"​எனது தோற்றத்தை பார்த்து பல நடிகைகள் உடன் நடிக்க மறுத்தனர்" - நடிகர் இந்திரன்ஸ் உருக்கம்!

Jun 15, 2026 - 23:00
0
"​எனது தோற்றத்தை பார்த்து பல நடிகைகள் உடன் நடிக்க மறுத்தனர்" - நடிகர் இந்திரன்ஸ் உருக்கம்!

தையல் கலைஞராக வாழ்க்கையைத் தொடங்கியவர் கேரளாவைச் சேர்ந்த நடிகர் இந்திரன்ஸ். பின்னர் நகைச்சுவை நடிகராகவும், தற்போது பான்-இந்தியா அளவில் கவனிக்கப்படும் கதாபாத்திரங்களில் நடிப்பதன் மூலம் மலையாள சினிமாவின் பெருமையாக மாறி இருக்கிறார். நடிகர் இந்திரன்ஸ் நடித்த 'சின்ன சின்ன ஆசை' சினிமா ஜூன் 19-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த சினிமாவில் இந்திரன்ஸுக்கு ஜோடியாக மதுபாலா நடிக்கிறார். வாரணாசியின் பின்னணியில் முழுமையாக உருவாக்கப்பட்டுள்ள ஒரு 'ஃபீல் குட்' காதல் திரைப்படம் இது. 'ஹோம்' திரைப்படத்திற்காக தேசிய விருது பெற்றவரும், சமீபத்தில் 'கருப்பு' என்ற தமிழ் படம் மூலம் தென்னிந்திய அளவில் கவனிக்கப்பட்டவருமான இந்திரன்ஸ், இந்தப் படத்தில் முற்றிலும் மாறுபட்ட வகையில் காதலை வெளிப்படுத்தும் வகையில்  நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, இந்த சினிமா மூலம் ஒரு வலுவான கதாபாத்திரத்துடன் மதுபாலா மலையாள சினிமாவுக்கு திரும்புகிறார். அறிமுக இயக்குநர் வர்ஷா வாசுதேவ் இயக்கும் 'சின்ன சின்ன ஆசை' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் இந்திரன்ஸ் பேசியது கவனம் பெற்றுள்ளது.

நடிகர் இந்திரன்ஸ் மற்றும் நடிகை மதுபாலா

நடிகர் இந்திரன்ஸ் அந்த நிகழ்ச்சியில் பேசுகையில், ​‘பல சினிமா வாய்ப்புகள் வந்தாலும், சில உயிர்ப்புள்ள கதாபாத்திரங்கள் கிடைக்கும்போது என்னுள் ஒரு தயக்கம் இருக்கும். அத்தகைய ஒரு படம் தான் ‘சின்ன சின்ன ஆசை’. இந்த சினிமாவுக்காக கதையைக் கேட்டவுடன் நான் சரி என்று நடிக்க ஒப்புக்கொண்டுவிட்டேன். மதுபாலா மேடம் தான் கதாநாயகி என்று என்னிடம் சொன்னார்கள். இந்த சினிமாவில் கதாநாயகனாக நடிப்பது யார் என்று கேட்டால் என் பெயரைச் சொல்லிவிடாதீர்கள், இன்னும் முடிவு செய்யவில்லை என்று சொல்லுங்கள் என தயாரிப்பாளர்களிடம் கூறச்சொல்ல வேண்டும் என்று நான் நினைத்தேன். ஏனென்றால், நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்தவர் என்று தெரிந்தால் அவர்கள் என்னுடன் நடிக்கத் தயக்கம் காட்டலாம். ஒருவேளை நடிக்க விருப்பம் இருந்தாலும் வரமாட்டார்கள். பல படங்களில் எனக்கு இதுபோல் நடந்துள்ளது.

நிகழ்ச்சியில் பேசும் நடிகர் இந்திரன்ஸ்

என்னுடன் நடிக்க உள்ளவர்கள் என பெரிய நடிகைகளின் பெயர்கள் சொல்லப்படும், ஆனால் இறுதியில் அவர்கள் படத்தில் நடிக்கவரமாட்டார்கள். எனது முந்தைய வேடங்களையும், தோற்றங்களையும் கண்டு பல நடிகைகள் என்னுடன் நடிக்கத் தயங்கியுள்ளனர். அதனால் தான் மதுபாலா இந்த படத்தில் நடிக்க்க வருவாரா என்பதில் எனக்குச் சந்தேகம் இருந்தது. கதை பிடித்து மதுபாலா வரச் சம்மதித்ததால் எனது அந்த கவலை நீங்கியது. ஜூன் 19-ம் தேதி சினிமா திரையரங்குகளுக்கு வரும்போது, ரசிகர்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என்ற படபடப்புடன் காத்திருக்கிறேன். எனது ஆரம்பகால வாழ்க்கையில் நல்ல கதாநாயகிகளுடன் நடிக்க வேண்டும் என்பது பெரிய ஆசையாக இருந்தது. அப்போது ஹேமா மாலினியுடன் நடிக்க்கவேண்டும் என மனதில் வைத்திருந்தேன். அது நடக்கவில்லை, ஆனால் அதே குடும்பத்தைச் சேர்ந்த மதுபாலாவை நாயகியாகப் பெற்றதில் மகிழ்ச்சி. தலைமுறை மாறியபோது, நான் அவர்களுக்கு ஏற்ற ஒரு மனிதனாக மாறிவிட்டேன். ஒதுங்கிவிடாமல் தொடர்ந்து பயணித்ததால் தான் இந்த இடத்திற்கு வர முடிந்தது. இது புதிய தலைமுறை எனக்கு அளித்த பரிசு" என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User