அரசுத் தேர்வுகளுக்கு முதல் முறையாக தயாராகும் தேர்வர்கள்; முதல் 3 மாதங்கள் எப்படி படிக்க வேண்டும்?
'UPSC/TNPSC குரூப் -1, 2 தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் ஆனந்த விகடனும் King Makers IAS அகாடமியும் இணைந்து சென்னையில் ஓர் இலவசப் பயிற்சி முகாமை நடத்தத் திட்டமிட்டிருக்கின்றன.
'நீங்களும் ஆகலாம் IAS' என்ற தலைப்பிலான இந்த இலவசப் பயிற்சி முகாம் வருகிற அக்டோபர் 25-ம் தேதி சென்னை, எழும்பூர், எத்திராஜ் மகளிர் கல்லூரியில் நடைபெற இருக்கிறது.
அதனுடன் ஒரு வருட இலவசப் பயிற்சிக்கான ஸ்காலர்ஷிப் தேர்வும் நடக்கிறது. இந்த நிகழ்வில் Dr. ஜெ.ராதாகிருஷ்ணன், IAS தலைவர், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் , Dr. P.விஜயகுமார், IPS இணை ஆணையர், பெருநகர சென்னை தெற்கு (சட்டம் & ஒழுங்கு), Dr. சத்யஸ்ரீ பூமிநாதன் இயக்குநர், கிங்மேக்கர்ஸ் IAS அகாடமி, திரு.ஆதில் பெய்க் சிவில் சர்வீஸஸ் தேர்வு பயிற்சியாளர், கிங்மேக்கர்ஸ் IAS அகாடமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு மாணவர்களுக்கு ஊக்க உரையை ஆற்ற இருக்கிறார்கள்.

இந்நிலையில் அரசுத் தேர்வுகளுக்கு முதல் முறையாகத் தயாராகத் தொடங்கும் தேர்வர்கள் தனது முதல் 3 மாதங்களை எப்படித் திட்டமிட வேண்டும்? என்ற கேள்வியுடன் திரு. ஆதில் பெய்க்கை ( சிவில் சர்வீஸஸ் தேர்வு பயிற்சியாளர்) தொடர்புக்கொண்டு பேசினோம்.
நம்மிடம் பேசிய அவர், "அரசுத் தேர்வுகளுக்குத் தயாராக வேண்டும் என்று முடிவெடுத்து களம் இறங்கும் புதிய மாணவர்கள், தங்களது முதல் மூன்று மாதங்களைச் சரியான முறையில் திட்டமிட்டுப் பயன்படுத்துவது தேர்வின் வெற்றிக்கு மிக முக்கியமான தொடக்கமாக அமையும். எந்த ஒரு தேர்வுக்குத் தயாராவதற்கு முன்பும், அத்தேர்வின் அமைப்பைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
இதில் முதல்நிலைத் தேர்வில் பொது அறிவுத் தாள் மற்றும் திறனறித் தாள் என இரண்டு தாள்களும், முதன்மைத் தேர்வில் 7 தரவரிசைத் தாள்கள், 2 தகுதித் தாள்கள் என மொத்தம் 9 தாள்களும், அதைத் தொடர்ந்து 275 மதிப்பெண்களுக்கான நேர்காணலும் இடம்பெறுகின்றன. ஒவ்வொரு கட்டத்திலும் எத்தனை மதிப்பெண்கள் மற்றும் என்னென்ன தாள்கள் உள்ளன என்பதைத் தெளிவாக உணர்ந்து கொண்ட பிறகு, முதல்நிலை மற்றும் முதன்மைத் தேர்வுகளின் பாடத்திட்டங்களை எடுத்து படிக்க வேண்டும்.
உதாரணமாக, பாடத்திட்டத்தில் 'Federalism' என்ற வார்த்தை இருந்தால், அதற்கு என்ன பொருள் மற்றும் அதிலிருந்து என்னென்ன வினாக்கள் கேட்கப்படலாம் என்ற அடிப்படைப் புரிதலை வளர்த்துக் கொள்வது அவசியம்.
கோச்சிங் சென்டர்களுக்குச் செல்லாமல் சுயமாகப் படிக்கும் மாணவர்கள் குறிப்பாக பாலிட்டி (Polity), பொருளாதாரம் (Economy), வரலாறு (History), புவியியல் (Geography) ஆகிய 4 முக்கிய சமூக அறிவியல் பாடங்கள் மற்றும் திறனறித் தேர்வு ஆகிய 5 பகுதிகளிலும் தங்களின் அடிப்படை அறிவை மிக வலுவாக உருவாக்க வேண்டும்.

ஏனெனில், இந்தப் பாடங்களே முதல்நிலை மற்றும் முதன்மை ஆகிய இரண்டு தேர்வு நிலைகளுக்கும் மிக முக்கியமான தூண்களாகும். நேரடியாக புத்தகங்களை எடுத்துப் படிப்பதற்குப் பதிலாக, ஒரு தலைப்பைப் பற்றிய வீடியோ வகுப்பைப் பார்த்துவிட்டு, பின்பு அது தொடர்பான புத்தகங்களைப் படித்தால் புரிதல் எளிதாகவும் தெளிவாகவும் இருக்கும்.
இதற்காகத் தமிழக அரசின் 'நான் முதல்வன்' திட்டத்தின்கீழ் இயங்கும் அகில இந்தியக் குடிமைப் பணிகள் பயிற்சி மையத்தின் யூடியூப் தளத்தில் உள்ள இலவச அடிப்படை வகுப்புகள் புதிய மாணவர்களுக்குப் பெரிதும் உதவியாக இருக்கும்.
அரசுத் தேர்வுப் பயணம் என்பது படிப்பதற்கு ஒரு வருடமும், தேர்வு எழுத ஒரு வருடமும் எனக் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் வரை நீடிக்கக்கூடிய ஒரு நீண்ட பயிற்சி. இவ்வளவு நீண்ட காலத்தில் தினமும் பல மணிநேரம் சலிப்பின்றிப் படிக்க வேண்டுமெனில், 'நாம் ஏன் இந்திய ஆட்சிப் பணி (IAS) அல்லது காவல் பணி (IPS) அதிகாரியாக வேண்டும்?' என்பதற்கான வலுவான காரணம் தேர்வர்களுக்குள் இருக்க வேண்டும்.
பெற்றோர் அல்லது மற்றவர்கள் சொன்னார்கள் என்பதற்காக இல்லாமல், நமக்குள்ளிருந்து வரும் சுய ஊக்கமே இந்த நீண்ட பயணத்தில் நம்மைக் தொய்வில்லாமல் தொடர்ந்து படிக்க வைக்கும்" என்றார்.
ஆனந்த விகடன், King Makers IAS அகடாமி நிறுவனத்துடன் இணைந்து தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இது போன்ற இலவசப் பயிற்சி முகாமினைப் பல ஆண்டுகளாக நடத்தி வருவதன் மூலம், எண்ணற்ற போட்டித் தேர்வாளர்கள் பயனடைந்து வருகிறார்கள்.

இந்தப் பயிற்சி முகாமிற்கு முன்பதிவு செய்ய 044- 66802997 என்ற எண்ணிற்கு மிஸ்ட்கால் கொடுக்கவும். அப்படி இல்லையென்றால் இந்த முகாமில் கலந்துகொள்ள விரும்புகின்றவர்கள் கீழ்க்கண்ட லிங்கை க்ளிக் செய்து விண்ணப்பித்து பயன்பெறலாம்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)