"கொள்கை எதிரிகளோடு மோதினோம், இந்த கோமாளிக் கூட்டத்தை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டோம்"- ஸ்டாலின்

Oct 04, 2026 - 09:30
0
"கொள்கை எதிரிகளோடு மோதினோம், இந்த கோமாளிக் கூட்டத்தை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டோம்"- ஸ்டாலின்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் பரந்தாமனை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று (அக். 3) பிரசாரம் செய்தார்.

பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், " மதுராந்தகம் தொகுதியில் நமது வெல்லும் வேட்பாளர், அருமைச் சகோதரர் வழக்கறிஞர் பரந்தாமன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு நான் வந்திருக்கிறேன். போன முறை ’மிஸ்’ ஆகிவிட்டது. இந்த முறை ‘மிஸ்’ ஆகக் கூடாது!

இந்தத் தேர்தல் வழக்கமான தேர்தல் இல்லை. தவிர்க்க முடியாத காரணத்தால் நடக்கிற தேர்தலும் இல்லை. தவிர்த்திருக்க வேண்டிய தேர்தல்! உங்கள் மேல் திணிக்கப்பட்ட தேர்தல்.

திமுக தலைவர் ஸ்டாலின்
திமுக தலைவர் ஸ்டாலின்

நான்கு மாதங்களுக்கு முன்னாடி நீங்கள் ஒருவரை ஜெயிக்க வைத்தீர்கள்! மெஜாரிட்டி இல்லாத இந்த ஆட்சிக்கு முட்டுக் கொடுப்பதற்காக அவர்கள் ராஜினாமா செய்துவிட்டு, திரும்ப வந்து வெட்கமே இல்லாமல் வேறு சின்னத்தில் வாக்கு கேட்கிறார்கள்.

அதுவும் ஐந்து ஆண்டுகளாக அவர் எதுவும் செய்யவில்லை என்று, அவரை வைத்துக்கொண்டே அமைச்சர் சொல்கிறார். அதைச் சொல்லிவிட்டு, அவருக்கே வாக்கு கேட்கிறார். இதைவிட மதுராந்தகம் மக்களான உங்களை கேவலப்படுத்த முடியுமா?

தமிழ்நாட்டில் ரிசல்ட் வந்து ஜெயித்த கையோடு, ஒரு MLA ராஜினாமா பண்ணுவது இதற்கு முன்னால் நடந்திருக்கிறதா? இல்லவே இல்லை! அப்பட்டமாக நடந்த குதிரை பேரத்தால் இந்தத் தேர்தல் நடக்கிறது.

ஆனால், நாம் இப்படி சொன்னால் முதலமைச்சர் என்ன பேசுகிறார் தெரியுமா? ”MLA பதவியை ரிசைன் செய்துவிட்டுத்தான் அவங்க த.வெ.க.வில் சேர்ந்திருக்காங்களாம்” - பெரிய கண்டுபிடிப்பு! ரிசைன் பண்ணவில்லை என்றால், கட்சித் தாவல் தடைச் சட்டம் பாய்ந்துவிடும்.

அதனால்தானே பொய்யான காரணத்தைச் சொல்லி, சபாநாயகரிடம் ராஜினாமா கடிதம் கொடுத்தார்கள்! அதையும் சேர்த்துச் சொல்லியிருக்கலாமே CM சார்!

மக்களை ஏமாற்றுகிற முதலமைச்சருக்கும், உங்களை ஏமாற்றுகிற ஆளுங்கட்சி வேட்பாளருக்கும் தக்க பாடத்தை மதுராந்தகம் மக்கள் தர வேண்டும்!

மதுராந்தகம் தொகுதியில் ஸ்டாலின் பிரச்சாரம்
மதுராந்தகம் தொகுதியில் ஸ்டாலின் பிரச்சாரம்

தினமும் நான் தொலைக்காட்சிகளில் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். சமூக வலைத்தளங்களிலும் பார்ப்பதுண்டு. தவெக வேட்பாளருக்கு எதிர்ப்பு, அவர் விரட்டி அடிக்கப்படுகிறார், ஆளுங்கட்சி வேட்பாளரால் தொகுதிக்குள்ளேயே நுழைய முடியவில்லை என்று செய்திகள் தொடர்ந்து வருகின்றன.

மதுராந்தகம் மக்கள் தெளிவானவர்கள்! அதுமட்டுமா, மானமுள்ளவர்கள், சுயமரியாதை உணர்வு உள்ளவர்கள் என்று காட்டிவிட்டீர்கள்! உங்களுடைய இந்த ரோஷத்திற்காக என்னுடைய பாராட்டுகளையும் நன்றியையும் மிகுந்த பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆளுங்கட்சிக்காரர்கள் எவ்வளவு திமிராகப் பேசுகிறார்கள் தெரியுமா? “த.வெ.க. சார்பில் நாங்கள் ஒரு நாயை நிற்க வைத்தால் கூட மக்கள் வாக்களிப்பார்கள்” என்று பேசுகிறார்கள்! என்ன கொடுமை பாருங்கள்! எவ்வளவு கேவலமான நினைப்பு! இதையெல்லாம் தமிழ்நாட்டில் கேட்கவே, பார்க்கவே அருவெறுப்பாக, அசிங்கமாக இருக்கிறது.

மக்களை இளக்காரமாக நினைக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களின் திமிரை நீங்கள்தான் அடக்கிக் காட்ட வேண்டும். செய்வீர்களா? இதே உறுதியோடு இறுதி வரை இருந்து - ஆளுங்கட்சிக்கும், முதலமைச்சருக்கும் தக்க பாடம் புகட்ட வேண்டும்!

நாம் செய்தது ஒரே தவறுதான்! தேர்தலுக்கு முன்பு, த.வெ.க.வை நாம் ஒரு பொருட்டாகவே மதிக்காமல் இருந்துவிட்டோம். நாம் கொள்கை எதிரிகளோடு மோதினோம்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

இந்தக் கோமாளிக் கூட்டத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டோம். அதோடு சேர்த்து, S.I.R.-இல் பல லட்சம் மக்களின் வாக்குரிமையும் பறிக்கப்பட்டது.

இப்படி ஒருசில காரணங்களால்தான், நம்முடைய வெற்றி வாய்ப்பை இழந்தோம். ஆனால், ஆட்சியமைத்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பதுதான் யதார்த்தம்" என்று பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User