வெள்ளத்தில் சிக்கியவரை உயிரை கொடுத்து காப்பாற்றிய மீட்ப்புப் பணியாளர் - உடலை அவமதித்த அதிகாரிகள்
கேரள மாநிலம் திருவனந்தபுரம் கல்லியூர் கிழக்கே தெற்றிவிளைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவர் கண்ணூர் செறுபுழா மீந்துள்ளி பகுதியில் நீச்சல் பயிற்சியாளராகவும், மீட்புப்பணியாளராகவும் பணிபுரிந்துவந்தார். கேரளத்தில் பெய்துவரும் மழையால் கடந்த சனிக்கிழமை அதிகாலையில் வெள்ளப்பெருக்கு நிலச்சரிவு உள்ளிட்டவை ஏற்பட்டன.
மீந்துள்ளி பகுதியில் வெள்ளப்பெருக்கில் சிக்கிய பென்னி என்பவரை காப்பாற்றச் சென்றார் ராஜேஷ். கையில் கயிற்றைப் பிடித்தபடி சென்ற ராஜேஷ் தனது லைஃப் ஜாக்கெட்டை பென்னிக்கு அணிவித்து அவரை கரைக்கு அழைத்துவந்தார். அப்போது திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் கயிற்றில் இருந்து ராஜேஷின் கை நழுவிச்சென்றது. இதனால் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டார்.
கடந்த சனிக்கிழமை தண்ணீரில் மூழ்கிய ராஜேஷ் கடந்த செவ்வாய்க்கிழமை சடலமாக மீட்கப்பட்டார். அவரது உடல் கண்ணூர் பரியாரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, கடந்த புதன்கிழமை திருவனந்தபுரத்தில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டுசெல்லப்பட்டு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்யப்பட்டது.
அவரது உடலுக்கு கேரள முதல்வர் வி.டி.சதீசன் மற்றும் அமைச்சர்களும், அரசியல் பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தினர். அப்போது, அப்பாவின் முகத்தை பார்க்கவேண்டும் என ராஜேஷின் மகன் அழுதது, முதல்வர் வி.டி.சதீசனை கண்கலங்கச் செய்தது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வி.டி.சதீசன், மீட்புப்பணியின்போது உயிரிழந்த ராஜேஷின் வீடு கட்டும் பணி பாதியில் நிற்கிறது. அவரது வீட்டை அரசு செலவில் முழுமையாக கட்டிக்கொடுப்பதாக அறிவித்திருந்தார். இந்த நிலையில் இறந்து நான்குநாட்கள் ஆன ராஜேஷின் உடலை 10 மணி நேரம் ஃபிரீசர் இல்லாத ஆம்புலன்ஸில் கொண்டுசென்றதாக சர்ச்சை எழுந்துள்ளது.

பரியாரத்தில் உள்ள கண்ணூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை முடிந்து, செவ்வாய்க்கிழமை இரவு 8:30 மணிக்கு ராஜேஷின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. உடல் அழுகத் தொடங்கியிருந்ததாலும், திருவனந்தபுரத்திற்கு நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டியிருந்ததாலும், ஃபிரீசர் வசதி கொண்ட ஆம்புலன்ஸில் அனுப்பும்படி உறவினர்கள் கோரினர்.
ஆனால், 'போதிய நிதி இல்லை' என்ற காரணத்தைக் கூறி மருத்துவக் கல்லூரி நிர்வாகம் அந்தக் கோரிக்கையை நிராகரித்ததுடன், ஃபிரீசர் வசதியற்ற சாதாரண ஆம்புலன்ஸிலேயே உடலை எடுத்துச் செல்லுமாறு உறவினர்களிடம் வலியுறுத்தியுள்ளது. மேலும், உடலைப் பாதுகாக்கும் 'எம்பாமிங்' முறையையும் அதிகாரிகள் செய்யாமல், உடலை பிளாஸ்டிக் ஷீட்டில் சுற்றி திருவனந்தபுரத்திற்கு அனுப்பி வைத்துள்ளது. பயணத்தின் இடையே உடலிலிருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியதால், திருச்சூர் மாவட்டம் சாவக்காடு பகுதியில் வைத்து பிரீசர் வசதி கொண்ட மற்றொரு ஆம்புலன்ஸுக்கு உடல் மாற்றப்பட்டு கொண்டுசெல்லப்பட்டது. இதன் காட்சிகளும் வெளியாகி சமூக வலைதளங்களில் பரவின.

வீட்டிற்குக் கொண்டு சென்றதும் உடலைத் திறந்து காட்டக் கூடாது என்று ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தலும் வழங்கப்பட்டுள்ளது. புதன்கிழமை இறுதிச்சடங்குக்கு முன்பு, "தந்தை முகத்தை ஒருமுறையாவது பார்க்க வேண்டும்" என்று அவரது மகன் கதறி அழுதும் முகத்தை காட்டாததற்கு இதுதான் காரணம் எனக்கூறப்படுகிறது.
ஆம்புலன்ஸில் உடலைக் கொண்டுவரும்போது கடுமையான துர்நாற்றம் வீசியதால், ஆம்புலன்ஸ் திருச்சூர் சாவக்காட்டில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு முன்னால் நிறுத்தப்பட்டு, ஃபிரீஸர் வசதி கொண்ட வேறொரு ஆம்புலன்ஸுக்கு உடலை ஓட்டுநர்கள் மாற்றிய சி.சி.டி.வி காட்சிகள் வெளியான பிறகே இந்த விவகாரம் குறித்த விவாதம் சூடுபிடித்துள்ளது.
உடலை ஃபிரீஸருக்கு மாற்றியிருக்காவிட்டால், உடல் பாகங்கள் தனித்தனியாகப் பிரிந்து போயிருக்கும் என்று ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களான முகமது நியாஸ் மற்றும் முகமது தன்வீர் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.இச்சம்பவத்தில் பரியாரம் மருத்துவக் கல்லூரியின் அலட்சியம் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்குமாறு கண்ணூர் மாவட்ட கலெக்டர் பி.விஷ்ணுராஜ், மருத்துவக் கல்லூரி கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளார். ஸ்பெஷல் பிராஞ்சும் விசாரணையைத் தொடங்கியுள்ளது. ஃபிரீஸர் இல்லை என்ற விஷயம் தன் கவனத்திற்கு வரவில்லை என பய்யன்னூர் தாசில்தார் கூறியுள்ளார். அதே சமயம் இதுகுறித்து புகார் அளிப்பது பற்றி இன்னும் முடிவுசெய்யவில்லை என்று ராஜேஷின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)