"வெள்ளை அறிக்கை மக்களைத் திசை திருப்புவதற்கான நாடகம்" – வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு

Jun 17, 2026 - 12:32
0
"வெள்ளை அறிக்கை மக்களைத் திசை திருப்புவதற்கான நாடகம்" – வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு

பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசின் கடந்த ஐந்தாண்டு கால நிதி நிலவரம் குறித்த வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் மரிய வில்சன் வெளியிட்டுள்ளார்.

கடந்த தி.மு.க ஆட்சியில் முதலமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலினும், நிதி அமைச்சர்களாக இருந்த பழனிவேல் தியாகராஜன், தங்கம் தென்னரசு ஆகியோரும், இந்தியாவிலேயே நிதி மேலாண்மையில், தமிழ்நாடு மிகச் சிறந்து விளங்குவதாகவும், ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியில் முதலிடத்தில் இருப்பதாகவும் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

சுதந்திரத்திற்கு முன்பிருந்தே தமிழ்நாடு வளர்ச்சி அடைந்த மாநிலம். ஆனால், கடந்த ஐந்தாண்டு கால தி.முக அரசு, கடன் வாங்குவதிலும், தேவையற்ற ஆடம்பர செலவுகள் செய்வதிலும்தான் அதிகம் கவனம் செலுத்தியது.

கல்வி, சுகாதாரம், மெட்ரோ ரயில், மேம்பாலங்கள், நெடுஞ்சாலைகள் என உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த கடன் வாங்குவதில் தவறில்லை. ஆனால், கடன் வாங்கிய பணத்தை இலவச திட்டங்களுக்கும், வீண் விளம்பரங்களுக்கும்தான் தி.மு.க அரசு வாரி இறைத்தது. அது மட்டுமல்லாது, தி.மு.க ஆட்சியில் எங்கும் எதிலும் ஊழல் நிறைந்திருந்ததால் கடன் சுமையும் அதிகரித்துக் கொண்டே சென்றது.

வெள்ளை அறிக்கை  வெளியீடு
வெள்ளை அறிக்கை வெளியீடு

இதுபற்றி கடந்த ஐந்தாண்டுகளில் பலமுறை சட்டமன்றத்தில் நான் கேள்வி எழுப்பயபோது, ஏதேதோ புள்ளி விவரங்களை அமைச்சர்கள் தெரிவிப்பார்கள். உத்தரப்பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களையெல்லாம் உதாரணமாகக் கூறி சமாளித்து விடுவார்கள்.

தமிழக நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று சட்டமன்றத்தில் நான் வலியுறுத்தி இருக்கிறேன். அதை தி.மு.க அரசு ஒருபோதும் கண்டு கொள்ளவில்லை. இப்போது முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசு, பதவியேற்ற 37வது நாளில் நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டின் மொத்த கடன் ரூ. 13 லட்சத்து 18 ஆயிரம் கோடியைத் தாண்டியுள்ளது. கடந்த ஐந்து ஆண்டு தி.மு.க ஆட்சியில் மட்டும் சுமார் ரூ. 5 லட்சம் கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது. இப்போது தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகன் மீதும் ரூ. 1,28,934 கடன் சுமை உள்ளது.

நிதியமைச்சர் மரிய வில்சன் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில்  இடம் பெற்றுள்ள புள்ளி விவரங்கள் அனைத்தும், ஏற்கனவே எல்லோரும் அறிந்த ஒன்றுதான். தேர்தலின் போது அளித்த எந்த வாக்குறுதியையும் த.வெ.க. அரசு நிறைவேற்றவில்லை. 200 யூனிட் இலவச மின்சாரம், பயிர்க் கடன் தள்ளுபடி போன்ற சில வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றாமல் தந்திரமாக மக்களை த.வெ.க. அரசு ஏமாற்றி வருகிறது.

இது தமிழ்நாட்டு மக்களிடையே பெரும் அதிருப்தியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதிலிருந்து மக்களை திசை திருப்புவதற்காக வெள்ளை அறிக்கை நாடகத்தை த.வெ.க. அரசு அரங்கேற்றியுள்ளது என்பதில் சந்தேகம் இல்லை.

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

வெள்ளை அறிக்கை என்பது, வெறும் நாடகமாக மட்டும் இருந்துவிடக் கூடாது. வெறும் சொற்களில் அல்லாமல், செயலில் தமிழ்நாட்டின் நிதி நிலைமையை மேம்படுத்தி காட்ட வேண்டும். தமிழ்நாட்டின் நிதி நிலையை மேம்படுத்தவும், கடன் சுமையைக் குறைக்க என்னென்ன செய்யப் போகிறோம் என்பதற்கான செயல் திட்டத்தை த.வெ.க. அரசு வெளியிட வேண்டும்.

வரலாற்றில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ள வருவாய் பற்றாக்குறையைக் குறைக்கவும், தமிழ்நாட்டின் சொந்த வரி வருவாயை அதிகரிக்கவும் என்ன திட்டங்கள் வைத்திருக்கிறோம் என்பதை வரும் பட்ஜெட்டில் நிதியமைச்சர் தெளிவாக அறிவிக்க வேண்டும்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User