பதவியேற்ற 25 நாளில் பதவியை ராஜினாமா செய்த அமைச்சர்! - எதிர்ப்புக்கு பணிந்த டி.கே.சிவகுமார்!

Aug 29, 2026 - 12:31
0
பதவியேற்ற 25 நாளில் பதவியை ராஜினாமா செய்த அமைச்சர்! - எதிர்ப்புக்கு பணிந்த டி.கே.சிவகுமார்!

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு மட்டுமின்றி சொந்தக்கட்சியினரின் நெருக்கடியால் பொறுப்பேற்ற 25 நாட்களில் அமைச்சர் நாகேந்திரா, பதவியை ராஜினாமா செய்த சம்பவம், கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டி.கே.சிவகுமார்
டி.கே.சிவகுமார்

கர்நாடக முதல்வராக டி.கே.சிவகுமார் பொறுப்பேற்றது முதல் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சம்பவங்கள் நடந்து வருகின்றன. காவிரி நீர் பங்கீட்டிலும், மேகதாட்டு அணை விவகாரத்திலும் தமிழ்நாட்டுக்கு எதிராக செயல்படுவது ஒருபக்கமென்றால், சொந்தக் கட்சியினராலும் எதிர்க்கட்சியின்ராலும் கடுமையாக எதிர்க்கப்பட்டு வருகிறார்.

இராண்டரை ஆண்டு பதவி காலத்தை முடித்து சித்தராமையா ராஜினாமா செய்த பின்பு, 13 அமைச்சர்களுடன் முதல்வராக பொறுப்பேற்ற டி.கே.சிவகுமார், இரண்டு மாதஙகளுக்குப்பின் அமைச்சரவையை விரிவுபடுத்தியபோது முக்கியமானவர்களுக்கும் மக்களிடம் செல்வாக்கு உள்ளவர்களுக்கும், மூத்தவர்களுக்கும், பெண்களுக்கும் வாய்ப்பு வழங்கவில்லை என்று குற்றம்சாட்டப்பட்டது. இதை எதிர்த்து மாநிலம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர், இரண்டு எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்தனர்.

ராஜினாமா செய்த நாகேந்திரா

இந்நிலையில் ஊழல் குற்றச்சாட்டில் சிறை சென்று ஜாமீனில் வந்துள்ள பெல்லாரி புறநகர் எம்.எல்.ஏ நாகேந்திராவுக்கு மீண்டும் அமைச்சர் பதவி அளிக்கப்பட்டதை பாஜக உள்ளிட்ட எதிர்கட்சியினரும், காங்கிரஸ் கட்சியினரும் கடுமையாக எதிர்த்தார்கள்.

கடந்த 2024 ஆம் ஆண்டு 'மகரிஷி வால்மீகி பழங்குடியினர் மேம்பாட்டுக் கழக'த்தில் போலியான வங்கிக் கணக்குகளுக்கு பணம் மாற்றப்பட்டதில் ரூ 89 கோடி அளவுக்கு நடந்த ஊழல் முறைகேட்டை விசாரித்த சி.பி.ஐ, அப்போதைய பட்டியல் மற்றும் பழங்குடியினர் துறை அமைச்சராக இருந்த நாகேந்திரா மீது வழக்கு பதிவு செய்தது. அதன் காரணமாக சித்தராமையா அமைச்சரவையிலிருந்து நாகேந்திரா நீக்கப்பட்டார்.

பின்பு கைது செய்யப்பட்டு 3 மாத சிறைவாசத்துக்கு பின்பு ஜாமீனில் வந்தவரை, தற்போது விரிவுபடுத்தப்பட்ட அமைச்சரவையில் திட்டமிடல் மற்றும் புள்ளியியல் துறை அமைச்சராக்கினார் முதல்வர் டி.கே.சிவகுமார்.

தலைமைக்கு பெரிய அளவில் கவனித்தவர்களூக்கு அமைச்சரவையில் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது, அதிலும் ஊழல் வழக்கு நிலுவையில் உள்ள நாகேந்திராவுக்கு மீண்டும் அமைச்சர் பதவியா? என்று கட்சிக்குள் கலகம் வெடித்தது.

கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார் , சித்தராமையாவுடன்

எதிர்க்கட்சியான பா.ஜ.க நாகேந்திராவை அமைச்சரவையிலிருந்து நீக்காவிட்டால் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்துவோம் என்றும் அறிவித்தது.

இதை முதல்வர் டி.கே.சிவகுமாரும், அமைச்சர் நாகேந்திராவும் கண்டுகொள்ளாமல் இருந்த நிலையில்தான், இந்த விவகாரம் மக்கள் மத்தியில் காங்கிரஸ் கட்சிக்கு மோசமான இமேஜை ஏற்படுத்தி வருவதாக டெல்லி தலைமைக்கு தகவல் சென்றது. நீண்ட ஆலோசனைக்குப்பின் நாகேந்திரா ராஜினாம செய்ய வலியுறுத்தப்பட்டார். முதலில் மறுத்த நாகேந்திரா பின்பு சம்மதித்த நிலையில் நேற்று ராஜினாமா செய்துள்ளார்.

பின்பு செய்தியாளர்களிடம் பேசிய நாகேந்திரா, "கட்சிக்குத் தேவையில்லாத சங்கடங்கள் உருவாகக் கூடாது என்றுதான் நானே விருப்பப்பட்டு ராஜினாமா செய்கிறேன். பழஙகுடியினத்தைச் சேர்ந்த நான் அரசியலில் உயர்வதை விரும்பாத சிலர் என்னை குறி வைத்துள்ளனர். வால்மீகி பழங்குடியினர் மேமாட்டு வாரியத்தில் நடந்ததாக சொல்லப்படும் முறைகேட்டுக்கும் எனக்கும் எந்த தொடர்புமில்லை. வங்கிகள் சம்பந்தப்பட்ட பரிவர்த்தனைக்கு நான் எப்படி பொறுப்பாவேன். தலித் சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதாலேயே என் மீது பழி போடப்படுகிறது" என்று அழுதபடியே பேசினார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User