Doctor Vikatan: கால்களை மடக்கும்போது வரும் சத்தம்... மூட்டுப் பிரச்னையாக இருக்குமா?

Oct 14, 2026 - 09:00
0
Doctor Vikatan: கால்களை மடக்கும்போது வரும் சத்தம்... மூட்டுப் பிரச்னையாக இருக்குமா?

Doctor Vikatan: சமீபகாலமாக என்னுடைய வலது கால் மூட்டில் மடக்கும்போது எப்போதும் நெட்டி எடுப்பது போன்று சத்தம் கேட்கிறது... இதற்கு என்ன காரணமாக இருக்கும்... மூட்டுப் பிரச்னையாக இருக்க வாய்ப்பு உண்டா... மருத்துவரைப் பார்க்க வேண்டுமா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த எலும்பு, மூட்டு சிகிச்சை மருத்துவர் என். ஜம்பு

எலும்பு, மூட்டு சிகிச்சை மருத்துவர் என். ஜம்பு
எலும்பு, மூட்டு சிகிச்சை மருத்துவர் என். ஜம்பு

முழங்காலை மடிக்கும்போதோ அல்லது நீட்டும்போதோ சொடுக்கு எடுப்பது போன்ற சத்தம் கேட்பது பொதுவாகக் காணப்படக்கூடிய ஒன்றுதான். இருப்பினும், இதற்கான மூல காரணம் நபருக்கு நபர் வேறுபடலாம்.

சினோவியல் திரவம் (Synovial fluid) என்பது மூட்டுகளுக்குப் பிணைப்புப் பசையாக (lubricant) இயங்குவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. அதில்  நைட்ரஜன், ஆக்ஸிஜன், கார்பன் டை ஆக்ஸைடு போன்ற வாயுக்களும்  கரைந்திருக்கும். நீங்கள் முழங்கால், முழங்கை போன்ற ஏதேனும் ஒரு மூட்டை நகர்த்தும்போது அல்லது நீட்டும்போது, ஏற்படும் அழுத்த மாற்றங்களால் வாயுக் குமிழிகள் வேகமாக உருவாகக்கூடும். இந்நிகழ்வு Cavitation அல்லது Tribonucleation எனப்படும்.

இதுவே ஒருவித சத்தத்தை உண்டாக்குகிறது. விரல்களைச் சொடுக்கு எடுக்கும்போதும் இதுதான் நிகழ்கிறது. இது முற்றிலும் தீங்கற்றது. அந்த வாயு மீண்டும் திரவத்தில் கரைவதற்குள், அந்த மூட்டை மீண்டும் சொடுக்கு எடுக்க, பொதுவாக 15 முதல் 20 நிமிடங்களுக்கும் மேலாகும். 

சொடுக்கு சத்தம் வலி, வீக்கம் அல்லது முழங்காலை நகர்த்துவதில் சிரமம் ஏதும் இன்றி ஏற்படுமானால், அது பயப்பட வேண்டிய விஷயம் அல்ல.

சில நேரங்களில், முழங்கால் இயக்கத்தின்போது தசைநார்கள் (ligaments) எலும்புகளின் மீது நகர்வதால் சொடுக்கு சத்தம் ஏற்படும். குருத்தெலும்பு (cartilage) சார்ந்த பிரச்னைகள், வயது தொடர்பான தேய்மானம் அல்லது கீல்வாதம் (osteoarthritis) போன்ற பாதிப்புகளும் இதற்குக் காரணமாக இருக்கலாம்.

இந்தச் சொடுக்கு சத்தம் வலி, வீக்கம் அல்லது முழங்காலை நகர்த்துவதில் சிரமம் ஏதும் இன்றி ஏற்படுமானால், அது  பயப்பட வேண்டிய விஷயம் அல்ல. இருப்பினும், இந்தச் சத்தம் திடீரெனத் தோன்றி, அடிக்கடி நிகழ்கிறது என்றால், எலும்பியல் மருத்துவரை (orthopaedic specialist) அணுகுவது நல்லது.

சொடுக்குச் சத்தத்துடன் வலி, வீக்கம், சிவந்து போதல், மூட்டைச் சுற்றி லேசான சூடு, முழங்காலை மடிப்பதிலோ அல்லது நீட்டுவதிலோ சிரமம், அல்லது முழங்கால் மாட்டிக்கொள்வது (locking) போன்றோ அல்லது பலமிழந்து மடிவது போன்றோ உணர்ந்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும். ஏதேனும் காயத்திற்குப் பிறகு கடுமையான வலியுடனோ அல்லது எடையைத் தாங்க முடியாத நிலையிலோ இந்த அறிகுறிகள் தொடங்கினால், உடனடியாக மருத்துவ உதவியைப் பெறவும்.

சம்மணமிட்டு (Cross-legged) அமர்வது, நீண்ட நேரம் குத்திட்ட நிலையில் உட்கார்வது அல்லது அடிக்கடி படிக்கட்டுகளில் ஏறுவது போன்ற செயல்பாடுகள் அசௌகர்யத்தை ஏற்படுத்தினால் அவற்றைத் தவிர்க்கவும்.

சம்மணமிட்டு (Cross-legged) அமர்வது, நீண்ட நேரம் குத்திட்ட நிலையில் உட்கார்வது அல்லது அடிக்கடி படிக்கட்டுகளில் ஏறுவது போன்ற செயல்பாடுகள் அசௌகர்யத்தை ஏற்படுத்தினால் அவற்றைத் தவிர்க்கவும்.

சௌகர்யமான அளவுக்குள் மென்மையான பயிற்சிகளைத் தொடருங்கள். அறிகுறிகளை அதிகப்படுத்தும் பயிற்சிகளைத் தவிர்க்கவும்.
முழங்காலில் வலி இருந்தால், அதற்கு ஓய்வு கொடுத்து, ஒரு துண்டில் ஐஸ் கட்டிகளைச் சுற்றி  15–20 நிமிடங்கள் ஒத்தடம் கொடுக்கவும். மருத்துவ ஆலோசனையின்றி வலி நிவாரணி மாத்திரைகளை உட்கொள்வதைத் தவிர்க்கவும்.

சத்தம் மட்டும் கேட்பதை வைத்து இது  மூட்டுப் பிரச்னையாக இருக்கும் எனப் பயப்பட வேண்டியதில்லை. மேலும் பரிசோதனை அல்லது சிகிச்சை தேவையா என்பதை மருத்துவ ஆலோசனைக்குப் பிறகு மருத்துவர் விளக்குவார்.

டாக்டர் என். ஜம்பு:

சென்னை, வானகரம் அப்போலோ மருத்துவமனையில் எலும்பு, மூட்டு சிகிச்சை மருத்துவராகப் பணிபுரிகிறார். இத்துறையில் 23 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User