"'100 நாள் அங்க என்னம்மா பண்ணுவீங்க'னு அப்பாவியாக கேட்டார்" - மறைந்த தந்தை குறித்து கலங்கும் ஆனந்தி

Oct 03, 2026 - 17:30
0
"'100 நாள் அங்க என்னம்மா பண்ணுவீங்க'னு அப்பாவியாக கேட்டார்" - மறைந்த தந்தை குறித்து கலங்கும் ஆனந்தி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆனந்தி கலந்து கொண்டிருந்த நிலையில் அவரது தந்தை திடீரென இறந்து விட, கடந்த வாரம் நிகழ்ச்சியிலிருந்து அவர் வெளியேறியது நினைவிருக்கலாம்.

தந்தையின் 9 வது நாள் சடங்குகளை சொந்த ஊரான கோயம்புத்தூரில் நாளை முடித்து விட்டு திங்கள் கிழமை சென்னை திரும்புவதாகச் சொன்ன ஆனந்தியிடம் அவரது அப்பா குறித்துக் கேட்டோம்.

''மூத்தது மகளா வந்ததும் அவ்வளவு சந்தோஷப்பட்டார்னு அம்மா சொல்வாங்க. ஆனா எனக்கு விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து மத்த சிலர் சொல்வாங்களே, 'ஃப்ரண்ட்ஸ் மாதிரி இருப்போம்'னு, அப்படியெல்லாம் இருந்ததில்ல. காரணம் எங்க அப்பா கொஞ்சம் இல்ல, ரொம்பவே ஸ்ட்ரிக்ட்.

அடிப்படையில வாத்தியார், அதுவும் பி.டி. வாத்தியார்ங்கிறதால டிசிப்ளின் ரொம்ப முக்கியம்கிறதுல கறாரா இருப்பார்.

பையன்கள் மட்டுமில்ல, பொண்ணுங்க சர்க்கிள்ல கூட எனக்கு நிறைய ஃப்ரண்ட்ஸ் கிடையாது. ஃப்ரண்ட்ஸ் கூட அங்க போறேன், இங்க போறேன்னு வெளியிலல்லாம் சுத்த முடியாது.

இதனால முதல்ல அவரை வில்லனாத்தான் பார்த்தேன். ஆனா போகப்போக அவர் செய்யற எல்லாமே நம்ம நல்லதுக்குத்தான்னு புரிஞ்சுகிட்டேன்.

anandhi with her father
anandhi with her father

அதேபோல அதிகாலையில எழுப்பி கிரவுண்டுக்குக் கூட்டிட்டுப் போயிடுவார். ஸ்கூல் நாட்கள்ல ஆரம்பிச்ச அந்தப் பழக்கத்தை இப்ப வரை நான் ஃபாலோ செய்திட்டிருக்கேன். ஸ்கூல்ல இருந்தே ஸ்போர்ட்ஸ்ல நானுமே மாவட்ட அளவுல பதக்கங்கள்லாம் வாங்கியிருக்கேன். எல்லா கிரெடிட்டுமே அப்பாவுக்குதான்.

ஸ்ட்ரிக்டா சொசைட்டியை எதிர்கொள்ற அளவுக்கு தன்னம்பிக்கை, தைரியத்தோட வளர்த்து விடணும்னு நினைச்சாரே தவிர, அவருடைய எந்த விருப்பத்தையும் என் மேல திணிக்கலை.

அவர்கிட்ட பெரிசா நான் சண்டை போட்டதா ஞாபகமே இல்ல. பருவ வயசு வரைக்கும் சரியா வளர்த்துட்டதால அதன்பிறகு எங்களுக்கிடையில் கருத்து வேறுபாடு, சண்டையே இல்ல‌.

அதனாலேயே நான் என்னவா ஆகணும்னு ஆசைப்பட்டார்னு எனக்கு தெரியாமலே போயிடுச்சு.

ஏன்னா நான் படிப்பு முடிஞ்சதும் மீடியாவுக்குப் போறேன்னு சொன்னது அவருக்குப் பிடிக்கலை. இந்த ஃபீல்டு பத்தி அவர் பெரிசா ஆர்வம் காட்ட மாட்டார். சினிமா, டிவி பார்க்கறதெல்லாம் எப்பவாச்சும்தான்.

அதேநேரம் அவருக்கு விருப்பமில்லாட்டியும் என்னுடைய விருப்பத்துக்கு மதிப்பளிச்சு, 'சரி பார்த்துக்கோ'னு சொல்லிட்டார்.

Anandhi - Jana Nayagan
Anandhi - Jana Nayagan

நான் சென்னை வந்து சீரியல், சினிமான்னு வந்த பிறகு கூட அதுபத்தி பெரிசா ஆர்வம் காட்டலை.

'அவளை அவளே பாத்துகிட்டா போதும்'னு எங்க அம்மாகிட்டச் சொல்வாராம்.

சென்னைக்குத் தனியா வந்து மீடியாவுக்குள் நுழைந்து இப்ப வரைக்கும் சர்வவைல் பண்ணிட்டிருக்கிறதுக்குப் பின்னாடியும் அப்பாவின் வளர்ப்புக்குத்தான் முக்கியப் பங்கு இருக்கு.

ஆனா நான் சினிமாவுல இன்னும் கொஞ்சம் உயரம் போயிருந்தா மனுஷன் எதிர்பார்த்த நிம்மதி கிடைச்சிருக்குமோ என்னவோ?

பிக்பாஸ் போறதுக்கு முதல் நாள் சாயங்காலம் கோயம்புத்தூர்ல இருந்த அப்பாகிட்ட ஃபோன்லதான் பேசி, 'போயிட்டு வர்றேன்'னு சொன்னேன். 'பத்திரமா போயிட்டு வாம்மா'னு சொன்னார். அவருக்கு இந்த ஷோ பத்தில்லாம் தெரியாது. 'நூறு நாள் கழிச்சுதான் வீட்டுக்கு வருவேன்'னும் சொன்னேன். அப்பதான், 'அவ்வளவு நாள் ஆகுமா, அத்தனை நாள் அங்க என்னம்மா பண்ணுவீங்க‌'னு கேட்டவர், 'பார்த்து பத்திரமா இரும்மா'னு சொன்னார். அதுதான் அவர் எங்கிட்ட கடைசியா பேசிய வார்த்தைகள்'' என்ற ஆனந்தி.

''கடைசி நிமிடங்கள்ல குடும்பத்தைச் சேர்ந்த ஒருத்தர் கூட பக்கத்துல இல்லாம இந்தப் பூமியை விட்டுப் பிரியறது பெருந் துயரம். அந்தத் துயரத்தை அப்பா அனுபவிச்சிருக்கார்ங்கிறதை நினைகிறப்பதான் மனசை அறுக்குது'' எனக் கண் கலங்குகிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User