அமோனியா கசிவு: "பாதிக்கப்பட்டவர்களின் முகம் வீங்கியிருக்கிறது; நுரையீரலும்..." - அமைச்சர் அருண் ராஜ்

Jun 21, 2026 - 21:31
0
அமோனியா கசிவு: "பாதிக்கப்பட்டவர்களின் முகம் வீங்கியிருக்கிறது; நுரையீரலும்..." - அமைச்சர் அருண் ராஜ்

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பெரியபாளையத்தில் இயங்கி வரும் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் இன்று அமோனியா வாயுக்கசிவு ஏற்பட்டது.

இதனால் அந்தத் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.

திருவள்ளூர் - பெரியபாளையம்
திருவள்ளூர் - பெரியபாளையம்

சிலருக்கு வாய், மூக்கிலிருந்து ரத்தக்கசிவும் ஏற்பட்டுள்ளது. இதில் பாதிக்கப்பட்ட 70-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்களில் 2 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். அருகிலுள்ள சில மருத்துவமனைகளில் 60-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் சிலர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

முதலமைச்சர் விஜய் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஒரு குழுவை அமைக்க உத்தரவிட்டிருக்கிறார். தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் மற்றும் பொதுச் சுகாதாரக் கூடுதல் இயக்குநர் ஆகியோரைக் கொண்ட 3 பேர் குழு, 24 மணி நேரத்திற்குள் இடைக்கால அறிக்கையையும், 3 நாள்களுக்குள் இறுதி அறிக்கையையும் சமர்ப்பிக்க உத்தரவிட்டிருக்கிறார்.

பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அருண் ராஜ், " பெரும்பாலான ஊடகங்களில் 7 பேர் உயிரிழந்ததாக போட்டிருக்கிறார்கள். 2 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இன்னும் சிலர் கவலைக்கிடமாக இருக்கிறார்கள். அம்மோனியா விஷ வாயு தாக்கி தூத்துக்குடியில் இதற்கு முன் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. ஆனால், இதுபோல தீவிரமான பாதிப்பு ஏற்பட்டது கிடையாது.

அமைச்சர் அருண் ராஜ்
அமைச்சர் அருண் ராஜ்

சம்பவ இடத்திற்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் விரைந்திருக்கிறார்கள். சம்பவ இடத்தில் 300PPM அளவில் அம்மோனியா வாயு கலந்திருக்கிறது. இப்படியான சம்பவத்தை பார்த்தது இல்லை என மருத்துவர்களும் கூறினார்கள். பாதிக்கப்பட்டவர்களின் முகம் வீங்கியிருக்கிறது.

அவர்களின் மூச்சு குழாயும், நுரையீரலும் பாதிக்கப்பட்டிருக்கிறது. அனுமதிக்கப்பட்ட சமயத்தில் இருந்ததைவிட சிலருக்கு உடல்நிலை இன்னும் மோசமாகி இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

வென்டிலேட்டர் உதவியுடன் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதிக நச்சுத்தன்மைக் கொண்ட வாயுக்களை பயன்படுத்தும் தொழிற்சாலைகள் கூடுதல் கவனத்துடன் செயல்பட உத்தரவிடப்பட்டிருக்கிறது.

ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 10 பேர், ஸ்டான்லி மருத்துவமனையில் 7 பேர், வேல்ஸ் மருத்துவக் கல்லூரியில் 24 பேர், வெங்கடேஷ்வரா மருத்துவமனையில் 18 பேர் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்." எனக் கூறியிருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User