கடலூர் மாவட்டம், திருத்துறையூர் சிஷ்டகுருநாதீஸ்வரர் கோயில்: நல்ல குரு கிடைக்க வழிபட வேண்டிய தலம்!

Jul 23, 2026 - 08:00
0
கடலூர் மாவட்டம், திருத்துறையூர் சிஷ்டகுருநாதீஸ்வரர் கோயில்: நல்ல குரு கிடைக்க வழிபட வேண்டிய தலம்!

சம்சார சாகரம் என்று ஞானிகளால் சொல்லப்படும் பாடப்படும் இந்தப் பிறவிப் பிணியைத் தீர்க்க நமக்கு வெறும் பக்தி மட்டும்போதாது, தவமும் தேவை.

நல்வினை தீவினை ஆகிய இரு வினைகளில் இருந்தும் விலகி அந்தப் பரம்பொருளையே நினைத்து வாழ வழிகாட்டும் ஒரு குருநாதர் வேண்டும். நல்ல குரு அமைந்துவிட்டால் வாழ்க்கை அர்த்தப்பட்டுவிடும்.

வாழ்க்கையை குருவுக்கு முன் குருவுக்குப் பின் என்று பிரித்துவிடும் அளவுக்கு மாற்றம் உண்டாகும். அப்படிப்பட்ட சத்குருநாதன் ஒவ்வொருவருக்கும் அமைய வேண்டும். இதுவரை அப்படி ஒரு குரு அமையவில்லை என்று கவலைப்படுகிறீர்களா... உடனடியாக இத்தலம் சென்று தரிசனம் செய்துவாருங்கள். மனப்பக்குவம் ஏற்படும். நல்ல குருவும் உங்களைத் தேடிவருவார்.

திருத்துறையூர் சிஷ்டகுருநாதீஸ்வரர்
திருத்துறையூர் சிஷ்டகுருநாதீஸ்வரர்

ஆம், கடலூர் மாவட்டம், பண்ருட்டிக்கு மேற்கு-வடமேற்காக, சுமார் 9 கி.மீ தொலைவில் உள்ளது திருத்துறையூர் தலம். அதாவது பண்ருட்டி- புதுப்பேட்டை- அரசூர் சாலையில் சென்று, தொடர்ந்து கரும்பூர் சாலையில் திரும்பி சிறிது தூரம் சென்றால், திருத்துறையூரை அடையலாம்.

திருத்தளூர் எனும் பெயரே தற்போது புழக்கத்தில் உள்ளது. இங்குதான் பாஸ்கர க்ஷேத்திரம், ஞான சக்தி பீடம் என்றும் வழங்கப்படும் திருத்துறையூர் சிஷ்டகுருநாதீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. அன்னைக்கு சிவலோகநாயகி என்பது திருநாமம்.

சுந்தரருக்கு, அவர் விரும்பியபடி தவநெறி போதனையே வரமாகக் கிடைத்த தலம் இது. மேற்கு பார்த்த கோயில். விசாலமான பிராகாரம். அருள்மிகு பக்தவத்சல பெருமாள், தேவியருடன் அருளும் முருகன், பாலமுருகன், சூரிய லிங்கம், நடராஜ பெருமான், சூரிய தேவன், நவகிரகங்கள், பைரவர், நால்வர் பெருமக்கள் ஆகியோரையும் இத்தலத்தில் தரிசிக்கலாம்.

கருவறையில் எழிலுற காட்சி தருகிறார் சிஷ்டகுருநாதேஸ்வரர். வட்ட வடிவ ஆவுடையார் கொண்ட கம்பீரமான சிவலிங்கத் திருமேனி. துறையூர்நாதர், தவநெறி ஆளுடையார் என்றும் இவருக்குப் பெயர் உண்டு.

இவரை வணங்கி வழிபட்டுவிட்டு கருவறையை வலம் வந்தால், கோஷ்ட மூர்த்தங்களாக துர்கை, பிரம்மா, லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி, விநாயகர் ஆகியோரை தரிசிக்கலாம். இந்தப் பிள்ளையார்... இறைவனுக்கும் சுந்தரருக்கும் நடைபெற்ற அருள் விளையாடலில், சாட்சித் திருக்கோலம் கொண்ட சாட்சி விநாயகராக அருள்கிறார்.

திருத்துறையூர் சிவலோகநாயகி
திருத்துறையூர் சிவலோகநாயகி

மூலவர் முன்மண்டபம் தாண்டி, உள் வாயில் வழியே சென்றால் அம்பாள் சந்நிதியை அடையலாம். வடக்குநோக்கி நின்ற கோலத்தில் அருள்கிறாள் அன்னை சிவலோகநாயகி.

நாரதர், வசிஷ்டர், அகத்தியர் போன்ற மகாமுனிவர்களும், பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான பீமனும் திருத்துறையூரில் வழிபட்டதாக தலபுராணம் சொல்கிறது.

இது சூரியத் தலம் என்பதால் ஆண்டுதோறும் சித்திரை மாதம் 5 முதல் 10-ஆம் தேதி வரை, சூரியக் கதிர்கள் சுவாமி மற்றும் அம்பாள் சந்நிதிகளில் வந்து பணிகின்றன. இந்த ஊர் தீர்த்தமும் சூரிய தீர்த்தம்தான்.

சூரியனுடைய அருளை வேண்டுவோரும், தத்தமது பெயர்களில் சூரியனின் பெயர் அமையப் பெற்றவர்களும், சிம்மராசி, லக்னக் காரர்களும் 1-ம் எண் ஆதிக்கம் பெற்ற அன்பர்களும் இங்கே வந்து வழிபட்டால், அனைத்து நன்மைகளையும் பெறுவார்கள் என்கின்றன புராணங்கள்.

மட்டுமன்றி, இவ்வூர் சுந்தரருக்கு தவநெறி போதனை வழங்கிட இறைவனே குருவாக அமர்ந்த தலம் என்பதால் இங்கே வழிபடுவோருக்கு குருவருள் பரிபூரணமாகக் கிடைக்கும்.

சந்தானக் குரவர்களில் ஒருவரான அருள்நந்தி சிவாசார்யர் அவதரித்ததும் இந்தத் தலத்தில்தான். இவர் இயற்றிய சிவஞான சித்தியார், இருபா இருபது ஆகிய நூல்கள் சைவ சாத்திரங்கள் எனப்படும் 14 நூல்களில் அடங்கும். மகிமைபெற்ற அருள்நந்தி சிவாசார்யரின் முக்தி தலமும் இங்குள்ளது.

சுந்தரர்

இப்படி சிவனருளோடு சூரியபலமும் குருபலமும் ஒருங்கே கிடைக்கும் அற்புதமான சிவத்தலம் இது எனலாம். ஞாயிற்றுக் கிழமைகளில் குடும்பத்துடன் சென்று சிஷ்டகுருநாதேஸ்வரருக்கு வில்வத்தால் அர்ச்சனை செய்து வணங்குங்கள்.

அம்பாள் சிவலோகநாயகியைத் தரிசித்து நெய்விளக்கேற்றி வழிபடுங்கள். கூடவே சூரியலிங்கத்தையும் தரிசித்து வாருங்கள்; சூரியதேவனின் அனுக்கிரகம் பரிபூரணமாகக் கிடைக்கும்; சிவனருளால் உங்கள் குடும்பம் தழைக்கும்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User