புதிய தலைமைச் செயலகம்: ``முதலமைச்சர் விஜய்யின் நோக்கம் இதுதான்" - அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்!

Sep 10, 2026 - 20:00
0
புதிய தலைமைச் செயலகம்: ``முதலமைச்சர் விஜய்யின் நோக்கம் இதுதான்" - அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டுவதற்கான அறிவிப்பு வெளியானதிலிருந்து எதிர்க்கட்சிகளும், தவெக-வின் கூட்டணியில் இருக்கும் சி.பி.ஐ உள்ளிட்ட இடதுசாரிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பட்டினப்பாக்கம் மக்களும் இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். இந்த நிலையில், அமைச்சர் அருண்ராஜ் நாமக்கல்லில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டும் முயற்சி என்பது ஒருமுறை செலுத்தப்படும் மூலதனம்போல. அடுத்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நமது சட்டமன்றமும், அரசுத் துறைகளும் அனைத்து வசதிகளுடனும் இயங்கும் வகையில், ஒருங்கிணைந்த ஒரே கட்டடத்தில் முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பதே முதலமைச்சரின் நோக்கம்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

தற்போதைய செயலகக் கட்டடம், 300 ஆண்டுகள் பழைமையானது என்பதால் கடுமையான இடப்பற்றாக்குறை நிலவுகிறது. மக்களைச் சந்தித்து அவர்களின் கோரிக்கைகளைக் கேட்க முடியாத சூழலும் உள்ளது. எனவேதான், அதிநவீனப் பசுமைத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இந்தக் கட்டடத் திட்டத்தை அறிவித்திருக்கிறோம். எதிர்க்கட்சிகள் இதை வழக்கம்போலக் குற்றம்சாட்டினாலும், இது காலத்தின் தேவ கருதி எடுக்கப்பட்ட முடிவாகும்.

நாங்கள் ஆட்சி அமைத்து 100 நாட்கள்தான் ஆகின்றன. தற்போதைய சட்டம் ஒழுங்கு சிக்கல்களுக்கும் போதை கலாசாரத்திற்கும் கடந்த ஆட்சியில் சரியாகப் பேணப்படாத நடைமுறைகளே காரணம். ஆனால், எதிர்க்கட்சித் தலைவரும் தி.மு.க-வும் கடந்த காலத்தில் குற்றங்களே இல்லாதது போலவும், இந்த 100 நாட்களில்தான் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது போலவும் தவறான பிம்பத்தை உருவாக்க முயல்கின்றனர். ஜனநாயகத்தில் ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் முக்கியம். எதிர்க்கட்சிகள் ஆக்கப்பூர்வமாகச் செயல்பட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். ஆனால், அவர்கள் அரசியல் நோக்கத்தோடு அரசின் மீது பழிபோட நினைக்கும் போதுதான் நாங்கள் பதிலளிக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

அருண்ராஜ்
அருண்ராஜ்

கடந்த தி.மு.க ஆட்சியில் புதிய மருத்துவமனைகளைத் தொடங்கினாலும், பிற இடங்களிலிருந்து ஆட்களைத் திருப்பிவிட்டார்களே தவிர புதிய பணியிடங்களை உருவாக்கவில்லை. 11 புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கினாலும் அவற்றில் இதயவியல், நரம்பியல், சிறுநீரகவியல் போன்ற உயர் சிறப்பு மருத்துவர்கள் நியமிக்கப்படவில்லை. எங்கள் அரசு பொறுப்பேற்ற பின் 284 உயர் சிறப்பு மருத்துவப் பணியிடங்களை உருவாக்கியுள்ளோம். போராட்டம் நடத்தி வந்த செவிலியர்களில் முதற்கட்டமாக 2,500 பேரை பணி நிரந்தரம் செய்துள்ளதோடு, புதிய செவிலியர் பணியிடங்களையும் உருவாக்கியுள்ளோம்.

மேலும், மருந்தாளுநர்கள் (Pharmacists), ஆய்வகத் தொழில்நுட்பனர்கள் (Lab Technicians) என 3,000-க்கும் மேற்பட்ட கூடுதல் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. ராசிபுரம் மருத்துவமனைப் பணிகளுக்கான கூடுதல் நிதியும் ஒதுக்கப்பட்டு விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. த.வெ.க வரவிருக்கும் இரண்டு தொகுதி இடைத்தேர்தல்களிலும் அமோக வெற்றி பெறும். கடந்த நான்கு மாதகால ஆட்சியில் மக்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையையும், எங்களின் செயல்பாடுகள் குறித்த அவர்களின் திருப்தியையும் இந்த இடைத்தேர்தல் வெற்றி தெளிவாகக் காட்டும்." என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User