திருமுருக கிருபானந்த வாரியாரின் பிறந்தநாள் விழா; தமிழக அரசு மரியாதை; ஞானத்திருவளாகம் உருவான வரலாறு!

Aug 25, 2026 - 15:30
0
திருமுருக கிருபானந்த வாரியாரின் பிறந்தநாள் விழா; தமிழக அரசு மரியாதை; ஞானத்திருவளாகம் உருவான வரலாறு!

ன்மிகப் பணியோடு இணைந்து மிகச்சிறப்பான முறையில் தமிழுக்கும் தொண்டாற்றிய திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் 121 பிறந்தநாள் விழா, வேலூர் காங்கேயநல்லூரில் உள்ள அவரின் ஞானத்திருவளாகத்தில் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழ்நாடு அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸ், வாரியார் சுவாமிகளின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தும், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த உருவப்படத்துக்கு மலர்தூவியும் மரியாதை செலுத்தினார்.

வாரியாரின் வாழ்க்கை வரலாறு:

திருமுருக கிருபானந்த கிருபானந்த வாரியார் 1906-ம் வருடம் ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி, வேலூர் மாவட்டம் காட்பாடி அருகிலுள்ள காங்கேயநல்லூர் என்னும் ஊரில் பிறந்தார். தந்தை சிவத்திரு மல்லையதாச பாகவதர். தாய் மாதுஸ்ரீ கனகவல்லியம்மையார். இவர்களின் பதினோரு பிள்ளைகளில் நான்காவதாகப் பிறந்தவர் தான் வாரியார்.

இவரது தந்தையார் இசையிலும், இயலிலும் மாபெரும் புராண வல்லுநர். தந்தையின் அரவணைப்பில் வளர்ந்த வாரியார் கல்வி, இசை, இலக்கியங்களை கற்றுக்கொண்டு தனது 8 வயதிலேயே கவிபாடும் ஆற்றலைப் பெற்றார். தனது 12-வது வயதில் பதினாராயிரம் பண்களை கற்று 18-வது வயதில் சிறப்பாக சொற்பொழிவாற்றும் ஆற்றல் உடையவராக திகழ்ந்தார்.

வாரியாரின் ஞானத்திருவளாகத்தில் மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸ் மரியாதை

தனது 19-வது வயதில், அமிர்தலட்சுமி அம்மையாரைத் திருமணம் புரிந்தார். தனது 23-வது வயதில் சென்னை யானைகவுனி தென்மடம் பிரம்மஸ்ரீ வரதாச்சாரியாரிடம் 4 ஆண்டுகள் வீணை பயிற்சி மேற்கொண்டார். முருக பக்தரான கிருபானந்த வாரியார், நாள்தோறும் ஆன்மிக சொற்பொழிவுகள் நிகழ்த்துவதையும் வழக்கமாக்கியிருந்தார்.

சமயம், இலக்கியம், பேச்சுத்திறன், எழுத்துத்திறன் மற்றும் இசை போன்ற பலத்துறைகளிலும் ஆழ்ந்த புலமைப் பெற்றவர். தனியாக புராண பிரசங்கங்கள் செய்யவும் தொடங்கினார். வாரியாரின் பிரசங்கங்கள் பெரும்பாலும் பேச்சு வழக்கை ஒட்டியே அமைந்திருந்த காரணத்தினால் பாமர மக்களது உள்ளம் கவர்ந்தவரானார்.

`அருள்மொழி அரசு’, `திருப்புகழ் ஜோதி’ என்று அனைவராலும் பாராட்டப்பட்டவர் வாரியார் சுவாமிகள். வாரியாரின் சொற்பொழிவுகள் அநேகமாக நாடகப் பாணியில் இருக்கும். குட்டிக் கதைகள் வரும் நகைச்சுவையுடன் நடைமுறைச் செய்திகளையும் நயம்பட சொல்வதும் இவருக்கே உரிதான சிறப்பம்சமாகும்.

1936-ம் ஆண்டு, தைப்பூச விழாவில், வடலூரில் சமயம் சத்திய ஞான சபையில் அமர்ந்து `திருப்புகழ் அமிர்தம்’ என்ற மாதப் பத்திரிகையை வெளியிடக் கருதி, `கைத்தல நிறைகனி’ என்று தொடங்கும் திருப்புகழுக்கு உரை எழுதியதால், திருப்புகழ் அமிர்தம், திங்கள் இதழாகப் பிரசுரமாகத் தொடங்கியது. சுவாமிகள் அந்த பத்திரிகையை 37 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடத்தினார். இந்த பத்திரிகையில் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு திருப்புகழ் பாடலுக்கு விளக்கவுரை, கந்தர் அலங்கார உரை, கற்பு நெறிக்கதை, பல கட்டுரைகள் எழுதப்பட்டன.

திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் திருவுருவம்

வாரியார் சுவாமிகள், சாதாரணமாக எழுதப் படிக்க தெரிந்த பாமர மக்களும் புரிந்து கொள்ளும்படியாக 500-க்கும் மேற்பட்ட ஆன்மிக மணம் கமழும் கட்டுரைகளை எழுதியுள்ளார். இவர் இயற்றியுள்ள நூல்கள் ஏறத்தாழ 150 ஆகும். இவற்றில் சிவனருட்செல்வர், கந்தவேள் கருணை, இராமகாவியம், மகாபாரதம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. மேலும், குழந்தைகளுக்காக தாத்தா சொன்ன குட்டிக் கதைகள் என்ற நூலையும், பாம்பன் சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்று நூலையும் எழுதியுள்ளார்.

திருவிழாக்காலங்களில் தமிழ்நாட்டில் உள்ள புகழ்பெற்ற கோயில்களில், பொது இடங்களில் சொற்பொழிவாற்றி பக்தர்களின் மனதை கவர்ந்தவர் வாரியார் சுவாமிகள். 1993-ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 19-ம் தேதி, லண்டன் பயணம் மேற்கொண்டு சொற்பொழிவாற்றிவிட்டு 1993-ம் ஆண்டு நவம்பர் மாதம் 7-ம் தேதி தாய்நாடான இந்தியாவுக்குத் திரும்பும் வழியில் ஆகாய விமானத்தில் இயற்கை எய்தினார் வாரியார் சுவாமிகள். சொந்த ஊரான வேலூர் காங்கேயநல்லூரில் இறுதி சடங்குகள் மேற்கொள்ளப்பட்ட இடத்திலேயே முழு உருவச் சிலை நிறுவப்பட்டு, ஞானத்திருவளாகமாகப் பராமரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User