சமூக வலைதளங்களில் குழந்தைகள் பாதுகாப்பு: Meta-வின் முடிவு போதுமா? நிபுணர் கருத்து!

Sep 19, 2026 - 15:30
0
சமூக வலைதளங்களில் குழந்தைகள் பாதுகாப்பு: Meta-வின் முடிவு போதுமா?  நிபுணர் கருத்து!

Lசமூக வலைதளங்களில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகத்தைச் சித்தரிக்கும் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் கான்டென்ட்கள் (Child Sexual Abuse Material - CSAM) தொடர்பாக கண்டறியப்படும் வழக்குகள் குறித்து, இனி இந்திய சட்ட அமலாக்க அமைப்புகளுக்கு நேரடியாகத் தகவல் வழங்கப்படும் என்று Meta நிறுவனம் அறிவித்துள்ளது.

சமூக வலைதளங்களில் பதிவுகள், விளம்பரங்கள் அல்லது இணைப்புகள் மூலம் இதுபோன்ற சட்டவிரோத கான்டென்ட்கள் பரவும் அபாயம் உள்ள நிலையில், அவற்றை உருவாக்குபவர்கள் அல்லது பகிர்பவர்கள் குறித்து விசாரணை நடத்துவதற்குத் தேவையான தகவல்களை அதிகாரிகளிடம் வழங்குவதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும்.

இதற்கு முன்பு, இதுபோன்ற தகவல்கள் அமெரிக்காவைச் சேர்ந்த NCMEC ( காணாமல் போன மற்றும் சுரண்டலுக்கு உள்ளான குழந்தைகளுக்கான தேசிய மையம்) அமைப்பின் வாயிலாக இந்திய அதிகாரிகளைச் சென்றடைந்தன. தற்போது, இதுபோன்ற வழக்குகள் தொடர்பான தகவல்கள் இந்திய அதிகாரிகளுக்கு நேரடியாக வழங்கப்பட உள்ளன.

மெட்டா | பணிநீக்கம்
மெட்டா | பணிநீக்கம்

இந்த நடவடிக்கை எந்த அளவுக்கு பயனுள்ளதாக இருக்கும்? குழந்தைகளை இணைய ஆபத்துகளில் இருந்து பாதுகாக்க இன்னும் என்ன செய்ய வேண்டும்? உள்ளிட்ட கேள்விகளுடன் உளவியல் நிபுணர் ஷியாமலாவிடம் பேசினோம்.

"ஒரு கான்டென்ட் கண்டறியப்பட்ட பிறகு அதை நீக்குவது மட்டும் பிரச்னைக்குத் தீர்வாகாது. அந்த கான்டென்ட் எப்படி சமூக வலைதளத்தின் பாதுகாப்பு அமைப்புகளைத் தாண்டி வெளியானது, அதற்குப் பின்னால் இருப்பவர்கள் யார் என்பதை கண்டறிந்து, மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என்கிறார் ஷியாமலா.

உளவியல் நிபுணர் ஷியாமலா

Meta போன்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான கண்டறிதல் முறைகளை மேலும் வலுப்படுத்த வேண்டும். ஒரு குறிப்பிட்ட கான்டென்ட்டை மட்டும் கண்காணிப்பதுடன் நிறுத்தாமல், சந்தேகத்திற்குரிய கணக்குகள், விளம்பரங்கள் மற்றும் அதன் பின்னணியில் செயல்படும் வலையமைப்புகளையும் கண்காணிக்க வேண்டும். இதுபோன்ற வழக்குகளில் விசாரணைக்கு தேவையான தகவல்கள் விரைவாகக் கிடைப்பது, குற்றவாளிகளை அடையாளம் காண உதவும் என்றும் அவர் கூறுகிறார்.

"குழந்தைகளை இணையத்திலிருந்து முழுமையாக விலக்கி வைப்பது இன்றைய சூழலில் சாத்தியமில்லை. அதனால், இணையத்தை எப்படிப் பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும் என்பதை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்பது மிகவும் முக்கியம்" என்கிறார் ஷியாமலா.

பெற்றோர்கள் குழந்தைகளுடன் இணையப் பயன்பாடு குறித்து தொடர்ந்து உரையாட வேண்டும். தனிப்பட்ட புகைப்படங்கள், கடவுச்சொற்கள், இருப்பிட விவரங்கள் போன்றவற்றை யாரிடமும் பகிரக்கூடாது என்பதையும், இணையத்தில் அறிமுகமாகும் அனைவரும் அவர்கள் கூறும் நபர்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்பதையும் குழந்தைகளுக்கு புரியவைக்க வேண்டும்.

பள்ளிகளிலும் டிஜிட்டல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.

இணையத்தில் எதிர்கொள்ளும் பிரச்னைகளை குழந்தைகள் பயமின்றி பெற்றோர் அல்லது ஆசிரியர்களிடம் தெரிவிக்கும் நம்பிக்கையான சூழலை உருவாக்குவது அவசியம் என்றும் அவர் வலியுறுத்துகிறார்.

pixabay

பாதுகாப்பு... அனைவரின் பொறுப்பு!

குழந்தைகளின் பாதுகாப்பை ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தின் பொறுப்பாக மட்டும் பார்க்க முடியாது. தளங்கள் தங்கள் பாதுகாப்பு அமைப்புகளை வலுப்படுத்த வேண்டும். அரசு அமைப்புகள் விரைவான நடவடிக்கைகளை உறுதி செய்ய வேண்டும். பெற்றோர்களும் ஆசிரியர்களும் குழந்தைகளுக்கு சரியான வழிகாட்டுதலை வழங்க வேண்டும்.

"ஒரு குழந்தை இணையத்தில் ஏதேனும் பிரச்னையை சந்தித்தால், அதை பயமின்றி ஒரு பெரியவரிடம் சொல்லும் நம்பிக்கையை உருவாக்குவது மிகவும் முக்கியம். அந்த நம்பிக்கையே குழந்தைகளுக்கான மிகப்பெரிய பாதுகாப்பு" என்கிறார் ஷியாமலா.

டிஜிட்டல் உலகம் வளர்ந்து கொண்டே இருக்கும் நிலையில், குழந்தைகளின் பாதுகாப்பும் அதே வேகத்தில் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. தொழில்நுட்பம், சட்டம் மற்றும் விழிப்புணர்வு — இந்த மூன்றும் இணைந்தால்தான் பாதுகாப்பான இணையச் சூழலை உருவாக்க முடியும்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User