"2009 இல் நான் மத்திய அமைச்சராவது தடுக்கப்பட்டது" - என்ன சொல்கிறார் திருமாவளவன்?

Oct 02, 2026 - 12:00
0
"2009 இல் நான் மத்திய அமைச்சராவது தடுக்கப்பட்டது" - என்ன சொல்கிறார் திருமாவளவன்?

மதுராந்தகம் தொகுதியின் இடைத்தேர்தலுக்காக தவெக சார்பில் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியின் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்தக் கூட்டத்தில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், திமுக கூட்டணியிலிருந்து ஏன் வெளியேறினோம் என விரிவாகப் பேசியிருந்தார்.

Thiruma
Thiruma

திருமாவளவன் பேசியதாவது, ''தவெகவோடு கைகோர்ப்பதில் விசிகவுக்கு எந்தக் கொள்கை மாறுபாடும் கிடையாது. பதவிக்காக ஒரு முடிவை எப்போதும் எடுக்க மாட்டேன். 2009 இல் ஈழத்தமிழர் விவகாரத்தின்போது என்.நடராஜனும் ராமதாஸ் ஐயாவும் என்னை திமுக - காங்கிரஸுக்கு எதிரான கூட்டணிக்கு அழைத்தார்கள்.

ஈழத்தமிழர் பிரச்னை சர்வதேச பிரச்னை. திமுக, அதிமுக, காங்கிரஸால் அதில் ஒன்றும் செய்ய முடியாது எனக் கூறி சமூக நீதிக்காக திமுக கூட்டணியிலேயே தொடர்ந்தேன். அதனால் ஈழத்தமிழர்களின் நம்பிக்கையை இழந்தேன். 2016 இல் நாங்கள் 180-200 இடங்களில் தனியாக நிற்கப் போகிறோம், நீங்கள் வேறு பாதையில் செல்லலாம் என மு.க.ஸ்டாலின் கூறிய போதுதான் திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினேன்.

அப்போதே ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு எனப் பேசினேன். மீண்டும் திமுகவோடு கூட்டணிக்குப் போனோம். தொடர் வெற்றிகள் கிடைத்தன. 2026 இல் திமுக கூட்டணிக்கு வெற்றி கிடைக்கவில்லை. மக்கள் இட்ட கட்டளை வேறாக இருந்தது. யாருமே எதிர்பார்க்காத முடிவை விஜய் எடுத்தார். பாஜகவின் வெறுப்பரசியலுக்கு எதிராக 'ஜோசப் விஜய்' என அறிவித்துக் கொண்டு விஜய் இறங்கினார்.

பாஜகவோடு கூட்டணியில் இருக்கும் அதிமுகவின் ஆதரவை நாடாமல் காங்கிரஸின் ஆதரவை விஜய் கோரினார். அதுவே அவரின் மதச்சார்பற்றத் தன்மையை நிரூபித்தது.

Thiruma
Thiruma

முன்பு நடந்தவற்றையெல்லாம் எண்ணிப் பார்க்கிறேன். ஆதவ் அர்ஜுனா பாஜக அல்லாத மாற்று அணிக்காக என்னிடம் எவ்வளவோ பேசினார். ஆனால், பதவிக்காக ஒரு கூட்டணியை உடைக்கமாட்டேன் எனக் கூறினேன். எல்லாருக்குமான தலைவர் அம்பேத்கர் புத்தகத்தை முதலில் அப்போதைய முதல்வர் ஸ்டாலினும் பின்னர் ராகுல் காந்தியும் வெளியிட்டு நான் பெறுவதாக இருந்தது.

பின்னர் அது நடக்காமல் போனது. அதன்பின் விஜய் வெளியிட்டு நான் புத்தகத்தைப் பெறும் ஏற்பாடோடு ஆதவ்வும் ஜான் ஆரோக்கியசாமியும் என்னை வந்து சந்தித்தார்கள். அப்போதும் அந்த மேடையில் நான் இருந்தால் எங்களின் அணிச்சேர்க்கை பாதிக்கப்படுமென மறுத்தேன்.

தவெகவுடன் இணைந்து பயணிக்க காலம் இட்ட கட்டளையே காரணம். தவெகவை நாங்கள் குறுகிய புத்தியோடு அணுகிவிட்டோம். அவர்கள் வெல்லக்கூடாது என நினைத்தோம். 20 கட்சிகள் ஒன்றாக நிற்கும்போது ஒரே ஒரு கட்சிக்கு மக்கள் 108 இடங்களில் கொடுக்கிறார்கள் என்றால் அது கசப்பாக இருந்தாலும் ஏற்கத்தான் வேண்டும்.

ஜனநாயகத்தில் மக்கள் தீர்ப்பை மதிக்க வேண்டும். மதச்சார்பற்ற சமூகநீதியில் உறுதியாக நிற்போம் என அவர்கள் கூறிய பிறகும் இணைந்து பயணிப்பதைப் பற்றி யோசிக்காமல் இருக்க முடியுமா?

Thiruma
Thiruma

தேர்தலுக்கு முன்பாக என்னிடம் புஸ்ஸி ஆனந்த் பேசினார். அமைச்சர் அருண்ராஜ் பேசினார். தலைவர் உங்களை நட்புசக்தியாகப் பார்க்கின்றார் என்றனர். ஆனாலும் திமுக கூட்டணியில் உறுதியாக இருந்தேன்.

தேர்தலுக்கு முன்பே அதிகாரத்தில் பங்கு எனக் கூறியவர் ஜோசப் விஜய். நான் அவரை ஆதரிக்காவிட்டால் என்னை நம்பும் தம்பிகள் என்னை கேள்வி கேட்கமாட்டார்களா? அதிகார போதை மிக மோசமானது. தந்தையும் மகனும் கூட அதிகாரத்தை விட்டுக் கொடுக்கமாட்டார்கள். அப்படியான அதிகாரத்தை விஜய் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

2009 இல் நான் எம்.பியாக இருந்த போது சோனியா காந்தி தரப்பிலிருந்து அழைத்து, 'நீங்கள் வனத்துறை அமைச்சர் ஆகிறீர்கள். உங்கள் துறைக்கான அதிகாரி இவர்தான்' எனக் கூறிவிட்டார்கள். ஆனால், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவே இல்லை. அப்போது நாம் அதிகாரத்துக்கு வருவது தடுக்கப்பட்டது'' என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User