கரூர்: லாரி மீது கார் மோதி விபத்து; 8 மாத கர்ப்பிணிப் பெண் உட்பட 3 பேர் பலியான சோகம்

Jun 10, 2026 - 10:01
0
கரூர்: லாரி மீது கார் மோதி விபத்து; 8 மாத கர்ப்பிணிப் பெண் உட்பட 3 பேர் பலியான சோகம்

உசிலம்பட்டியைச் சேர்ந்த அரவிந்த், பெங்களூரில் முறுக்கு தயாரித்து விற்பனை செய்யும் தொழிற்சாலை ஒன்றை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், அவர் தனது சொந்த ஊரான உசிலம்பட்டி நோக்கி காரில் குடும்பத்துடன் திரும்பிக் கொண்டிருந்தார். அப்பொழுது, கரூர் மாவட்டம், ஈசநத்தம் அருகே உள்ள திண்டுக்கல் நெடுஞ்சாலையில், சாலையைக் கடப்பதற்காக பதிவு எண் இல்லாத இருசக்கர வாகனம் ஒன்று திடீரென சாலையைக் கடந்துள்ளது.

ஈசநத்தம் பிரிவு சாலையில் எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க, காரை ஓட்டி வந்த ஓட்டுநர் இடதுபுறமாக காரைத் திருப்பியுள்ளார். இதில், எதிர்பாராதவிதமாக, கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் நின்றுகொண்டிருந்த அசோக் லேலண்ட் லாரியின் பின்புறத்தில் அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது.

accident
accident

இந்தக் கோர விபத்தில் காரின் முன்பகுதி லாரியின் அடியில் சிக்கிச் சிதைந்தது. இதில், காரில் பயணித்த அரவிந்த் (வயது: 30), அவரது 8 மாத கர்ப்பிணி மனைவி ஜனனி (வயது: 27) மற்றும் காரின் ஓட்டுநர் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கிப் பரிதாபமாக உயிரிழந்தனர்.

காரில் இருந்த 3 வயது பெண் குழந்தை துவிதா மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த பாண்டித்துரை ஆகிய இருவர் விபத்திலிருந்து மீட்கப்பட்டு, அரவக்குறிச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்துத் தகவலறிந்த அரவக்குறிச்சி காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து, உயிரிழந்த 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்து அரவக்குறிச்சி காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கரூர் - திண்டுக்கல் நெடுஞ்சாலையில் சாலையோரமாக நிறுத்துவதற்கு என வாகனங்களுக்கு சேவைப் பாதைகள் அமைக்கப்பட்டுள்ள இடங்களைத் தவிர்த்து மற்ற இடங்களில் லாரிகளை ஓரமாக நிறுத்துவதால் இது போன்ற விபத்துக்கள் நடப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

accident
accident

நெடுஞ்சாலை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் அனுமதிக்கப்பட்ட இடங்களைத் தவிர நெடுஞ்சாலைகளில் சாலை ஓரமாக நிறுத்தும் நான்கு சக்கர கனரக வாகனங்களை ஒழுங்குபடுத்த வேண்டும் என்பது பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது.

அதேபோல், இந்த பகுதியில் இப்படி ஏற்படும் விபத்துகளையும், உயிர்பலிகளையும் தடுக்க மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதிகாலை நேரத்தில் கார் விபத்தில் மூன்று பேர் பலியான சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User