உங்களுக்கு லீகல் நோட்டீஸ் வந்திருக்கா? பயப்பட வேண்டாம்! - சட்டம் சொல்வது என்ன? - 4
''உங்களுக்கு லீகல் நோட்டீஸ் அனுப்பியிருக்கோம்!”
இந்த ஒரு வார்த்தையைக் கேட்டாலே, “அய்யய்யோ… நம்ம மேல கோர்ட்ல கேஸ் போட்டுட்டாங்களா?” என்று பலரும் பதற ஆரம்பிச்சுடுவாங்க.
ஆனா, முதல்ல ஒரு விஷயத்தைத் தெளிவா புரிஞ்சுக்கோங்க. லீகல் நோட்டீஸ் வந்ததாலே உங்க மேல கோர்ட்டில் வழக்கு தொடங்கிவிட்டது என்று அர்த்தமில்லை. அதேபோல, நோட்டீஸில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுவிட்டன என்றும் அர்த்தமில்லை .
அப்படின்னா லீகல் நோட்டீஸ் என்றால் என்ன? எப்போது அனுப்புவாங்க? வந்தால் என்ன செய்யணும்?
லீகல் நோட்டீஸ் என்றால் என்ன?
சட்ட ரீதியான ஒரு பிரச்னை குறித்து எதிர்தரப்புக்கு எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்து, குறிப்பிட்ட நடவடிக்கையை எடுக்கச் சொல்லும் அல்லது தனது கோரிக்கை அல்லது சட்ட நிலைப்பாட்டை விளக்கும் அறிவிப்புதான் லீகல் நோட்டீஸ்.
பல நேரங்களில், நீதிமன்றத்தை அணுகுவதற்கு முன் பிரச்னையைத் தீர்த்துக்கொள்ளும் ஒரு வாய்ப்பாகவும் இது இருக்கும்.
உதாரணத்துக்கு, ஒருவர் உங்களிடம் வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுக்கவில்லை என்றால், பணத்தைத் திருப்பித் தருமாறு லீகல் நோட்டீஸ் அனுப்பலாம். அதேபோல், ஒப்பந்தத்தை மீறுவது, சொத்து அல்லது வாடகை தொடர்பான பிரச்னைகள், சில நுகர்வோர் பிரச்னைகள் போன்றவற்றிலும் லீகல் நோட்டீஸ் பயன்படுத்தப்படலாம்.

எப்போது லீகல் நோட்டீஸ் அனுப்ப வேண்டும்?
“எல்லா பிரச்னைக்கும் லீகல் நோட்டீஸ் அனுப்பணுமா?” என்றால்… அப்படி இல்லை.
பிரச்னையின் தன்மை மற்றும் சம்பந்தப்பட்ட சட்டத்தைப் பொறுத்துத்தான் அது தேவைப்படுமா என்பது முடிவு செய்யப்படும்.
சில வழக்குகளில், சட்டப்படி முன் நோட்டீஸ் கட்டாயமாக இருக்கலாம். உதாரணமாக, அரசாங்கத்திற்கோ அல்லது பொது அதிகாரி ஒருவர் தனது அதிகாரப்பூர்வச் செயல்பாட்டில் செய்ததாகக் கூறப்படும் செயலுக்காக அவருக்கு எதிராகவோ, சில சிவில் வழக்குகளைத் தொடர்வதற்கு முன், Civil Procedure Code, 1908 (CPC) பிரிவு 80-ன் கீழ் முன் நோட்டீஸ் வழங்க வேண்டும். பொதுவாக, CPC பிரிவு 80-ன் கீழ் இரண்டு மாத கால முன் நோட்டீஸ் தேவைப்படும். இருப்பினும், அவசர நிவாரணம் தேவைப்படும் சில சூழ்நிலைகளில், நீதிமன்றத்தின் அனுமதியுடன் அந்தக் காலத்தைப் பின்பற்றாமல் வழக்கு தொடர CPC பிரிவு 80(2) வழிவகுக்கிறது.
அதனால், “லீகல் நோட்டீஸ் என்றாலே ஒரு குறிப்பிட்ட சட்டத்தின் பிரிவு” என்று நினைக்கக் கூடாது. சூழ்நிலை மற்றும் சம்பந்தப்பட்ட சட்டத்தைப் பொறுத்து விதிமுறை மாறும்.
யார் லீகல் நோட்டீஸ் அனுப்பலாம்?
பொதுவாக, பாதிக்கப்பட்ட நபரின் சார்பில் வழக்கறிஞர் மூலம் லீகல் நோட்டீஸ் அனுப்பப்படுகிறது.
ஒருவர் தன்னுடைய சார்பிலும் லீகல் நோட்டீஸ் அனுப்ப முடியும்.
இருந்தாலும், சட்டப்பிரிவுகள், கோரிக்கை, காலக்கெடு போன்றவற்றை சரியாகக் குறிப்பிட வேண்டியிருப்பதால், வழக்கறிஞரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.
நோட்டீஸில் என்னென்ன இருக்க வேண்டும்?
“என்ன நடந்தது?” என்பதை மட்டும் எழுதிவிட்டால் அது முழுமையான லீகல் நோட்டீஸ் ஆகிவிடாது.
ஒரு முறையான லீகல் நோட்டீஸில் பொதுவாக, யார் நோட்டீஸ் அனுப்புகிறார்கள், யாருக்கு அனுப்பப்படுகிறது, பிரச்னை என்ன, நடந்த சம்பவங்களின் விவரம் என்ன, கோரிக்கைக்கான சட்ட அல்லது ஒப்பந்த அடிப்படை என்ன, எதிர்தரப்பு என்ன செய்ய வேண்டும், பதில் அளிக்கவோ அல்லது கோரிக்கையை நிறைவேற்றவோ எவ்வளவு கால அவகாசம் வழங்கப்படுகிறது போன்ற விஷயங்கள் தெளிவாக இருக்க வேண்டும்.
லீகல் நோட்டீஸ் வந்துடுச்சா? என்ன செய்யணும்?
முதலில் பயப்படாதீங்க. அதே நேரத்தில், அலட்சியப்படுத்தவும் வேண்டாம்.
நோட்டீஸை முழுமையாகப் படிங்க. அதில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு அல்லது கோரிக்கை உண்மையா என்பதைப் பாருங்க. சம்பந்தப்பட்ட ஆவணங்கள், ரசீதுகள், ஒப்பந்தங்கள், பணப் பரிவர்த்தனை விவரங்கள் போன்றவற்றைச் சேகரித்து வையுங்கள்.

தேவைப்பட்டால், ஒரு வழக்கறிஞரிடம் நோட்டீஸைக் காட்டி சட்ட ஆலோசனை பெறலாம். உங்கள் தரப்பில் பதில் அளிக்க வேண்டியிருந்தால், பதில் நோட்டீஸ் மூலமாக பதில் அளிக்கலாம்.
ஒருவேளை நோட்டீஸில் கொடுக்கப்பட்டுள்ள காலக்கெடுவை அலட்சியப்படுத்தினால், எதிர்தரப்பு அடுத்த சட்ட நடவடிக்கையை எடுக்கலாம். ஆனால், நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு காலக்கெடுவும் தானாகவே சட்டத்தால் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவாகிவிடாது. அது சம்பந்தப்பட்ட சட்டம், ஒப்பந்தம் மற்றும் நோட்டீஸின் தன்மையைப் பொறுத்தது. இருப்பினும், அதை அலட்சியப்படுத்துவதற்கு முன் அதன் சட்ட விளைவுகளைப் புரிந்துகொள்வது அவசியம்.
மேலும், நோட்டீஸுக்குப் பதில் அளிப்பது அல்லது பதில் அளிக்காமல் இருப்பது தொடர்பாக முடிவு எடுக்கும் முன், சம்பந்தப்பட்ட வழக்கைத் தொடருவதற்கான சட்டக் காலவரம்பையும் (Limitation Period) கவனிக்க வேண்டும். நோட்டீஸ் அனுப்பியிருப்பது மட்டுமே எல்லா வழக்குகளிலும் சட்டக் காலவரம்பைத் தானாக நிறுத்திவிடாது அல்லது நீட்டித்துவிடாது .
ஒவ்வொரு லீகல் நோட்டீஸுக்கும் பதில் அளிப்பது எல்லா சூழ்நிலைகளிலும் சட்டப்படி கட்டாயம் என்று சொல்ல முடியாது. ஆனால், நோட்டீஸின் தன்மை, அதற்குப் பொருந்தும் சட்டம், ஒப்பந்த நிபந்தனைகள் மற்றும் அதற்குப் பதிலளிக்காவிட்டால் ஏற்படக்கூடிய விளைவுகளைப் பொறுத்து பதில் அளிப்பது முக்கியமாக இருக்கலாம். எனவே, பதில் அளிக்க வேண்டுமா, அளித்தால் எவ்வாறு அளிக்க வேண்டும் என்பதை உரிய சட்ட ஆலோசனையுடன் முடிவு செய்வது நல்லது
அதனால்…
லீகல் நோட்டீஸ் வந்ததுமே “கோர்ட்ல கேஸ் ஆயிடுச்சு!” என்று பதற வேண்டாம். அதே நேரத்தில், “ஒரு பேப்பர்தானே…” என்று அலட்சியப்படுத்தவும் வேண்டாம். அதில் என்ன சொல்லியிருக்கிறது, எந்தச் சட்டத்தின் அடிப்படையில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது, அதற்குப் பதிலளிக்க வேண்டிய அவசியம் உள்ளதா, காலக்கெடு என்ன என்பவற்றைப் புரிந்துகொண்டு, தேவையான சட்ட ஆலோசனையைப் பெற்று அடுத்த கட்ட நடவடிக்கையை எடுப்பதுதான் சரியான வழி.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)