வங்கிகளிலிருந்து திருடுபோகும் தகவல்கள்... மக்களின் நம்பிக்கைக்கு என்ன பதில்?
ஹலோ வாசகர்களே..!
எல்லோருக்கும் வங்கிக் கணக்கு, பண மதிப்பிழப்பு, ஆதார் இணைப்பு என வேறு வேறு திட்டங்கள் மூலம் மக்களின் பணத்தை வலுகட்டாயமாக வங்கிகளுக்குக் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது அரசு. கூடவே வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்களும் வங்கியில் குவிந்திருக்கின்றன. தங்கள் பணத்தைப் போலவே, தங்களைப் பற்றிய தகவல்களும் வங்கியில் பாதுகாப்பாக இருக்கும் என்று மக்கள் நம்புகிறார்கள். அந்த நம்பிக்கை பொய்த்துப் போயிருக்கிறது என்பதுதான் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ வாடிக்கையாளர் தகவல்கள் ஹேக் செய்யப்பட்டு, டார்க் வெப்பில் வெளியாகியுள்ளன. சுமார் 3.75 லட்சம் பதிவுகள் வெளியானதாகத் தகவல் வந்த நிலையில், 3,897 வாடிக்கையாளர்களின் பெயர், கைப்பேசி எண், பிறந்த தேதி, மின்னஞ்சல், வீட்டு முகவரி உள்ளிட்ட தகவல்கள் கசிந்திருப்பதை முதற்கட்டமாக உறுதி செய்திருக்கிறது வங்கித் தரப்பு. ஆனால், இந்தக் கணக்குகளின் இருப்புக்கும் வங்கியின் முக்கியச் செயல்பாடுகளுக்கும் பாதிப்பில்லை என்றும் தெரிவித்துள்ளது. மறுபுறம், ஹெச்.டி.எஃப்.சி வங்கி யின் ரகசிய வணிக உத்திகள் மற்றும் சந்தையைப் பாதிக்கக்கூடிய தகவல்கள் வெளியாட்களுக்குக் கசிந்ததாக எழுந்துள்ள புகார்கள் தொடர்பாக இரண்டு நிர்வாகிகள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த இரண்டு சம்பவங்களும், வங்கிகளின் தகவல் பாதுகாப்பு மீதான சந்தேகத்தை எழுப்புகின்றன.
திருடப்பட்டது, தகவல்கள்தானே தவிர பணமல்ல என்று இதை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. இன்று டேட்டாக்கள்தான் வணிகத்தின் அடிப்படையாக இருக்கின்றன. ஏற்கெனவே சைபர் ஃப்ராடுகள் அதிகரித்து வரும் நிலையில், மக்களின் தனிப்பட்ட தகவல்கள் மோசடிப் பேர்வழிகள் கையில் சிக்குவது நிலைமையை இன்னும் மோசமாக்கும். வங்கி அதிகாரிகளைப் போல பேசுவது, போலியான கே.ஒய்.சி சரிபார்ப்பு, கடன் புதுப்பிப்பு அறிவிப்புகள், ஏமாற்று குறுஞ்செய்திகள், மோசடி மின்னஞ்சல்கள் என இதன்மூலம் இன்னும் பல வாசல்கள் திறக்கக்கூடும்.
இணைய வங்கிச் சேவை, மொபைல் பேங்கிங், யு.பி.ஐ, டிஜிட்டல் கடன் என சேவைகள் வளரும்போது, வங்கிகளுக்கு அவற்றைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் அதிகரிக்கிறது. ஊழியர்கள், வெளிப்புறச் சேவை நிறுவனங்கள், தொழில்நுட்பக் கூட்டாளிகள் எனத் தகவல்களை அணுகும் அனைவருக்கும் கண்காணிப்புடன் கூடிய கட்டுப்பாடுகள் அவசியம். சைபர் பாதுகாப்பு, தகவல் அணுகல் கட்டுப்பாடு, கண்காணிப்பு, தணிக்கை ஆகியவை வலுப்படுத்தப்பட வேண்டும். அதேநேரம், ரிசர்வ் வங்கியும் கண்காணிப்பு அமைப்புகளும் வங்கிகளின் பாதுகாப்பு நடைமுறைகளைத் தொடர்ந்து ஆய்வு செய்து, விதிமீறல்களுக்குக் கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் வங்கிகளின் மூலம்தான் நடக்கின்றன. வங்கியின் பலம் அதன் இருப்புத் தொகையில் மட்டுமல்ல; இன்றைய காலத்தில் பணமும் தகவலும் வேறு வேறு அல்ல என்பதை உணர்ந்து வங்கிகளும், ரிசர்வ் வங்கியும் செயல்பட வேண்டும்.
- ஆசிரியர்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)