`குருவை மிஞ்சிய சிஷ்யன்' - மம்தாவிடம் அரசியல் பயின்று அவரையே வென்று முதல்வராகும் சுவந்து அதிகாரி?

May 04, 2026 - 11:32
0
`குருவை மிஞ்சிய சிஷ்யன்' - மம்தாவிடம் அரசியல் பயின்று அவரையே வென்று முதல்வராகும் சுவந்து அதிகாரி?

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் ஆரம்பத்தில் இருந்தே கடும் சர்ச்சைக்குறியதாக இருந்தது. வாக்காளர் சீர்திருத்தம் கொண்டு வரப்பட்டதற்கு அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மொத்தம் 60 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர்.

மிகவும் பரபரப்பாக நடந்த இத்தேர்தலில் பா.ஜ.க 180-க்கும் அதிகமான தொகுதியில் முன்னிலை பெற்று இருக்கிறது. இதையடுத்து பா.ஜ.க சார்பாக தற்போது எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் சுவந்து அதிகாரி முதல்வராக பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுவந்து அதிகாரி பாரம்பரியமான அரசியல் குடும்பத்தில் இருந்து வந்தவர். சுவந்து அதிகாரி தனது தந்தையின் வழியில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து கிழக்கு மிட்னாபூரில் முதல் முறையாக கவுன்சிலரானார்.

அதன் பிறகு 1998ம் ஆண்டு மம்தா பானர்ஜி புதிதாக தொடங்கி இருந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் சுவந்து அதிகாரி தன்னை இணைத்துக்கொண்டு 2006ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்றத்திற்கு சென்றார்.

2007ம் ஆண்டு நந்திகிராமில் நடந்த போராட்டத்தில் மம்தா பானர்ஜியுடன் சேர்ந்து கலந்து கொண்டு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் ஒரு அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்தார்.

சிங்குரில் நடந்த டாடாவிற்கு எதிரான போராட்டங்களை தொடர்ந்து 2011ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை பிடித்து 34 ஆண்டுகளாக நடந்து வந்த இடது சாரி கூட்டணி அரசுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

இதில் சுவந்து அதிகாரி அமைச்சராக பதவியேற்றார். திரிணாமுல் காங்கிரஸில் இரண்டாவது மிகவும் சக்திவாய்ந்த நபராக அதிகாரி கருதப்பட்டு வந்த சுவந்து அதிகாரி கட்சிக்குள் மம்தா பானர்ஜியின் மருமகனான அபிஷேக் பானர்ஜியின் செல்வாக்கு வளர்ந்து வந்த நிலையில், தனது அதிகாரமும் குறைந்து வருவதை அவர் உணர்ந்தார்.

மேலும், 2019 மக்களவைத் தேர்தல்களுக்குப் பிறகு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து பணியாற்றத் தொடங்கிய அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோருடனும் சுவந்து அதிகாரிக்கு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது. அதிகாரி தனது அதிருப்தியை வெளிப்படுத்தத் தொடங்கியபோது, ​​அவரைச் சமாதானப்படுத்த திரிணாமுல் காங்கிரஸ் பல முயற்சிகளை மேற்கொண்டது.

எனினும், நவம்பர் 2020-இல் அவர் போக்குவரத்து மற்றும் நீர்ப்பாசனத் துறை அமைச்சர் பதவியிலிருந்து விலகியபோது நிலைமை மோசமடைந்தது. அதன்பின் விரைவில் அவர் கட்சியிலிருந்து விலகி, அடுத்த ஆண்டில் நடைபெறவிருந்த சட்டமன்றத் தேர்தல்களுக்குச் சில மாதங்களுக்கு முன்பாகவே, டிசம்பர் 2020-இல் பாஜக-வில் இணைந்தார்.

அதேசமயம் நந்திகிராமில் தனக்கு செல்வாக்கு இருக்கிறது என்பதை நிரூபிக்கும் விதமாக 2021 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட மம்தா பானர்ஜி முடிவு செய்தார். அவரை எதிர்த்து சுவந்து அதிகாரி போட்டியிட்டார். இத்தேர்தலில் மாநிலத்தின் 294 தொகுதிகளில் திரிணாமூல் கட்சி 215 இடங்களைக் கைப்பற்றிய நிலையில், பாஜகவால் 77 இடங்களை மட்டுமே வெல்ல முடிந்தது. ஆனால் நந்திகிராமில் மம்தா பானர்ஜியைத் தோற்கடித்ததன் மூலம் அதிகாரி தனது புதிய கட்சிக்குத் தனது திறமையை நிரூபித்தும் காட்டினார்.

இதையடுத்து அவரை பா.ஜ.க எதிர்க்கட்சி தலைவராக அறிவித்தது. தற்போது நடந்துள்ள சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க 180-க்கும் அதிகமான தொகுதியில் முன்னிலை பெற்று ஆட்சியை பிடித்து இருக்கிறது. இதையடுத்து சுவந்து அதிகாரி முதல்வர் பதவியை பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மம்தா பானர்ஜியால் கட்சியில் வளர்ந்து செல்வாக்கு மிக்க தலைவராக மாறி இப்போது அவரை எதிர்த்து போட்டியிட்டு முதல்வராக இருக்கிறார். ஏக்நாத் ஷிண்டே, அஜித்பவார் வரிசையில் சுவந்து அதிகாரி இப்போது அசைக்க முடியாத ஒரு சக்தியாக மாறி இருக்கிறார். அஜித்பவார் மற்றும் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் கட்சியை உடைத்துக்கொண்டு வந்தனர். ஆனால் சுவந்து அதிகாரி தனியாக வெளியில் வந்து பா.ஜ.கவில் இணைந்து சக்தியாக உருவெடுத்துள்ளார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User