``தவெகவுக்கு ஆதரவு என்பது வாசனின் முடிவு; நான் அரசை விமர்சிப்பது வேறு!" - சொல்கிறார் தமிழருவி மணியன்

Oct 06, 2026 - 18:01
0
``தவெகவுக்கு ஆதரவு என்பது வாசனின் முடிவு; நான் அரசை விமர்சிப்பது வேறு!" - சொல்கிறார் தமிழருவி மணியன்

நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கு முன் தன்னுடைய காமராஜர் மக்கள் கட்சியை தமிழ் மாநில காங்கிரஸுடன் இணைத்தவர் தமிழருவி மணியன்.

தொடர்ந்து, `` `இன்னைக்கு இருக்கிற அரசியல் சூழல் உங்களுக்குச் சரியா இருக்காது. நல்ல மாற்றம் வரணுமென நீங்க ஆசைப்பட்டீங்க. அது நடந்ததா? அதனால் அரசியலை விட்டு விலகி, புத்தக வாசிப்பு, ஆன்மிகம்னு உங்களுக்குப் பிடித்த விஷயங்களில் கவனம் செலுத்துங்க'ன்னு என் மனைவி தன்னுடைய கடைசி நாள்களில் சொன்னாங்க. அதனால் இனி அந்தப் பாதையில்தான் என்னுடைய பயணம் இருக்கும்" எனச் சொல்லி தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கினார்.

இந்தச் சூழலில் தற்போது தமிழ் மாநில காங்கிரஸ் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் தவெகவை ஆதரிப்பதாகச் சொல்லியிருக்கிறது.

அதேவேளையில் கடந்த சில தினங்களுக்கு முன் தவெக சட்டமன்ற உறுப்பினர்களைக் கடுமையாக விமர்சித்து வீடியோ வெளியிட்டிருந்தார் தமிழருவி மணியன்.

gk vasan

``தமிழை சரியாக வாசிக்கவே தெரியாதவர்களாகத்தான் பெரும்பாலான உறுப்பினர்கள் இருக்கின்றனர். என்னுடைய பேச்சு இப்படிதான் இருக்கும் என ஆணவத்துடன் பேசுகிறார், நிதியமைச்சர். முதலமைச்சரின் புகழ்பாடும் வெறும் ரசிகர்களாகவே இருக்கிறார்கள். தமிழகச் சட்டமன்ற வரலாற்றில் இவ்வளவு தரம் தாழ்ந்த நிலையில் உறுப்பினர்கள் இடம் பெற்றிருப்பது இதுவே முதன் முறை" என வீடியோவில் பேசியிருந்தார். மேலும் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெக-வுக்குத் தாவியதையும் 'குதிரை பேரம்' எனக் கடுமையாகக் குறிப்பிட்டிருந்தார்.

தமிழருவி மணியன்

இந்தப் பின்னணியில் அவரிடம் பேசினோம்.

''என்னை நம்பி என்னுடன் பயணித்தவர்களைக் கேட்டுதான் தமிழ் மாநில காங்கிரஸுடன் காமராஜர் மக்கள் கட்சியை இணைத்தேன். அப்போதே அவர்களிடம் இன்னொரு செய்தியையும் சொல்லி விட்டேன். உங்களுக்கு விருப்பமிருப்பவர்கள் இந்த முடிவோடு பயணிக்கலாம். விருப்பமில்லாதவர்கள் அவரவர் பாதையில் செல்லலாம் என்பதுதான் அது. ஆனால் எல்லோருமே என் முடிவை ஆதரித்தார்கள்.

என்னால் திமுக அதிமுக-வுடன் போய் கட்சியை சேர்க்க முடியாது. பாஜக பக்கமிருந்து அழைப்புகள் வந்தன. அந்தக் கட்சி பக்கம் செல்கிற முடிவை எப்படி நான் எடுப்பேன்? எனவேதான் வாசன் கட்சியோடு இணைத்தோம்.

TVK Vijay
TVK Vijay

இணைப்புக்குப் பிறகு இரு கட்சிகள் ஒரே கட்சி என்றாகிவிட்ட பிறகு அந்தக் கட்சியின் தலைவராக வாசன் எடுக்கும் முடிவே இறுதியானது. கடந்த தேர்தலில் அந்தக் கட்சி அதிமுக - பாஜக அணியில் இருந்ததையே அவர்களில் பலர் விரும்பவில்லை.

எனவே தற்போது நிர்வாகிகள், தொண்டர்கள் கருத்தைக் கேட்டு அதனடிப்படையில் தவெக-வுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்.

இப்படியொரு முடிவை எடுத்ததற்கு முன் என்னையும் வந்து சந்தித்தார் வாசன். 'உங்கள் நிர்வாகிகள் தொண்டர்கள் என்ன சொல்கிறார்களோ அதைச் செய்கிறீர்கள், இதில் என்ன இருக்கிறது' எனச் சொல்லி விட்டேன்.

அதே நேரம் தமிழக வெற்றிக் கழக அரசு, எம்.எல்.ஏ.க்களின் செயல்பாடு குறித்து மாநிலத்தின் குடிமகனாக எனக்கும் கருத்திருக்குமில்லையா, அதை நான் பேசினேன்.

தீவிர அரசியல் வேண்டாம் என நான் எடுத்த முடிவு இப்போதும் அப்படியேதான் இருக்கிறது. இருந்தபோதும் சூழ்நிலைக்கேற்ப சில நேரங்களில் என்னுடைய கருத்தைச் சொல்ல விரும்புகிறேன்.

மற்ற நேரங்களில் இலக்கியம், அந்தக் காலத்து நல்ல திரைப்படங்களை விமர்சனம் செய்வது, ஆன்மிகம் என என்னுடைய மீதிக் காலத்தை நகர்த்தலாமென நினைக்கிறேன்" என்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User