ஜெம் வீரமணி வழக்கு: ஐ.பி.எஸ் அதிகாரிகள் அருண், கண்ணனிடம் விசாரணை - அடுத்து யார்?
சிறுமிகளிடம் தவறாக நடந்த குற்றச்சாட்டில் பிரபல தொழிலதிபரான ஜெம் வீரமணி, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு உதவிய குற்றச்சாட்டில் வீரமணியின் தோழி சாந்தி, அவரின் கணவர் மகேந்திர சிம்கன் உள்பட சிலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த வழக்கில் ஜெம் வீரமணி உள்ளிட்டோர் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், ஜெம் வீரமணியின் வழக்கை சரியாக விசாரிக்கவில்லை என்ற குற்றச்சாட்டில் விபச்சார தடுப்பு பிரிவின் உதவி கமிஷனர் யாஸ்மின், இன்ஸ்பெக்டர், காவலர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்து அவர்கள் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தச் சூழலில்தான் காங்கிரஸ் பிரமுகர் ரஞ்சன்குமார் என்பவர், கடந்த 2024-ம் ஆண்டிலேயே ஜெம் வீரமணி மீது பாலியல் புகாரை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்ததாகக் கூறினார்.

அதைத் தொடர்ந்து ஐ.பி.எஸ் அதிகாரிகள் அருண், கண்ணன் ஆகியோர், அதிரடியாக காத்திருப்போர் பட்டியலுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதனால் ஜெம் வீரமணி வழக்கு காவல்துறை வட்டாரத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ரஞ்சன்குமார், கொடுத்த புகாரை ஏன் 2024-ல் அப்போதைய போலீஸ் அதிகாரிகள் ஏன் சரிவர விசாரிக்கவில்லை என்ற கேள்வி எழுந்தது. அதுதொடர்பாக நடத்திய விசாரணையிலும் ஏற்கெனவே இந்த வழக்கில் கைதானவர்கள் அளித்த தகவலின்படியும் வழக்கை முடித்து வைக்க சில கோடி ரூபாய் பேரம் பேசிய அதிர்ச்சி தகவல்களும் வெளியாகின. இதையடுத்து டி.ஜி.பி மகேஷ்குமார் அகர்வால், சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து உத்தரவிட்டார். தற்போது இந்த சிறப்பு புலனாய்வு குழுவினர் ஜெம் வீரமணி வழக்கை விசாரித்து வருகிறார்கள்.
சிறப்பு புலனாய்வு குழுவினரிடம் ஜெம் வீரமணியால் பாதிக்கப்பட்டவர்கள் அடுத்தடுத்து புகார்களை கொடுத்து வருகிறார்கள். அதன்பேரில் விசாரணை நடத்தி இதுவரை ஜெம் வீரமணி மீது ஏழு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தச் சூழலில்தான் சென்னையின் முன்னாள் போலீஸ் கமிஷனர் அருண், கூடுதல் கமிஷனர் கண்ணன் ஆகியோருக்கு சிறப்பு புலனாய்வு குழுவினர் சம்மன் அனுப்பி விசாரணை நடத்த முடிவு செய்தனர். அதன்படி சென்னை பழைய போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைத்து சிறப்பு புலனாய்வு குழுவினர் ஐ.பி.எஸ் அதிகாரிகள் அருண், கண்ணன் ஆகிய இருவரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தினர். இருவரிடமும் தனித்தனியாக கேள்விகள் கேட்கப்பட்டு அவர்கள் அளித்த பதில்களை சிறப்பு புலனாய்வு குழுவினர் பதிவு செய்திருக்கிறார்கள்.

இந்த வழக்கு விசாரணையை சீக்ரெட்டாக சிறப்பு புலனாய்வு குழுவினர் நடத்தியிருக்கிறார்கள். இந்த விசாரணை தொடர்பான ரிப்போர்ட் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படும் என சிறப்பு புலனாய்வு குழுவினர் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து ஜெம் வீரமணி வழக்கை சரிவர விசாரிக்காத குற்றச்சாட்டில் சிக்கியிருக்கும் இன்னும் சில காவல்துறை அதிகாரிகளிடமும் விசாரணை நடத்த முடிவு செய்திருக்கிறது சிறப்பு புலனாய்வு குழு. குறிப்பாக உதவி கமிஷனர் யாஸ்மின் நீதிமன்றத்தில் சமர்பித்த ரிப்போர்ட் குறித்து மீண்டும் விரிவாக விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவினர் திட்டமிட்டிருக்கிறார்கள். அவர் அளிக்கும் தகவலின் அடிப்படையில் இந்த வழக்கு அடுத்தக்கட்டதுக்கு நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் ஜெம் வீரமணி வழக்கில் தலைமறைவாக இருக்கும் சிலரின் வங்கி கணக்குகளை போலீஸார் முடக்கியிருக்கிறார்கள். அதில் ஒருவரின் வங்கி கணக்கில் மட்டும் 20 கோடி ரூபாய் முடக்கப்பட்டிருப்பதாக சிறப்பு புலனாய்வு குழுவினர் தெரிவித்தனர். மேலும் ஜெம் வீரமணி வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்யவும் போலீஸார் முடிவு செய்திருக்கிறார்கள்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)