`ஆடி கொடைக்கு ஆயிரங்கண் பானையும், தீச்சட்டியும் ரொம்ப விசேஷம்' - கவனம் ஈர்க்கும் மண்பாண்ட பொருள்கள்

Aug 06, 2026 - 15:31
0
`ஆடி கொடைக்கு ஆயிரங்கண் பானையும், தீச்சட்டியும் ரொம்ப விசேஷம்' - கவனம் ஈர்க்கும் மண்பாண்ட பொருள்கள்

தென் மாவட்டங்களில் ஆடி மாத கொடை விழாக்களை அலங்கரிக்கும் மண் கலயங்களின் விற்பனை அமோகமாக நடைபெறுகிறது.

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஆடி மாதம் பெரும்பாலான அம்மன் மற்றும் சுடலைமாடன் கோயில்களில் கொடை விழாக்கள் நடைபெறுகின்றன. பெண்கள் காப்புக்கட்டி விரதமிருந்து அம்மன் கோயில்களுக்கு ஆயிரங்கண் பானையை நேர்த்திக்கடனாக எடுத்துச் செல்கிறார்கள். ஏராளமான பெண்கள் தீச்சட்டி எடுத்து ஊர்வலமாக வருகிறார்கள். அம்மன் கோயில்களில் கூழ் ஊற்றி வழிபடும் வகையில் கஞ்சி கலயம் எடுக்கும் வழக்கம் உண்டு. ஆடி மாதம் அம்மனுக்கு வளைகாப்பு வைபவமும் நடத்தப்படுகிறது.

அதுபோக சுடலைமாடன் கோயில்களில் இரவு கன்னியான் கைவெட்டு நிகழ்ச்சி நடைபெறும். இதற்கு மண் சட்டி தேவைப்படும். இதனால் ஆயிரங்கண் பானை, தீச்சட்டி, கலயங்கள், பானைகள் போன்றவற்றை மும்முரமாக தயாரித்து விற்பனை செய்து வருகிறார்கள்.

இது குறித்து நெல்லை மேலப்பாளையம் குறிச்சி பகுதியைச் சேர்ந்த இளம் மண்பானை தயாரிப்பாளர் முத்துராமன், "65 ஆண்டுகளாக மண்பானை பொருள்கள் தயாரிக்கிறோம். நான் நான்காவது தலைமுறையாக, 12 வயசு முதல் கிட்டத்தட்ட 15 வருடமா இந்தத் தொழில்ல இருக்கிறேன். நாங்க குடும்பமா சேர்ந்து இந்த தொழிலைச் செய்கிறோம்.

தை மாதத்தில் இருந்து பங்குனி மாதம் வரைக்கும் தண்ணி ஊத்துற மண்பானை மாதிரியான பொருள்கள் உற்பத்தி செய்வோம். சித்திரை மாசம் சின்னப் பிள்ளைகள் விளையாடுற சமையல் செட் செய்வோம். ஆடி மாசம் கோயிலுக்குத் தேவையான தீச்சட்டி, கலயம், ஆயிரங்கண் பானை இதெல்லாம் அதிகமா உற்பத்தி செய்வோம், விற்பனை அதிகமாக இருக்கும். மொத்த விற்பனைக்கு வியாபாரிகள் வாங்கிட்டுப் போவாங்க, உற்பத்தி நிற்காமல் ஓடும். புரட்டாசி மாசம் தசராவுக்குத் தீச்சட்டி செய்ய ஆரம்பிச்சுருவோம், அந்த நேரத்துல அது மட்டும்தான் விற்பனையாகும்.

கார்த்திகை மாசம் மிஷின் விளக்கு பக்கம் ஆட்கள் போனாலும் கைல செஞ்ச மண் விளக்குதான் ஏத்தணும்னு பலர் இருக்காங்க, அதனால கை விளக்குக்கு மவுசு குறையல. ஆனாலும் அதுல அதிக லாபம் இருக்காது. அப்புறம் பொங்கலுக்குத் தேவையான பானை, அடுப்பு மாதிரியான பொருள்கள் தயாரிக்க ஆரம்பிச்சுருவோம். இப்படித்தான் எங்க வாழ்க்கை போகுது.

அதுபோக உண்டியல், தண்ணி பாட்டில், விளக்குகள், பூந்தொட்டிகள்னு மண்ணால செய்ற எல்லாப் பொருள்களையும் செய்வோம். இந்தத் தொழிலை மனநிம்மதியோட செய்கிறேன். மண்பானைத் தொழிலுக்காக ஆறு மாதப் படிப்பு கர்நாடகாவில் போய்ப் படிச்சிருக்கேன்" என்கிறார்.

ஆடி மாதம் கொடை விழாக்களின்போது தங்களின் வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்பதற்காக, பெண்கள் தீச்சட்டி எடுப்பது வழக்கமானது. சில பெண்கள் மாரியம்மன், காளியம்மன், முத்தாரம்மன் போன்ற தெய்வங்களுக்கு ஆயிரங்கண் பானை எடுத்து நேர்த்திக் கடன் செலுத்துவார்கள். குறிப்பாக அம்மை நோய், கண்பார்வைக் குறைபாடு, உடல் வெப்பத்தால் ஏற்படும் நோய்கள் தீர வேண்டும் என்பதற்காக ஆயிரங்கண் பானை எடுக்கப்படுகிறது.

ஒரு பானையில் சம இடைவெளியில் ஆயிரம் துளைகள் போடப்பட்டிருக்கும்; பானையின் மூடியிலும் துளைகள் போடப்பட்டிருக்கும். பானையின் உள்ளே மாவிளக்கு அல்லது அகல் விளக்கால் தீபம் ஏற்றுவர். அந்தத் தீபம் அணையாமல் பானையைத் தலையில் வைத்து ஊர்வலமாக வருவார்கள். இந்த நேர்த்திக் கடனை பெரும்பான்மையாகப் பெண்கள்தான் செய்வார்கள்.

இந்த வருடம் ஆடி மாத விற்பனை அமோகமா இருக்குது, ஆயிரங்கண் பானை ரூ.350க்கும் தீச்சட்டி ரூ.150க்கும் விக்கிறோம். இன்னும் உற்பத்தி செஞ்சிட்டுத்தான் இருக்கிறோம். பத்து மாசம் குழந்தை உருவாகி வர்ற மாதிரிதான் சுட்டு வெளியே வருது, இதைப் பார்த்துப் பார்த்துத்தான் செய்யணும். அதனால பேரம் பேசாம வாங்கினால் நல்லா இருக்கும்" என்கிறார் இளம் மண்பானை தயாரிப்பாளர் முத்துராமன்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User