`எங்களுக்கு வர நேரமில்லை' - இறந்த தந்தை; இறுதிச்சடங்கை வீடியோ காலில் பார்த்த மகள்கள்
மும்பையை சேர்ந்த சிவ்சரண் ராம் ரத்தன் குப்தா. இவருக்கு மூன்று பெண் குழந்தைகள் இருக்கின்றனர். மூன்று பேருக்கும் திருமணம் செய்து கொடுத்துவிட்டார். அவர்கள் தங்களது குடும்பத்தோடு மகிழ்ச்சியாக இருக்கின்றனர். குப்தா தனது மூன்று மகள்களை வளர்ப்பதிலும் அவர்களுக்குக் கல்வியளிப்பதிலும், அவர்களுக்கு திருமணம் செய்து கொடுப்பதிலும் தனது வாழ்நாளை முழுமையாக அர்ப்பணித்தார். அவரது மகள்களில் இருவர் ஆசிரியர்களானார்கள். ஆனால் சிவ்சரண் தனது மனைவியோடு ஹரியானாவில் உள்ள சோனிபட் முதியோர் இல்லத்தில் வசித்து வந்தார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிவ்சரண் மனைவி இறந்துவிட்ட நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிவ்சரணுக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவரது உடல்நிலை மோசமடைந்து இறந்துபோனார். இது குறித்து மும்பை, நேபாள் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் வசிக்கும் மூன்று மகள்களுக்கும் முதியோர் இல்ல நிர்வாகம் தகவல் கொடுத்தது. ஆனால் மூன்று பேரும் தங்களுக்கு நேரில் வர நேரமில்லை என்று தெரிவித்துவிட்டனர்.

மகள்களால் இறுதிச் சடங்கில் பங்கேற்க சோனிபட் செல்ல இயலாததால், அவர்கள் காணொளி அழைப்பு (வீடியோ கால்) வாயிலாக அதில் கலந்துகொண்டனர்.
முதியோர் இல்ல நிர்வாகம் மற்றும் உள்ளூர் சமூகத்தினரின் உதவியுடன் தகனச் சடங்கு மேற்கொள்ளப்பட்டது. முதியோர் இல்ல நிர்வாகி ஆனந்த் குமார் இது குறித்து கூறுகையில், '' சிவ்சரண் தொலைபேசி மூலம் தனது மகள்களிடம் அடிக்கடி பேசி வந்தார். ஆனால், அவர் உடல்நலம் பாதிக்கப்பட்ட பிறகு, அவர்களின் தொலைபேசி அழைப்புகள் குறைந்துவிட்டன. சிவசரணிடம் ஒரு தொலைபேசி இருந்தது. அதன் மூலம் அவர் தனது மகள்களிடம் பேசி வந்தார். அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட பிறகு, அவர்களின் அழைப்புகள் நின்றுவிட்டன. சிவ்சரண் உடல்நிலை மோசமடைந்து வருவது குறித்து அவரது இறப்புக்கு சுமார் 20 நாட்களுக்கு முன்பே மகள்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் அவரைப் பார்க்க வரவில்லை.
அவரது உடல்நிலை குறித்து நாங்கள் அவர்களுக்குத் தெரிவித்தோம், ஆனாலும் அவர்களால் வர முடியவில்லை. சிவ்சரண் இறந்த பிறகு, நிர்வாகத்தினர் மீண்டும் அவரது மகள்களைத் தொடர்புகொண்டு, அவர்கள் சோனிபட் வந்தால் அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய முடியும் என்று கூறினர். ஆனால், பயணம் செய்வதற்குத் தங்களுக்கு நேரம் இல்லை என்று அவர்கள் கூறி விட்டனர். அதன்பின்னர், அந்தப் பெண்கள் காணொளி அழைப்பு மூலம் தகன நிகழ்வில் இணைந்து, தங்கள் தந்தையின் இறுதிச் சடங்குகளைத் தொலைவிலிருந்தே பார்த்தனர்.
நேபாளத்தில் ஆசிரியராகப் பணியாற்றும் அனிதா, தனது தந்தையின் இறுதிச் சடங்குகளைச் சரியாகச் செய்யுமாறு கேட்டுக்கொண்டு, இணையவழியாக ரூ. 5,100-ஐயும் அனுப்பினார். எரிப்புச் சடங்கு முடிந்த பிறகு, இறுதிச் சடங்கு நிகழ்வுகளின் காணொளிகளைத் தங்களுக்கு அனுப்புமாறு மகள்கள் கேட்டனர். இறுதிச்சடங்கின் போது அவர்களில் ஒருவர், இதற்கு இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்? நாங்கள் சாப்பிடவும் குளிக்கவும் வேண்டியுள்ளது," என்று கேட்டார்.
குப்தாவின் அஸ்தியைத் தங்களுக்குத் தருமாறு அவரது குடும்பத்தினர் ஆரம்பத்தில் கேட்டுக்கொண்டனர். ஆனால் பின்னர், சோனிபட் நகருக்கு நேரில் வரத் தங்களுக்கு நேரமில்லை என்று முதியோர் இல்ல நிர்வாகத்திடம் தெரிவித்த அவர்கள், அந்த அஸ்தியை கங்கை நதியில் கரைக்குமாறு கேட்டுக்கொண்டனர்'' என்றார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)