நள்ளிரவு டெல்லி ஃபோன்கால்... கேன்சலாகிறதா அமித் ஷா - எடப்பாடி சந்திப்பு?

Aug 19, 2026 - 18:01
0
நள்ளிரவு டெல்லி ஃபோன்கால்...
கேன்சலாகிறதா அமித் ஷா - எடப்பாடி சந்திப்பு?

தென்னிந்திய முதல்வர்கள் மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக, இன்றிரவு சென்னை வருகிறார் அமித் ஷா. கோவளத்திலுள்ள ஒரு தனியார் நட்சத்திர விடுதியில் தங்குபவர், பின்னிரவில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரை சந்திக்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. நாமும் அதை செய்தியாக்கி இருந்தோம்.

இந்தச்சூழலில், அந்தச் சந்திப்பு கடைசி நிமிடத்தில் ரத்தானதாகச் சொல்கின்றன பா.ஜ.க வட்டாரங்கள். நேற்று நள்ளிரவு டெல்லியிலிருந்து வந்த ஃபோன்காலைத் தொடர்ந்து அமித் ஷா - எடப்பாடியின் சந்திப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அமித் ஷா
அமித் ஷா

அதுகுறித்து நம்மிடம் பேசிய பா.ஜ.க-வின் சீனியர் நிர்வாகிகள் சிலர், "அ.தி.மு.க உட்கட்சி பிரச்னையைப் பேசி முடிக்கத்தான், எடப்பாடியை அந்த தனியார் ஹோட்டலுக்கு வரச் சொன்னார் அமித் ஷா. ஆனால், தன் கட்சியின் உள்விவகாரங்களில் டெல்லி தலையிட்டு பஞ்சாயத்து செய்வதை எடப்பாடி சுத்தமாக விரும்பவில்லை.

டெல்லிக்கும் தனக்கும் பாலமாக இருக்கும் ஒரு கட்டட தொழிலதிபரிடம், 'கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்த்துக்கொள்ள மாட்டேன். அதேபோல, வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டவர்களிடம் இருந்து பறித்த கட்சிப் பொறுப்புகளையும் மீண்டும் அளிக்கும் எண்ணமில்லை. இதுதொடர்பாகப் பேசுவதாக இருந்தால், அப்படியொரு சந்திப்பே தேவையில்லை' என்று கூறிவிட்டார்.

இந்தத் தகவல், கட்டட தொழிலதிபரின் ஃபோன்கால் மூலமாக அமித் ஷா தரப்புக்குச் செல்லவும், டெல்லி சூடாகிவிட்டது. 'அ.தி.மு.க-வை வலுப்படுத்துவதற்குத்தானே ஆலோசனை சொல்கிறோம். அதை ஏன் கேட்க மறுக்கிறார்...' என்று கொதித்தவர்கள், எடப்பாடியுடனான சந்திப்பை கேன்சல் செய்துவிட்டனர். இந்தச்சூழலில், டி.டி.வி.தினகரன், அன்புமணி ராமதாஸ் ஆகியோரையும் சந்தித்தால் நன்றாக இருக்காதென, அந்தச் சந்திப்புகளும் ரத்தாகிவிட்டன.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

இன்றிரவு கோவளத்திலுள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் தங்கும் அமித் ஷா, தென்னிந்திய முதல்வர்கள் மாநாட்டை நாளை காலை 10:30 மணிக்கு தலைமையேற்று நடத்துகிறார். அதைத்தொடர்ந்து மாநில முதல்வர்களுடன் விருந்து எடுத்துக்கொள்பவர், மதியம் 2:30 மணியளவில் தமிழ்நாடு பா.ஜ.க நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசுகிறார். அதை முடித்துக்கொண்டு நாளை மாலையே டெல்லி புறப்படுகிறார் அமித் ஷா" என்கிறார்கள்.

அமித் ஷாவுடன் மனக்கசப்பு உருவாகியிருக்கும் சூழலில், சென்னை விமானநிலையத்தில் அவரை வரவேற்க எடப்பாடி பழனிசாமி நேரில் செல்லவில்லையாம். தனக்குப் பதிலாக அக்ரி கிருஷ்ணமூர்த்தியையும் ஓ.எஸ்.மணியனையும் எடப்பாடி அனுப்பி வைக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

எடப்பாடி பழனிசாமி, அமித் ஷா

திருவண்ணாமலை கோவில் தரிசனத்துக்காக சமீபத்தில் அமித் ஷா வந்திருந்தபோது, அவரை விமானநிலையத்தில் வரவேற்றார் எடப்பாடி பழனிசாமி. அப்போது, எடப்பாடியிடம் முகம் கொடுத்துப் பேசவில்லை அமித் ஷா. அதையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டுதான், அமித் ஷாவை இம்முறை வரவேற்க எடப்பாடி விரும்பவில்லை என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

இந்தச் சூழலில், ''டெல்லியை தேவையில்லாமல் பகைத்துக்கொள்ள வேண்டாம். அமித் ஷாவை வரவேற்று, அவரை சந்திப்பதே உத்தமம்..." என அ.தி.மு.க சீனியர்கள் சிலர் எடப்பாடி பழனிசாமியை நெருக்குகிறார்கள். ஆனால், எடப்பாடி பழனிசாமியின் மனம் மாறுமா என்பதுதான் தெரியவில்லை.!

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User