ஆற்காடு: "அரசு மருத்துவமனையைத் தரம் உயர்த்திக் கொடுங்க" - தவெக அமைச்சர்களைச் சந்தித்த அதிமுக எம்எல்ஏ

May 22, 2026 - 16:01
0
ஆற்காடு: "அரசு மருத்துவமனையைத் தரம் உயர்த்திக் கொடுங்க" - தவெக அமைச்சர்களைச் சந்தித்த அதிமுக எம்எல்ஏ

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு தொகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க எம்.எல்.ஏ எஸ்.எம்.சுகுமார், தனது தொகுதி வளர்ச்சிப் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த நிலையில், பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை நேரில் சந்தித்து மனு ஒன்றைக் கொடுத்திருக்கிறார் எஸ்.எம்.சுகுமார்.

அவரின் மனுவில், ``ஆற்காடு அரசு மருத்துவமனையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்துதர வேண்டும்.

ஆதவ் அர்ஜுனாவுடன் எஸ்.எம்.சுகுமார்
ஆதவ் அர்ஜுனாவுடன் எஸ்.எம்.சுகுமார்

அதேபோல கலவை அரசு மருத்துவமனையிலும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் உடனடியாக அமைக்கப்பட வேண்டும். இது மட்டுமல்லாமல், கண் அறுவை சிகிச்சை மையத்துக்குப் புதிய கட்டட வசதி, புதிதாக பத்திரப்பதிவு அலுவலகம், ஆற்காடு நீதிமன்றத்துக்குச் சுற்றுச்சுவர் ஆகியவையும் அவசியமாகத் தேவைப்படுகின்றன.

ராந்தம் ஏரியின் உபரிநீர் கால்வாய் மீது உயர்மட்ட பாலம், மேல்குளம் ஏரி, பென்னகர் ஏரி, கலவை ஏரி, அனத்தாங்கல் ஏரிப் பகுதிகளிலும் பாலம் கட்டித்தர வேண்டும். ஆற்காடு புறவழிச்சாலையை 6 வழிச்சாலையாக விரிவுப்படுத்த வேண்டும்’’ என்பன போன்ற கோரிக்கைகளைக் குறிப்பிட்டு வலியுறுத்தியிருக்கிறார்.

தொடர்ந்து, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ்ஜையும் சந்தித்து மனு அளித்தார் எஸ்.எம்.சுகுமார்.

அருண்ராஜுடன் எஸ்.எம்.சுகுமார்
அருண்ராஜுடன் எஸ்.எம்.சுகுமார்

அதில், ``ஆற்காடு அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட வேண்டும். மருத்துவமனையில் காலிப்பணியிடங்களை நிரப்பி, போதிய அளவுக்கு மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட மருத்துவப் பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும். மருத்துவமனைக்குக் கூடுதல் கட்டட வசதி தேவைப்படுகிறது. அதையும் அமைத்துதர நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனக் கேட்டுக்கொண்டிருந்தார்.

இந்தக் கோரிக்கைகள் மீது உடனடியாக உரிய நடவடிக்கைகள் எடுப்பதாக இரு அமைச்சர்களும் எஸ்.எம்.சுகுமாரிடம் தெரிவித்திருக்கின்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User