"'உடற்தகுதி பெறுங்கள்; அணியில் இடம் உண்டு' என்றார்; ஆனால்...''- கோலி மீது அமித் மிஸ்ரா குற்றச்சாட்டு
காயத்துக்குப் பிறகு மீண்டும் இந்திய அணிக்குத் திரும்பலாம் என நம்பியிருந்த அமித் மிஸ்ராவுக்கு ஏமாற்றமே மிஞ்சியதாகக் கூறுகிறார். உடற்தகுதியைப் பெற்றால் அணியில் இடம் கிடைக்கும் என்று விராட் கோலி உறுதியளித்ததாகவும், பின்னர் தொடர்புகொண்டபோது பதிலளிக்கவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
2017-ல் பெங்களூருவில் இங்கிலாந்துக்கு எதிரான T20 போட்டியின்போது காலில் காயமடைந்த தனக்கு அதுவே கடைசி சர்வதேசப் போட்டியாக அமைந்ததாகவும், காயம் ஏற்படாமல் இருந்திருந்தால் இந்திய அணிக்காக மேலும் பல போட்டிகளில் விளையாடியிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

இதைக் குறித்து முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா நடத்தும் ‘Baith & Bol’ Podcast-ல் பங்கேற்றபோது, காயத்துக்குப் பிறகு நடந்தவற்றை அமித் மிஸ்ரா பகிர்ந்துகொண்டார்.
அப்போது இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த அனில் கும்ப்ளேயிடம் பேசியதை நினைவுகூர்ந்த அவர், “நான் காயமடைந்து வெளியேறியபோது அனில் கும்ப்ளே பயிற்சியாளராக இருந்தார். அவரிடம் பேசியபோது, ‘கவலைப்படாதே. உடற்தகுதியைப் பெற்றதும் மீண்டும் அணிக்குத் திரும்பிவிடுவாய்’ என்று கூறினார்” என்றார்.
பின்னர் விராட் கோலியிடமும் தனது நிலைமை குறித்துக் கேட்டதாக மிஸ்ரா தெரிவித்துள்ளார். “நான் விராட் கோலியிடம், ‘சகோதரா, நான் என்ன செய்ய வேண்டும்?’ என்று கேட்டேன். அதற்கு அவர், ‘கவலைப்படாதே. முழுமையாக உடற்தகுதியைப் பெற்று குணமடைந்துவிடு. அணியில் உனக்கு இடம் இருக்கிறது’ என்று கூறினார்” என்றார்.

ஆனால், காயத்திலிருந்து மீண்ட பிறகு அணிக்குத் திரும்புவது குறித்துக் கோலியிடம் கேட்டபோது, ஒரு வாரம் முதல் 10 நாள்களுக்குள் தெரிவிப்பதாகக் கூறியிருக்கிறார். அதன்பிறகு நடந்ததைப் பற்றிப் பேசிய மிஸ்ரா, “ஒரு வாரம் கடந்தது; இரண்டு வாரங்கள் கடந்தன; மூன்று வாரங்களும் கடந்தன. எந்தத் தகவலும் வரவில்லை. நான் அழைத்தேன் அவர் அழைப்பை ஏற்கவில்லை.
குறுஞ்செய்தி அனுப்பினேன் பதிலும் இல்லை. மீண்டும் அழைத்தேன். இரண்டு முறை கூடுதலாக முயற்சி செய்தும் பதில் கிடைக்கவில்லை. பிறகு முயற்சி செய்வதையே விட்டுவிட்டேன்” என்றார்.
மேலும் மற்ற வீரர்களுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்ததையும் அவர் சுட்டிக்காட்டினார். “என்னைவிடக் கடுமையான காயங்களுக்கு ஆளாகி, நீண்ட காலம் விளையாடாமல் இருந்த வீரர்கள்கூட மீண்டும் அணிக்குத் திரும்பினார்கள். ஆனால், எனக்கு மட்டும் இன்றுவரை எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. ஒருவருக்கு உங்களை அணியில் சேர்த்துக்கொள்ள விருப்பமில்லை என்றால், நீங்கள் என்ன செய்ய முடியும்?” என்று அமித் மிஸ்ரா தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)