TN Assembly: "திமுகவிற்கு தைரியம் இல்லை; மிசாவைப் பார்த்த இயக்கத்தையே நாங்கள்.!"- உதயநிதி vs ஆதவ்|Live

Aug 21, 2026 - 11:30
0
TN Assembly: "திமுகவிற்கு தைரியம் இல்லை; மிசாவைப் பார்த்த இயக்கத்தையே நாங்கள்.!"- உதயநிதி vs ஆதவ்|Live

"ஜோசியக்காரர் சொன்னால் தான் அந்தக் கோப்புகளைத் திறந்து பார்ப்பீர்களா?"- உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின் "நேற்று முன்தினம் பேரவையில் பேசிய முதல்வர் 3 கோப்புகள் இருப்பதாகவும் அதை திறந்து காண்பிக்க வைத்திராதீர்கள் என்று எங்கள் அரசை குற்றம் சாட்டும் வகையில் பேசியிருந்தார். தயவு செய்து அந்தக் கோப்புகளைத் திறந்து பார்க்க வேண்டும். அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும். எதற்காக பயப்படுகிறீர்கள், காலம் தாழ்த்துகிறீர்கள். ஜோசியக்காரர் சொன்னால் தான் அந்தக் கோப்புகளைத் திறந்து பார்ப்பீர்களா? நல்ல நேரம் பார்த்துக்கொண்டிருக்கிறீர்களா?" என்று கேள்வி எழுப்பினார்.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

அதற்கு பதில் அளித்த ஆதவ் அர்ஜுனா, "திமுக மூத்த உறுப்பினர் ஒருவர் சொன்னார் நாங்கள் மிசாவையே பார்த்த இயக்கம் என்று... ஆனால் மிசாவையே பார்த்த திமுக இயக்கத்தை தனிப்பெரும் கட்சியாக எங்கள் தலைவர் வெற்றி பெற்று தவெக என்றால் என்னவென்று காண்பித்திருக்கிறோம். அதனால் எங்களுக்கு எந்த பயமும் கிடையாது. ஒவ்வொரு துறையிலும் நிச்சயமாக வெள்ளை அறிக்கை வெளியிட்டு நடவடிக்கை எடுப்போம் என்று எங்கள் முதல்வர் சொன்னார்.

கடந்த 5 ஆண்டுகளில் திமுக என்ன ரீல்ஸ் செய்தார்கள். என்ன பாட்டுப்பாடினார்கள். பாராளுமன்றத்திலே பதவிப்பிரமாணம் செய்தபோது பெரியாரை பற்றியோ, அண்ணாவை பற்றியோ பேசவில்லை. யாரை பற்றி பேசி பதவிப்பிரமாணம் செய்தார்கள் என்று மக்களுக்கு தெரியும். 25 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சியில் இருந்துள்ளீர்கள். பேரவை நிகழ்வை ஏன் நேரலை செய்யவில்லை; பேரவை நிகழ்வை நேரலை செய்ய திமுகவிற்கு தைரியம் இல்லை. ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டுமென்று தைரியமாக நேரலையை கொடுத்தவர் எங்கள் முதல்வர்" என்று ஆதங்கமாகப் பேசினார்.

"அதற்கு எங்களுடைய வாழ்த்துகள்.!"-  சபாநாயகரை பாராட்டிய உதயநிதி ஸ்டாலின் 

சட்டப்பேரவையில் பேசிய எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், "இந்த அவையை முடிந்த அளவுக்கு நீங்கள் (சபாநாயகர்) சிறப்பாக வழி நடத்தி செல்கிறீர்கள். எங்களுக்கும் கேள்வி கேட்பதற்கான வாய்ப்பையும் நீங்கள் தருகிறீர்கள். எங்களை விட அதிகமாக ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு கேள்வி கேட்க வாய்ப்பு தருகிறீர்கள். ஆனால் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் ஆதாரம் இல்லாமல் எங்கள் மீது குற்றச்சாட்டை வைக்கிறார்கள். அப்படி அவர்கள் பேசும்போது அவைக்குறிப்பில் இருந்து அதை நீங்கள் நீக்கவும் செய்திருக்கிறீர்கள்.

JCD Prabhakar
சபாநாயகர் JCD பிரபாகர்

வரலாற்றிலேயே எதிர்கட்சி உறுப்பினர்கள் பேசியதை விட அதிகமாக ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் பேசியதை நீங்கள் தான் அவைக்குறிப்பில் இருந்து முதன்முதலாக நீக்கி இருக்கிறீர்கள். அதற்கு எங்களுடைய வாழ்த்துகள். அவை நிகழ்ச்சி எல்லாம் நேரலையில் ஒளிபரப்பப்படுகிறது. கேள்விகள் கேட்டால் நாங்களே ஆச்சரியப்படக்கூடிய அளவிற்கு பதில் சொல்கிறார்கள். இப்போது பாட்டெல்லாம் பாடுகிறார்கள். எங்களுக்கே சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறோமா என்று சந்தேகப்படும் அளவிற்கு பாட்டு நிகழ்ச்சிகள் எல்லாம் நடந்துகொண்டிருக்கிறது. இதை நீங்கள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கினாலும் சமூக வலைதளங்களில் ரீல்ஸாக ஷேர் செய்யப்படுகிறது. உங்கள் பார்வைக்கு மீண்டும் இதைக் கொண்டு வருகிறேன்" என்று பேசியிருக்கிறார்.

"மீனவர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்"-  எடப்பாடி பழனிசாமி 

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (ஆகஸ்ட் 21) நிதிநிலை அறிக்கை, நீதி, சிறை, சட்டம், எரிசக்தி அறநிலையத்துறைக்கான மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சட்டப்பேரவையில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, " எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் கழிவுகள் கலப்பதால் மீன்கள் கொத்து கொத்தாகச் செத்து மிதக்கிறது. கழிவுகள் ஆற்றில் கலப்பதால், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. அரசு உடனடியாக தலையிட்டு மீனவர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்" என்று பேசியிருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User