Doctor Vikatan: மாத்திரை எடுக்காவிட்டால் அரிப்பு, தடிப்பு, மார்பில் அழுத்தம்... என்ன பிரச்னை?

Jun 30, 2026 - 07:31
0
Doctor Vikatan: மாத்திரை எடுக்காவிட்டால் அரிப்பு, தடிப்பு, மார்பில் அழுத்தம்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: நான் கடந்த 13 வருடங்களாக மூன்று நாள்களுக்கு ஒருமுறை moteclc என்ற மாத்திரையை எடுத்து வருகிறேன். நான் மத்திரை எடுக்கவில்லை என்றால் உடலில் ஆங்காங்கே சிறிய தடிப்புகளுடன் நமைச்சல் வருகிறது.

மார்புக்குள் அழுத்தமும் லேசான மூச்சு வாங்குதலும் ஏற்படுவதையும் உணர்கிறேன். இது என்ன பிரச்னை... இதற்கு என்ன தான் தீர்வு?

பதில் சொல்கிறார்  இங்கிலாந்தைச் சேர்ந்த குடும்பநல மருத்துவர் கே. பாஸ்கர். 

மருத்துவர் கே. பாஸ்கர்
மருத்துவர் கே. பாஸ்கர்

உங்கள் கேள்வியிலிருந்துரு, உங்களுக்கு 'கிரானிக் ஸ்பான்டேனியஸ் அர்டிகேரியா' (Chronic Spontaneous Urticaria) எனப்படும் பிரச்னை இருப்பதாகப் புரிந்துகொள்கிறேன்.

அதாவது விட்டுவிட்டு வரும் நாள்பட்ட படைநோய் இருப்பதாகத் தெரிகிறது. நீங்கள் மூன்று நாள்களுக்கு ஒருமுறை மான்டெக் எல்சி எனப்படும் மாத்திரையைச் சாப்பிடுவதாகச் சொல்லி இருக்கிறீர்கள். இந்த மாத்திரை படை நோய், அலர்ஜி, ஆஸ்துமா போன்ற பிரச்னைகளுக்காகக் கொடுக்கப்படும்.

இந்த மாத்திரையைச் சாப்பிட்டும் உங்களுக்குப் பிரச்னை தீரவில்லை என்றால், நீங்கள் அனுபவம் வாய்ந்த சருமநல மருத்துவரை (MD Dermatologist) அணுகி அடுத்தகட்ட சிகிச்சையான பயலாஜிக் ட்ரீட்மென்ட் (Biologic Treatment) தேவைப்படுமா என்று ஆலோசனை பெறுவது நலம்.

அதற்கு முன் உங்களுக்கு ஏற்பட்டுள்ள அர்டிகேரியா (Urticaria) பிரச்னை குறித்துத் தெரிந்துகொள்ளுங்கள். சொறி, சிரங்கு, படை என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். இவையெல்லாம் அரிப்பு நோய்கள். இவற்றில் படை நோய் என்பது வந்துவந்து போகும் அரிப்பு நோய். இதையே 'அர்டிகேரியா' என்று ஆங்கிலத்தில் சொல்கிறோம். இது 100 நபர்களில் 20 பேரை வாழ்நாளில் எப்போதாவது ஒரு முறையாவது தாக்கி இருக்கும்.

திடீரென்று அரிப்பு ஏற்பட்டு, சருமத்தில் சிவந்த தடிப்புகள் ஏற்பட்டு சில நிமிடங்களில் அல்லது சில மணி நேரங்களில் அது மறைந்து போய்விடும். மீண்டும் ஓரிரு நாள்கள் கழித்தோ அல்லது மறுநாளோ வரலாம். பெரும்பாலும் இது ஆறு வாரங்களில் குணமாகிவிடும். இதை 'அக்யூட் அர்டிகேரியா' (Acute Urticaria) என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்.

திடீரென்று அரிப்பு ஏற்பட்டு, சருமத்தில் சிவந்த தடிப்புகள் ஏற்பட்டு சில நிமிடங்களில் அல்லது சில மணி நேரங்களில் அது மறைந்து போய்விடும்.

100-ல் 20 பேருக்கு வரும் இந்தப் பிரச்னை, அந்த 20 பேரில் ஒருவருக்கு மட்டும் 'க்ரானிக் அர்டிகேரியா'வாக (Chronic Urticaria) மாறும். அதாவது தொடர்ந்து மாதக்கணக்கில் அல்லது வருடக்கணக்கில் இந்த அரிப்பு நோய் வந்து வந்து போகும். இது குழந்தைகள், பெரியவர்கள் என யாரையும் பாதிக்கும். 20 முதல் 40 வயதுக்குள் உள்ளவர்களை அதிகம் தாக்கும். பெண்கள் அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள்.

படை நோய் என்பது சருமத்தை மட்டும் பாதிக்கும். அரிப்பு, சருமத்தில் சிவந்த தடிப்புகள், உடலில் ஏதாவது ஒரு பகுதியிலோ அல்லது எல்லா பகுதிகளிலுமோ வரலாம். இது அடிக்கடி வந்து போவதால் மன உளைச்சலும் தூக்கமின்மையும் இருக்கலாம். சில பேருக்கு அரிப்பு இல்லாமல் கண் இமைகளில் வீக்கம், உதடு வீக்கம், கை,கால் வீக்கம் அல்லது அந்தரங்க உறுப்புகள் வீக்கம் ஏற்பட்டு அங்கே வலியும் ஏற்படலாம்.

இதை ஆஞ்சியோஎடிமா (Angioedema) என்று சொல்வார்கள். இந்த வீக்கம் தொண்டையிலும் நாக்கிலும் ஏற்பட்டால் மூச்சு விடக்கூட கஷ்டமாக இருக்கும். இது மெடிக்கல் எமர்ஜென்சி எனப்படும் மருத்துவ அவசரநிலை என்பதால், உடனடியாக மருத்துவரைப் பார்க்க வேண்டியது அவசியம்.

ரத்தத்தில் இருக்கும் மாஸ்ட் செல் (Mast cells) எனப்படும் வெள்ளை அணுக்கள், ஹிஸ்டமின் (Histamine), லூக்கோட்ரியன்ஸ் (Leukotrienes) போன்ற அழற்சி ஊக்கிகளை வெளிப்படுத்துவதால்  சருமத்தில் அரிப்பு மற்றும் தடிப்பு ஏற்படுகிறது. இதுதான் படை நோய்க்கான காரணம். மாஸ்ட் செல்கள்  தூண்டப்பட்டு ஹிஸ்டமின் வெளியேற நிறைய பேருக்கு காரணமே இருக்காது, அல்லது நமக்குத் தெரியாது.

முட்டை, பருப்பு வகைகள், கடல்வாழ் உயிரினங்கள் போன்ற  சில உணவுகள், வைரஸ் உள்ளிட்ட கிருமித் தொற்றுகள், பூச்சிக்கடிகள், பெனிசிலின் (Penicillin), ஐபுரூஃபன் (Ibuprofen) போன்ற மாத்திரைகள், பிபி (BP) குறைக்க பயன்படுத்தப்படும் சில மாத்திரைகள் கூட அர்டிகேரியாவைத் தூண்டலாம்.

லேட்டக்ஸ் (Latex) போன்ற கையுறை பயன்பாடு, மன அழுத்தம், வெப்பம், தைராய்டு  போன்ற ஆட்டோ இம்யூன் (Autoimmune) பாதிப்புகளாலும் அர்டிகேரியா தூண்டப்படலாம்.

முட்டை, பருப்பு வகைகள், கடல்வாழ் உயிரினங்கள் போன்ற சில உணவுகள், வைரஸ் உள்ளிட்ட கிருமித் தொற்றுகள், பூச்சிக்கடிகள், பெனிசிலின் (Penicillin), ஐபுரூஃபன் (Ibuprofen) போன்ற மாத்திரைகள், பிபி (BP) குறைக்க பயன்படுத்தப்படும் சில மாத்திரைகள் கூட அர்டிகேரியாவைத் தூண்டலாம்.

படை நோய் பாதித்தால், முதல் நான்கு முதல் ஆறு வாரங்களுக்கு எந்தப் பரிசோதனைகளும் தேவையில்லை. வெறும் ஆன்டிஹிஸ்டமின் (Antihistamines) மாத்திரைகள் மட்டும் போதுமானவை. ஆறு வாரங்களுக்கு மேல் அரிப்பு நோய் வந்து வந்து போனால், அடிப்படை ரத்தப் பரிசோதனைகள் (Basic blood tests) தேவைப்படலாம். அவற்றை சரும மருத்துவரை அணுகி செய்து கொள்வது நல்லது. சிலருக்கு அலர்ஜி சோதனைகள் அல்லது பயாப்சி (Biopsy) போன்றவை தேவைப்படலாம்.

படை நோய்க்கான காரணிகள் (Triggers) நமக்குத் தெரிந்தால் அவற்றைத் தவிர்க்க வேண்டும். அதாவது ஒவ்வாத உணவுகள், ஆன்டிபயாடிக்ஸ் மாத்திரைகள் போன்றவை தவிர்க்கப்பட வேண்டும். நிறைய பேருக்கு என்ன காரணம் என்றே தெரிவதில்லை.

அவர்களுக்கு ஆன்டிஹிஸ்டமின் மாத்திரைகள் கொடுக்க வேண்டும். அடுத்தகட்ட சிகிச்சைகளும் உள்ளன. எனவே, நீங்கள் அனுபவம் உள்ள சருமநல மருத்துவரை அணுகி, ஆலோசனை பெறுங்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User