Doctor Vikatan: வாக்கிங் செய்யும்போது தொண்டையை அடைக்கும் சளி... என்ன பிரச்னை, என்ன தீர்வு?

Sep 10, 2026 - 08:31
0
Doctor Vikatan: வாக்கிங் செய்யும்போது தொண்டையை அடைக்கும் சளி... என்ன பிரச்னை, என்ன தீர்வு?

Doctor Vikatan: வாக்கிங் செய்யும்போதும் வொர்க்அவுட் செய்யும்போதும் தொண்டையில் சிறிதளவு சளி கட்டுகிறது. மூக்கின் வழியோ, வாயின் வழியோ காற்றை இழுத்தாலும் இந்தப் பிரச்னை உள்ளது.

தொண்டையை அடிக்கடி கனைக்க வேண்டியிருக்கிறது. துப்பக்கூடிய அளவுக்கு சளி வருவதில்லை. வாக்கிங், வொர்க்அவுட் முடிந்து ஓய்வு எடுக்கும்போது ஐந்து நிமிடங்களில் இந்தப் பிரச்னை சரியாகிவிடுகிறது. இதை எப்படிப் புரிந்துகொள்வது... சரி செய்ய முடியுமா?

- SV, விகடன் இணையத்திலிருந்து

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நுரையீரல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் திருப்பதி.

நுரையீரல் மருத்துவர் திருப்பதி
நுரையீரல் மருத்துவர் திருப்பதி

உடற்பயிற்சிகள் செய்யும்போது தொண்டையில் சளி சேர்வது போல் உணர்வது மிகவும் இயல்பான ஒன்றுதான். பெரும்பாலும் இது குளிர்ந்த சூழ்நிலை (அதாவது ஏசி அதிகமாக இருக்கும் இடங்களிலோ) அல்லது தூசு (Dust) அதிகமாக உள்ள இடங்களிலோ உடற்பயிற்சி செய்யும்போது மிக அதிகமாகத் தெரியலாம்.

இந்தப் பிரச்னைக்கு அறிவியல்பூர்வமாக சில காரணங்கள் இருக்கலாம். நாம் உடற்பயிற்சி செய்யும்போது மூக்கில் ரத்த ஓட்டமும் (Blood flow), காற்று ஓட்டமும் (Air flow) மாறுபடும். வேகமாகச் சுவாசிக்கும்போது அந்த இடத்தில் சளிச் சுரப்பு (Mucus secretion) அதிகமாகி, அது தொண்டையில் இறங்கி, சளி இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தலாம். உடற்பயிற்சி செய்து முடித்த உடனே இது சரியாகிவிட்டால் அது முற்றிலும் இயல்பானதுதான்.

சில சமயங்களில் உடம்பில் அசிடிட்டி (Acidity) பிரச்னை இருந்து, வயிற்றில் அமிலம் சுரந்தாலும் இதுபோன்று ஏற்படலாம். அசிடிட்டி இருந்தால் அதற்கான சிகிச்சையை எடுத்துக்கொள்வது நல்லது. இது வராமல் இருக்க தூசு நிறைந்த இடங்களிலோ அல்லது அதிக குளிர்ச்சியான ஏசி அறையிலோ உடற்பயிற்சி செய்வதைத் தவிர்க்கலாம்.

தூசு நிறைந்த இடங்களிலோ அல்லது அதிக குளிர்ச்சியான ஏசி அறையிலோ உடற்பயிற்சி செய்வதைத் தவிர்க்கலாம்.

இதைத் தாண்டி, உடற்பயிற்சி செய்யும்போது அல்லது செய்து முடித்த பிறகு மூச்சு வாங்குவது போன்ற பிரச்னை இருந்தால், அது ஆஸ்துமா (Exercise-induced bronchial asthma) அல்லது இதயப் பிரச்னைகளின் (Cardiac issues) அறிகுறியாக இருக்கலாம்.

உங்களுக்கு சைனஸ் பிரச்னை (Sinusitis) இருந்தால் காது-மூக்கு- தொண்டை (ENT) மருத்துவரை அணுகி சிகிச்சை பெறலாம். ஒருவேளை அசிடிட்டி  அல்லது எதுக்களித்தல் (Reflux) பிரச்னை இருந்தால், அமிலம் சுரக்காமல் இருப்பதற்கான மருத்துவச் சிகிச்சையையும் எடுத்துக் கொள்ளலாம்.

டாக்டர் திருப்பதி:

சென்னை, சிம்ஸ் மருத்துவமனையில் நுரையீரல் சிகிச்சை சிறப்பு மருத்துவராகப் பணிபுரிபவர். இந்தத் துறையில் 20 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User