Karunas: "எடப்பாடியை எதிர்த்து பேசியதற்காக என் மீது பொய் வழக்குகள் போடப்பட்டன" - கருணாஸ்

Sep 15, 2026 - 14:31
0
Karunas: "எடப்பாடியை எதிர்த்து பேசியதற்காக என் மீது பொய் வழக்குகள் போடப்பட்டன" - கருணாஸ்

மலையாள சினிமாவின் சில திரைப்படங்களில் திரைக்கதையாசிரியராகப் பணியாற்றிய சஜீவ் பழூர், தமிழில் கருணாஸை வைத்து 'என்ன விலை' என்ற படத்தை எடுத்திருக்கிறார். இப்படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகிறது.

நடிகை நிமிஷா சஜயனும் இப்படத்தின் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்றது.

‘என்ன விலை' படத்தில்...
‘என்ன விலை' படத்தில்...

இந்த நிகழ்வில் பேசிய நடிகர் கருணாஸ், "இந்தப் படத்தின் கதைக்களம் ஒரு பொருள் கண்டெடுக்கப்படுவதிலிருந்து தொடங்குகிறது. குறிப்பிட்ட ஒரு பகுதியில் ஒரு பொருள் கண்டெடுக்கப்படும்போது, அதன் உரிமை பறிக்கப்படுகிறது.

அதைத் தொடர்ந்து பல விவாதங்கள் எழுகின்றன. இலங்கையிலிருந்து நீந்தி வரும் மீனைப் பிடித்தால், அது இலங்கைக்குத்தான் சொந்தமா என்ற கேள்வி எழுகிறது.

அதேபோல, உப்புத் தண்ணீரில் உப்பளம் அமைத்து உப்பு எடுக்கும்போது, அந்த உப்பளம் அரசாங்கத்திற்குச் சொந்தமா அல்லது மக்களுக்குச் சொந்தமா என்ற கேள்வியும் வருகிறது.

ஆயிரம் சங்குகளைச் சேகரித்தால்தான் நான்கு வலம்புரி சங்குகள் கிடைக்கும். அந்த அளவிற்கு உழைக்கும் மக்களுக்கு அது சொந்தமா என்றால், ஒரு காலத்தில் அது அரசாங்கத்திற்குச் சொந்தமாக இருந்தது.

ஆனால், இடைப்பட்ட காலத்தில் அதை யார் எடுக்கிறார்களோ அவர்களுக்கே சொந்தம் என்ற நிலைக்கு அந்த விவாதம் மாறியது.

எனவே, இந்தச் சமூகத்தில் ஒரு பொருள் யாருக்குச் சொந்தம் என்பதும், சாமானிய மக்களின் மான மரியாதைக்கு என்ன மதிப்பு என்பதும்தான் இக்கதையின் முக்கிய விஷயம்.

‘என்ன விலை' படத்தில்...
‘என்ன விலை' படத்தில்...

நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது, எடப்பாடியை எதிர்த்துக் கேள்வி கேட்டதற்காக வள்ளுவர் கோட்டத்தில் என் மீது 9 பொய் வழக்குகள் சுமத்தப்பட்டன.

அதில் பல வழக்குகள் நீதிமன்ற விசாரணைக்கே வரவில்லை, குற்றப்பத்திரிகையோடு நிற்கின்றன. 2009 முதல் இன்று வரை நான் ஒரு அமைப்பை நடத்தி வருகிறேன்.

அப்போதெல்லாம் என் மீது தமிழ்நாட்டில் எங்கேனும் வழக்கு இருக்கிறதா என உயர் அதிகாரிகள் சல்லடை போட்டுத் தேடினார்கள். ஆனால், என் மீது எந்த வழக்கும் இல்லை.

புளியம்பட்டியில் நடந்த ஒரு சம்பவத்தில் என் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் ஏற்பட்ட தகராறில் எனக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை.

இருப்பினும், இரண்டு ஆண்டுகள் கழித்து 'மற்றும் பலர்' என்ற வரிசையில் என் பெயரையும் சேர்த்துக்கொண்டார்கள்.

நான் நேரடியாகப் பாதிக்கப்பட்டதற்கு என்னிடம் ஆதாரங்கள் உள்ளன. இந்த வழக்கினால் எனது பாஸ்போர்ட் ஒரு வருடம் முடக்கப்பட்டிருந்து, நீதிமன்றத்தின் மூலமாகவே அதை மீட்டேன்.

ஒரு நடிகராகிய எனக்கே இந்த நிலைமை என்றால், கடலுக்குள் சென்று உழைத்துச் சாப்பிடும் சாமானியனின் நிலைமை என்ன?

‘என்ன விலை'
‘என்ன விலை'

இது இந்தச் சிஸ்டத்தைப் பார்த்துக் கேட்கப்படும் கேள்வி. சினிமா என்பது நடைமுறையில் உள்ளதைப் பிரதிபலிப்பது. மக்களால்தான் எங்களைப் போன்ற கலைஞர்கள் வாழ்கிறோம்.

திரையரங்கிற்கு வந்து மக்கள் கொடுக்கும் பணத்தில்தான் தயாரிப்பாளருக்கு வருமானம் கிடைக்கிறது. அதிலிருந்தே நடிகர்களுக்கும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் ஊதியம் வழங்கப்படுகிறது.

அப்படி இருக்கும்போது, அந்த மக்களுக்கு ஒரு பிரச்னை என்றால் நிச்சயம் நான் குரல் கொடுப்பேன். அதனால் எனக்கு என்ன இழப்பு வந்தாலும் அதைப் பற்றிக் கவலையில்லை" எனப் பேசியிருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User