‘அட… அதுக்குள்ள முடிஞ்சிடுச்சே!’ கொண்டாட்டத்துக்குப் பின் வரும் சோகம்! ஏன் ஏற்படுகிறது?

Mar 16, 2026 - 20:31
 0
‘அட… அதுக்குள்ள முடிஞ்சிடுச்சே!’ கொண்டாட்டத்துக்குப் பின் வரும் சோகம்!
ஏன் ஏற்படுகிறது?

திருமணம் மாதிரியான நிகழ்ச்சிகள், பிறந்தநாள் கொண்டாட்டம், விளையாட்டுப் போட்டி, கல்ச்சுரல்ஸ், நீண்ட நாள் திட்டமிட்டு சென்ற சுற்றுலா போன்றவை முடிந்ததும் பலருக்கும் ஒரு வெறுமை உணர்வு ஏற்படும். 'அட! அதுக்குள்ள முடிஞ்சு போச்சே' என்பது போல உணர்வு ஏற்படும். பரபரப்பாக இருந்த வாழ்க்கை திடீரென்று அமைதி, அமைதி....அமைதியோ அமைதியாகிவிட்டதைப் போல தோன்றும். இதனை Post-Event Blues என்கிறது உளவியல்.

கொண்டாட்டத்துக்குப் பின் வரும் சோகம்

"நீண்ட காலமாக எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த ஒரு விஷயம் முடிந்த பிறகு ஏற்படும் சோகம்தான் இது. பொதுவாக, அந்த நிகழ்வு முடிந்ததும் அன்றாட வாழ்க்கைக்குத் திரும்பும்போது இது போன்ற உணர்வு ஏற்படும். அன்றாட வாழ்க்கைக்குத் திரும்பும்போது, அந்நிகழ்வுக்காக தயாராகும்போது இருந்த அதீத உற்சாகம், எனர்ஜி, ஒரு சந்தோஷமான ஸ்ட்ரெஸ், பரபரப்பு ஆகியவை சட்டென்று நீங்கிவிடுவதால் ஒரு வெறுமை உணர்வு ஏற்படும்" என்கிறார் சென்னையைச் சேர்ந்த உளவியல் ஆலோசகர் தர்ஷினி மதனகோபால்.

"சோகமான மனநிலை, மனஅழுத்தம், எரிச்சலுணர்வு, களைப்பு, சோர்வு போன்றவைதான் இதன் அறிகுறிகள். ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், இது தற்காலிகமான நிலைதான். அதனால் தீவிர பாதிப்புகள் பொதுவாக ஏற்படாது. நம் எல்லாருக்குமே அப்படி ஓர் உணர்வு ஏற்படலாம், ஏற்கெனவே ஏற்பட்டு இருக்கும்.

உளவியல் ஆலோசகர் தர்ஷினி மதனகோபால்

இந்த மனநிலைக்கு உடலியல் மற்றும் சமூகம் சார்ந்த இரண்டு முக்கியமான காரணங்கள் உண்டு. இது போன்ற நிகழ்வுகளுக்குத் தயாராகும்போது அதிக அழுத்தம் ஏற்பட்டு அட்ரிலீன், கார்டிசோல் போன்ற ஹார்மோன்கள் அதிகமாக உற்பத்தியாகும். அந்த நிகழ்ச்சியோ, கொண்டாட்டமோ நிறைவடைந்ததும், அதிகமாக இருந்த ஹார்மோன்களின் அளவு சட்டென்று குறையும்போது சோகம், வெறுமை உணர்வு போன்றவை ஏற்படும்.

அடுத்ததாக, நிகழ்ச்சி, கொண்ட்டாம் போன்ற சமயத்தில் நிறைய பேரை சந்திப்போம், பேசுவோம், நிறைய வேலைகள் செய்வோம், பொறுப்பை எடுத்துக்கொள்வோம். அது முடிந்ததும், சலிப்பான அன்றாட வாழ்க்கைக்குத் திரும்பும்போது சமூகம், குடும்பத்தினர், நண்பர்களுடன் இருந்த இந்த கனெக்ஷன் மிகவும் குறைந்துவிடும். இது போன்ற திடீர் உணர்வு ரீதியான மாற்றம் வரும்போதும், இது ஏற்படலாம்.

அடுத்த கொண்டாட்டத்துக்கு தயாராகுங்க!

அடுத்த கொண்டாட்டத்துக்கு தயாராகுங்க!

நல்ல ஊட்டச்சத்துள்ள உணவை சாப்பிட வேண்டும், நிறைய தண்ணீர் அருந்த வேண்டும், நாள்தோறும் சரியான நேரத்துக்குத் தூங்க வேண்டும், தொடர்ந்து ஆறு முதல் எட்டு மணி நேரம் தூங்க வேண்டும். இந்தப் பழக்கங்கள் உடலை ஓர் ஒழுங்குக்குள் கொண்டு வர உதவும். உடல் ஒழுங்குக்குள் வரும்போது அது உணர்வை ஒழுங்குபடுத்த உதவும். இதைத் தவிர்த்து, சமூகத்துடனான தொடர்பு துண்டிக்கப்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தனிமையாக இருக்காமல் குடும்பத்தினருடன் நேரம் செலவழிப்பது, நண்பர்களை சந்திப்பது, அடுத்த நிகழ்வு, சந்திப்புக்காகத் திட்டமிடுவது போன்றவற்றை செய்யலாம்" என்கிறார் தர்ஷினி மதனகோபால்.

அப்ப தேர்தல் திருவிழா முடிஞ்சதும்...பல பேருக்கு இந்தப் பிரச்னை வரலாம்!

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0