”தவெக-வில் அனைத்து பொறுப்புகளும் பணம் பெற்றுதான் வழங்கப்பட்டுள்ளது” - அஜிதா ஆக்னல் குற்றச்சாட்டு!
தமிழக வெற்றிக் கழகத்திலிருந்து விலகிய பெண் நிர்வாகி அஜிதா ஆக்னல், தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் கனிமொழி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலையில் சமீபத்தில் தி.மு.க-வில் இணைந்தார். இந்த நிலையில் அஜிதா ஆக்னல் செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது பேசிய அவர், ”கடந்த 25 ஆண்டுக்காலமாக விஜய் மக்கள் இயக்கத்தில் எங்களது குடும்பம் பயணித்தது என்பது விஜய் மட்டுமல்லாமல் எல்லோருக்கும் தெரிந்த விஷயம். 
தூத்துக்குடி மாவட்டத்தில் விஜய் மக்கள் இயக்கத்திற்காக என் முழு குடும்பமும் உழைத்தோம் அதைத் தொடர்ந்து விஜய் கட்சி ஆரம்பித்த பிறகும் அதில் முழுமையாக ஈடுபாட்டுடன் உழைத்தேன். நான் த.வெ.க-விற்காக கடந்த 2 ஆண்டுகளாக முழுமையாக உண்மையாக உழைத்தேன். ஆனால், நேரில் சந்திக்க சென்றபோது என்னை ஒருமுறைகூட சந்திக்கவில்லை. என்னை யாரும் அந்த கட்சியில் மரியாதையாக வழி நடத்தவில்லை. விஜய் மக்கள் இயக்கத்தில் உண்மையாக உழைத்தவர்கள் யாருக்கும் மரியாதையும் சரி, பொறுப்புகளும் சரி வழங்கவில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை.
25 ஆண்டுக்காலமாக எங்கள் குடும்பத்தினருடன் நெருக்கமான பழக்க வழக்கத்தில் இருந்ததால்தான் நான் உரிமையுடன் தலைவர் விஜய் காரினை மறித்தேன். ஆனால், என்னை தவறாக நினைத்தனர், எதற்காக காரை மறைத்தேன் என அவரும் அழைத்துப் பேசவில்லை. தூத்துக்குடியில் பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு முழுமையாக உழைத்த என்னை நிராகரித்துவிட்டு விஜய் நண்பர் ஸ்ரீ நாத்-க்கு தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கி உள்ளனர். 
அவருக்கும் தூத்துக்குடிக்கும் என்ன தொடர்பு இருக்கிறது? அவர் விஜய்யின் நண்பர் மற்றும் மீனவர் என்ற காரணத்திற்காக தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியை கொடுத்து என்னை புறக்கணித்திருக்கிறார்கள். நான் என்ன தவறு செய்தேன் என்று என்னை நிராகரித்தனர்? த.வெ.க-வில் பெண்களுக்கு மரியாதை இல்லை. த.வெ.க-வில் வழங்கப்பட்டுள்ள அனைத்து பொறுப்புகளுக்கும் பணம் வாங்கி கொண்டுதான் பதவி வழங்கப்பட்டுள்ளது.
சட்டமன்ற வேட்பாளர் சீட்டும் பணம் வாங்கிக் கொண்டுதான் வழங்கப்பட்டுள்ளது. தவறு செய்துவிட்டு மாற்று கட்சியில் இருந்து வருபவர்கள் மற்றும் குற்றப்பட்டியலில் உள்ளவர்களுக்கு உடனே சீட் வழங்கப்படுகிறது. பணத்திற்காக நான் தி.மு.க-வில் இணையவில்லை. கலைஞர் ஆட்சி காலத்தில் இருந்தே யாராவது முறையிட்டால் அழைத்து என்ன பிரச்னை என கேட்கக்கூடிய தலைவர்கள் இருக்கக்கூடிய கட்சி என்பதால் தி.மு.க-வில் என்னை இணைத்துக் கொண்டேன். 
முழுக்க முழுக்க என் மீது த.வெ.க கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் காட்டிய காழ்புணர்ச்சியால்தான் நான் நீக்கப்பட்டேன். த.வெ.க-வினர் என்னை தி.மு.க கைகூலி என்று சொல்லிவருபவர்களுக்கு என்ன ஆதாரம் உள்ளது என்று நான் கேட்கிறேன்? பெற்ற பிள்ளைகளுக்கே நான் கடன் கொடுத்தேன் என்று ஒரு தலைவர் சொல்லும் ஒரே கட்சி த.வெ.க-தான். விஜய்யின் மனைவியை தி.மு.க கைக்கூலி என சமூக வலைதளங்களில் பதிவிடும் போதே கண்டிக்காத விஜய் எனக்காகவா குரல் கொடுக்கப் போகிறார்?" என்றார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0