'உதவுகிறோம்'- ஹார்முஸில் நிற்கும் கப்பல்களில் உணவுத் தட்டுப்பாடு; Project Freedom-ஐ அறிவித்த ட்ரம்ப்

May 04, 2026 - 09:01
0
'உதவுகிறோம்'- ஹார்முஸில் நிற்கும் கப்பல்களில் உணவுத் தட்டுப்பாடு; Project Freedom-ஐ அறிவித்த ட்ரம்ப்

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி, ஈரான் போர் தொடங்கியது. அன்றிலிருந்து ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிட்டது ஈரான். அதனால், அப்போதிருந்து எண்ணெய் உள்ளிட்ட பல சரக்குகளை ஏற்றி வந்த கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி வாயிலில் நிற்கின்றன.

இந்தக் கப்பலுக்கு வழிகாட்டும் வகையில், அமெரிக்க அதிபர் 'Project Freedom' என்கிற திட்டத்தை அறிவித்துள்ளார்.

அந்தத் திட்டம் குறித்து ட்ரம்ப் தனது ட்ரூத் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது...

"மத்தியக் கிழக்கில் தற்போது நடந்து வரும் மோதலுக்கு எந்தச் சம்பந்தமும் இல்லாத உலக நாடுகள் பல அமெரிக்காவிடம் ஒரு உதவியைக் கோரியுள்ளன.

ட்ரம்ப்
ட்ரம்ப்

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கியுள்ள தங்கள் கப்பல்களை மீட்க உதவுமாறு அவர்கள் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். அந்த நாடுகளுக்கும் இந்தச் சண்டைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவர்கள் வெறும் அப்பாவிப் பார்வையாளர்கள் மட்டுமே!

ஈரான், மத்தியக் கிழக்கு மற்றும் அமெரிக்காவின் நலன் கருதி, அந்த நாடுகளின் கப்பல்களைப் பாதுகாப்பாக வழிநடத்தி வெளியே கொண்டுவர நாங்கள் சம்மதித்துள்ளோம்.

இதன் மூலம் அவர்கள் சுதந்திரமாகத் தங்கள் வணிகத்தைத் தொடர முடியும். மீண்டும் சொல்கிறேன், இந்தப் பகுதியில் இப்போது நடக்கும் விஷயங்களுக்கும் அந்தக் கப்பல்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை.

ஏன் இந்த Project Freedom?

அந்தக் கப்பல்களையும் அதன் பணியாளர்களையும் பாதுகாப்பாக ஜலசந்தியிலிருந்து வெளியேற்ற எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என்று எனது அதிகாரிகளிடம் கூறியுள்ளேன். அதே சமயம், நிலைமை சீராகும் வரை தாங்கள் மீண்டும் இங்கு வரப்போவதில்லை என்றும் அந்த நாடுகள் தெரிவித்துள்ளன.

'புராஜெக்ட் ஃப்ரீடம்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நடவடிக்கை, மத்தியக் கிழக்கு நேரப்படி திங்கள்கிழமை காலை தொடங்கும்.

ஹார்முஸ் ஜலசந்தி
ஹார்முஸ் ஜலசந்தி

ஈரானுடன் எங்களது பிரதிநிதிகள் நடத்தி வரும் பேச்சுவார்த்தை மிகவும் சாதகமாக உள்ளது என்பதையும், அது அனைவருக்கும் ஒரு நல்ல முடிவைத் தரும் என்பதையும் நான் அறிவேன்.

இந்தக் கப்பல் மீட்பு நடவடிக்கை என்பது, எந்தத் தவறும் செய்யாமல் சூழ்நிலைக் கைதிகளாகச் சிக்கிக்கொண்ட மக்கள், நிறுவனங்கள் மற்றும் நாடுகளை விடுவிப்பதற்காக மட்டுமே எடுக்கப்படுகிறது.

இது அமெரிக்கா மற்றும் மத்தியக் கிழக்கு நாடுகளின் சார்பாகவும், குறிப்பாக ஈரானின் சார்பாகவும் செய்யப்படும் ஒரு மனிதநேய நடவடிக்கை ஆகும்.

கடுமையாகக் கையாளப்படும்!

இந்தக் கப்பல்களில் பலவற்றில் உணவு மற்றும் அத்தியாவசியத் தேவைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பணியாளர்கள் ஆரோக்கியமாகவும் சுகாதாரமாகவும் அங்கிருக்க இது அவசியமாகிறது.

கடந்த சில மாதங்களாகத் தீவிரமாகப் போராடி வரும் அனைத்து தரப்பினரின் நல்லெண்ணத்தை வெளிப்படுத்த இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என்று நான் கருதுகிறேன்.

ஒருவேளை, இந்த மனிதநேய நடவடிக்கையில் ஏதேனும் இடையூறு விளைவிக்கப்பட்டால், துரதிர்ஷ்டவசமாக அந்த இடையூறு மிகக் கடுமையாகக் கையாளப்படும்"

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User