதாசாகேப் பால்கே விருது’ வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து பத்திரிகைத் தகவல் மையம் (PIB) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ``தாதாசாகேப் பால்கே விருது தேர்வுக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், தலைமுறை கடந்து பலருக்கு முன்மாதிரியாகத் திகழும் அனந்த் நாக் அவர்களுக்கு இவ்விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருகின்ற செப்டம்பர் 22, 2026 அன்று குஜராத்தின் கெவாடியாவில் நடைபெறும் 72-வது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் இவருக்கு விருது வழங்கப்படவுள்ளது.

நடிகர் அனந்த் நாக்
நடிகர் அனந்த் நாக்

இதனையொட்டி பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், ``பல தசாப்தங்களாகத் தனது இயல்பான நடிப்பினாலும், பன்முகத் திறமையினாலும் இந்திய சினிமாவிலும், குறிப்பாக கன்னடத் திரையுலகிலும் ஆழமான முத்திரையைப் பதித்துள்ள அனந்த் நாக் அவர்களுக்கு வாழ்த்துகள்.

இவர் ஏற்று நடித்த அனைத்துக் கதாபாத்திரங்களுக்கும் அபாரமான ஆழத்தையும் இயல்பையும் கொண்டு சேர்த்துள்ளார். இது அவருக்குக் கிடைத்த தகுதியான கௌரவம்" என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

1948 செப்டம்பர் 4 அன்று பிறந்த அனந்த் நாகர்கட்டே என்ற இயற்பெயர் கொண்ட அனந்த் நாக், கன்னடத் திரையுலகின் மிகவும் மதிக்கத்தக்க நடிகர்களில் ஒருவர். இவர் தனது திரைப் பயணத்தில் 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இதில் 250-க்கும் மேற்பட்ட கன்னடப் படங்களும், அதுதவிர தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், மராத்தி மற்றும் ஆங்கிலப் படங்களும் அடங்கும்.

நடிகர் அனந்த் நாக்
நடிகர் அனந்த் நாக்

திரைப்படங்கள் மட்டுமன்றி, பிரபல எழுத்தாளர் ஆர்.கே. நாராயணனின் கதைகளை அடிப்படையாகக் கொண்டு தூர்தர்ஷனில் ஒளிபரப்பான ‘மால்குடி டேஸ்’ என்ற புகழ்பெற்ற தொடரிலும் இவர் நடித்துள்ளார். தனது சிறந்த நடிப்பிற்காக ஐந்து முறை கர்நாடக மாநில திரைப்பட விருதுகளைப் பெற்றுள்ள இவருக்கு, 2025-ம் ஆண்டு இந்தியாவின் மூன்றாவது உயரிய விருதான 'பத்ம பூஷண்' விருது வழங்கி மத்திய அரசு கௌரவித்தது குறிப்பிடதக்கது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User