சிஐஏ-வுக்கு விழுந்த முதல் அடி! | உளவன் 14

Aug 06, 2026 - 12:30
0
சிஐஏ-வுக்கு விழுந்த முதல் அடி! | உளவன் 14

11.11.1950. ஏதென்ஸ். பிற்பகல்.

தலைநகரிலிருந்து 12 மைல் தொலைவிலுள்ள இராணுவ விமான தளம் கமுக்கமாக இயங்கியது. எந்த அடையாளமும் இல்லாத கருப்பு வண்ணமடிக்கப்பட்ட சி-47 (Douglas C-47 Skytrain) விமானம் மெதுவாகப் புறப்பட்டது. விமானத்தை இயக்க, போலந்து விமானப் படையின் முன்னாள் விமானிகளை CIA ஒப்பந்தம் செய்திருந்தது. 

கிழக்கு ஐரோப்பாவில் சோவியத்தின் ஆதிக்கத்தை அசைத்துப் பார்க்க போகிறோம். விமானத்தில் இருந்தவர்களுக்குள் ஒருவித பதட்டம். பதைபதைப்பு. யாரும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. அல்பேனியாவை ஒட்டிய கரபுருன் தீபகற்பகம் (Karaburun Peninsula) அருகே விமானம் பறந்தது. தாழ்வாக இறங்கியதும் விமானத்தில் இருந்த ஒன்பது கெரில்லா வீரர்களும் தயாராகினர். ஒவ்வொருவராக சுமைகளோடு வான்குடையில் குதித்தனர். தரையிறங்க இறங்க அவர்களை நோக்கி துப்பாக்கித் தோட்டாக்கள் சீறின.

அவர்களை எதிர்பார்த்து காத்திருந்தது போல, துப்பாக்கிச் சூடு சத்தம் அந்தப் பகுதியில் படபடத்தது. காத்திருந்தது போல அல்ல. உண்மையில் எதிர்பார்த்து காத்திருந்தனர் சிகுரிமி (Sigurimi) வீரர்கள். அல்பேனிய அரசின் பாதுகாப்புத்துறை ரகசிய காவலர்களை சிகுரிமி என்றழைக்கின்றனர். 

வான்குடைகள் தரை இறங்குவதற்குள் மூன்று கெரில்லாக்களை, சிகுரிமி வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். மீதமுள்ளவர்களை இறங்கியதும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஏழு மூட்டைகளைக் கைப்பற்றினர். இருவரை மட்டும் வைத்துக் கொண்டு நான்கு பேரையும் சித்ரவதை முகாமுக்கு அனுப்பினர். 

இரண்டாம் உலகப் போருக்கு பின், சோவியத் ரஷ்யா மீது மேற்குலகின் கண்கள் திரும்பின. ரஷ்யாவின் பலத்தை அசைத்துப் பார்க்க அமெரிக்காவுக்கும் பிரிட்டனுக்கும் விருப்பம். ரஷ்ய வலைப்பின்னலில் உள்ள கிழக்கு ஐரோப்பிய நாடுகளை பட்டியலிட்டனர். அதில் பலஹீனமான கன்னியாக தெரிந்தது சிறிய நாடான அல்பேனியா. நட்பு நாடான கிரீஸுக்கு அருகில் உள்ளது; மால்டா எல்லையிலிருந்து கடல்-வான் வழியாக எளிதாக தாக்கும் இலக்கு.

சோசலிச தொகுப்பில் உடைப்பை ஏற்படுத்துவதே பனிப்போரின் முகவுரை. அதன் முதல் அத்தியாயம் அல்பேனியாவில் எழுதப்பட்டது. ஆட்சிக் கவிழ்ப்புக்கு பேர் போனது சிஐஏ. அமெரிக்காவின் ஜனநாயக ஏற்றுமதி விளையாட்டு முதன்முதலில் தொடங்கியது அல்பேனியாவில்தான். 

அமைதியாக இருந்த அல்பேனிய தேசத்தில் உள்நாட்டுக் கிளர்ச்சியைத் தூண்டி விட வேண்டும். அதிபர் அன்வர் ஹோஜா ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும். இதுதான் அமெரிக்க - பிரிட்டனின் கூட்டுத் திட்டம். இந்தத் திட்டத்திற்கு Operation Fiend என்று பெயர் வைத்தனர். பிரிட்டன் சார்பில், MI6 வாஷிங்டன் பிரிவு தலைவர் கிம் ஃபில்பி இந்த ஆபரேஷனை கண்காணித்தார்.

இரண்டு திட்டங்களை செயல்படுத்தினர். ஒன்று மறைமுக திட்டம். கிரீஸின் சலோனிகா கடற்கரைப் பகுதியில் வானொலி நிலையம் அமைத்து அல்பேனியா, பல்கேரியா, யூகேஸ்லேவியா உள்ளிட்ட பகுதிகளில் கம்யூனிஸத்திற்கு எதிரான தகவல்களை ஒளிபரப்புவது. இரண்டாவது நேரடி திட்டம். அதாவது கூலிப் படையைக் களத்தில் இறக்குவது. 

இரண்டாவது திட்டத்தின்படி, கம்யூனிஸ ஆட்சிக்கு எதிரான இளைஞர்களை வளைத்தனர். அந்த இளைஞர்களைச் செல்லமாக ‘பிக்ஸீ’ (Pixie) என அழைத்தனர். ஆங்கில நாட்டார் கதைகளில் வரும் குறும்புக்கார தேவதைகளுக்கு பிக்ஸீ எனப் பெயர். குறும்புக்கார தேவதைகளை இரண்டு குழுக்களாக பிரித்தனர். மால்டாவிலும் ஜெர்மனியிலும் இரண்டு குழுவினருக்கும் தனித்தனியாக பயிற்சி அளிக்கப்பட்டது.

முதலில், முழு உடற்தகுதிக்கு தேவையான பயிற்சிகள் அளிக்கப்பட்டன. உடலை வருத்தும் கடும் பயிற்சி. அடுத்ததாக அடிதடிக்கு தேவையான சண்டைப் பயிற்சி. ஆயுதங்களைக் கையாளும் ராணுவப் பயிற்சி. உளவு தகவல்களை பறிமாறுவதற்கான தகவல் தொடர்பு பயிற்சி. வான்குடை ஏற்ற இறக்க பயிற்சி என தரமான கெரில்லாக்களாக அவர்களை உருமாற்றினர். குறும்புக்கார தேவதைகளை குரூர குண்டர்களாக மாற்றினர்.

அதிகாலை தொடங்கி மாலை வரை பயிற்சி நீடித்தது. ஏறக்குறைய இரண்டு வாரங்களுக்கும் மேலாக தீவிர பயிற்றுவிப்புக்குப் பின் உளவியல் பயிற்சி. அல்பேனிய கம்யூனிஸ அரசுக்கு எதிராக மக்களை திரட்டும் பாடங்கள் கற்றுக் கொடுக்கப்பட்டன. கூடவே, அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்ற நம்பிக்கையும் உறுதிமொழியும் அளிக்கப்பட்டது.

கடற்காற்று சிலுசிலுக்க மெதுவாக இறங்கியது வான்குடை. தேச அரசியலை மாற்றப் போகிறோம் என்ற நம்பிக்கை ஒரு பக்கம். இரண்டு பெரிய வல்லரசுகள் பின்னணியில் இருக்கின்றன என்ற தைரியம் மறுபக்கம். வான்குடையிலிருந்து தரை இறங்கியதும் உள்ளூர் கிளர்ச்சிக் குழுக்களுடன் இணைந்து கலகப் பணியைத் தொடங்க வேண்டும். திடீரென உத்வேகம் பெற்றவர்களாக ஒன்பது கெரில்லா வீரர்களும் பாதுக்காப்பான தரையிறக்கத்தை எதிர்நோக்கினர். ஆனால், எல்லாமே தலைகீழாக மாறியது. சிகுரிமி ரகசிய போலீஸின் துப்பாக்கித் தோட்டாக்கள் தங்களை வரவேற்கும் என அவர்கள் ஒருபோதும் எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை.

இந்த பிக்ஸீக்களை சிகுரிமி வீரர்கள் எதிர்பார்த்திருந்தது என்னவோ உண்மைதான். Operation Fiend தயாரானதுமே சிவப்பு ட்ரோஜன் குதிரை ரஷ்யாவுக்கு தகவல் அனுப்பி விட்டது. ரஷ்ய அதிகாரிகள் அல்பேனிய சிகுரிமியை எச்சரித்து உஷார்படுத்தினர். ஆனால் யார் வருகிறார்கள், என்ன தயாரிப்போடு வருகிறார்கள் என கட்டுரை வரைந்து உளவு தகவலை அனுப்ப முடியாதல்லவா! பிடிபட்ட இரண்டு வீரர்களிடமும் நடத்திய விசாரணையில் திட்டத்தின் முழுப் பரிமாணமும் தெரிய வந்தது. சிகுரிமி வீரர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். 

“அந்தப் பைகளை எடுங்கடா…” சொந்த நாட்டுக்காரன்தானே இருவரும். உரிமையோடு அதட்டினர். ஜெர்மனியில் தயாரிக்கப்பட்ட சிறிய ரக இயந்திர துப்பாக்கிகள் பளபளத்தன. நவீன வயர்லெஸ் கருவிகள், உயிர் காக்கும் மருத்துகள், நூற்றுக் கணக்கான தங்க நாணயங்கள், உடனடி செலவுக்கு அல்பேனிய பணம். ஆட்சிக்கு எதிரான துண்டுப் பிரசுரங்கள். இவ்வளவும் மூட்டைகளில் இருந்தன. கொஞ்சம் சயனைடும் இருந்தது. 

“இது எதுக்குப்பா…?”

“உங்களிடம் சிக்கிக் கொண்டால், சாப்பிட்டு உயிர் துறக்க.” கண் முழி பிதுங்க இருவரும் பதிலளித்தனர். சிகுரிமி வீரர்கள் சிரித்தனர். துப்பாக்கியால் சுடாமல் இருந்திருக்கலாமோ…

பிடிபட்ட இருவரையும் என்ன செய்யலாம்? அல்பேனிய உளவுத்துறை ஆலோசித்தது. கொஞ்சம் விளையாடிப் பார்க்கலாம். ஒரு விளையாட்டுக்கு அவர்கள் தயாராகினர். ‘வானொலி விளையாட்டு (The Radio Game)’. அதாவது Playback Operation. பிடிப்பட்ட ஜெர்மன் உளவாளிகள் மூலம் போலி தகவல்களை அனுப்பி ஜெர்மனியின் அப்வேர் உளவுத்துறைக்கு பிரிட்டன் போக்கு காட்டியதல்லவா… அதே விளையாட்டுத்தான்.

பிடிபட்ட இரண்டு கெரில்லாக்களும் வயர்லெஸ் கருவிகளில் எஜமானர்களை தொடர்பு கொண்டனர். பாதுகாப்பாக தரையிறங்கி விட்டோம். இரண்டு பக்கமும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். இப்படியாக, நாட்டு நடப்புகளையும் கிளர்ச்சியின் தடங்களையும் தினந்தோறும் அப்டேட் செய்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட தகவல்களை பறிமாறிக் கொண்டனர். அனைத்தையும் எஜமானர்கள் நம்பினர். கம்யூனிஸ்ட் கோட்டையில் விரிசலை மெல்ல மெல்ல ஏற்படுத்தி வருவதாக அமெரிக்க - பிரிட்டன் உளவுத்துறை அதிகாரிகள் மிதப்பில் திரிந்தனர்.

அடுத்தடுத்த குழுவினர் பத்திரமாக அல்பேனியாவில் தரையிறங்கினர். இறங்கிய பிக்ஸீக்களை அலேக்கா தூக்கியது சிகுரிமி ரகசிய போலீஸ். குறும்புக்கார தேவதைகள் குண்டடி பட்டு இருந்தனர். அல்லது சித்ரவதை முகாமில் உயிரை விட்டனர். மேற்குலகின் ஆயுதங்களும் பணமும் கம்யூனிஸ மண்ணில் மழையாகப் பொழிந்தது. சிகுரிமிக்கு உற்சாகம் தரும் பொழுதுபோக்காக இந்த விளையாட்டு மாறியது.

அல்பேனியாவில் ஆட்சி மாற்றத்துக்கான அறிகுறியே தெரியவில்லை. அமெரிக்க - பிரிட்டன் உளவு அதிகாரிகள் ஏமாற்றமடைந்தனர். கெரில்லாக்களுக்கு பயிற்சி போதாது என தங்களுக்குள் சமாதானம் சொல்லிக் கொண்டனர். “கம்யூனிஸ எதிர்ப்புணர்வு அல்பேனியாவில் அதிகம். சரியான தலைமையின் கீழ் இன்னொரு குழுவை அனுப்பினால் அன்வர் ஹோஜாவை தூக்கி எறியலாம்.” அதீத நம்பிக்கையில் கெரில்லாக்களை அனுப்புவதைத் தொடர்ந்தனர்.

1953-ம் ஆண்டு அக்டோபரில்தான் அமெரிக்காவும் பிரிட்டனும் விழித்துக் கொண்டன. ஆயுதங்களை அனுப்பச் சொல்லி கெரில்லாக்கள் ஏதென்ஸ் தகவல் தளத்துக்கு ஒருமுறை செய்தி அனுப்பினர். வழக்கம் போல ஆயுதங்களோடு அல்பேனியாவை நோக்கி விமானம் புறப்பட்டது. விமானம் தரையிறங்குவதற்குள் சிகுரிமி வீரர்கள் தாக்குதல் நடத்தினர். சுதாரித்த விமானி, விமானத்தை தரையிறக்காமல் தப்பித்தார். இதன் பின்னர் அமெரிக்காவும் பிரிட்டனும் கெரில்லாக்களை அனுப்பும் திட்டத்தை கைவிட்டனர்.

ஏறக்குறைய நான்காண்டுகள் முட்டி மோதிப் பார்த்தனர். கெரில்லாக்கள் மூலம் அல்பேனிய அரசைக் கவிழ்க்கும் முயற்சி எடுபடவில்லை. அதனைத் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் உளவியல் போர். வானொலி ஒளிபரப்பு சேவை, உணவுப் பொருட்களை உதவியாக வழங்குதல் என திரைமறைவு வேலையில் இறங்கினர். எல்லா தற்குறித் தனங்களையும் திறமையாகக் கையாண்டு முறியடித்தது அன்வர் ஹோஜா அரசு. 

பத்தாண்டு கால சிஐஏ-வின் முயற்சி தோல்வியில் முடிந்தது. வேறு வழியில்லாமல் இறுதியில் அல்பேனியாவை கைகழுவியது சிஐஏ. அல்பேனிய கம்யூனிஸ அரசைப் பாதுகாத்து சோவியத்தின் கோட்டையைக் கட்டிக்காக, அனைத்தையும் வெற்றிகரமாகக் கையாள ரஷ்யாவுக்கு உதவியது சிவப்பு ட்ரோஜன் குதிரைதான்.

அல்பேனிய ஆட்சிக் கவிழ்ப்பு தோல்வியிலிருந்து சிஐஏ பாடம் படித்தது. முதல் முயற்சி தோல்வியில் முடிந்தாலும், அடுத்தடுத்த துரோகச் செயல்களில் வெற்றிவாகை சூடியது. ஈரான், குவாதமாலாவில் அதிரடியாக ஆட்சி மாற்றம் நிகழ்ந்தேறியது. இடையில் கியூபாவில் மட்டும் சிஐஏ-வுக்கு பலத்த அடி. கியூப அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ கூலிப்படையினரை தெறிக்க விட்டார்.

மீண்டும் களத்தில் இறங்கியது சிஐஏ. காங்கோ, லாவோஸ், கம்போடியா, நிகரகுவா என சிஐஏ-வின் ஆட்சிக் கவிழ்ப்பு பட்டியல் நீளுகிறது. அந்தளவுக்கு கெட்ட ஆட்டம் போட்டது. அந்த ஆட்டம் இப்போதும் உலகின் ஏதோ ஒரு மூளையில் தொடர்கிறது. ‘ஜனநாயகத்தை நிலைநாட்டுவது’ என்ற பெயரில் அமெரிக்காவுக்கு எதிரான அரசைக் கவிழ்க்க சிஐஏ உளவாளிகள் தயாராக இருக்கின்றனர்.!

(தொடரும்)

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User