"தோத்தாங்குளி கட்சிகள்தான் தங்கள் தோல்விக்கு SIR-ஐ காரணம் சொல்கின்றன" - நடிகை கஸ்தூரி கிண்டல்

Oct 04, 2026 - 12:00
0
"தோத்தாங்குளி கட்சிகள்தான் தங்கள் தோல்விக்கு SIR-ஐ காரணம் சொல்கின்றன" - நடிகை கஸ்தூரி கிண்டல்

இடைத்தேர்தல் பிரசாரம் உச்சம் எட்டி வருகிறது. இந்த நிலையில் தமிழக அரசியல் சூழல்கள் குறித்தான கேள்விகளை பா.ஜ.க-வைச் சேர்ந்த நடிகை கஸ்தூரி முன்வைத்தோம்...

"விஜய் தலைமையிலான த.வெ.க ஆட்சி எப்படியிருக்கிறது?"

"த.வெ.க-வின் முதல் 100 நாள் ஆட்சிக்கு நானே பாஸ் மார்க் கொடுத்திருந்தேன். ஆனால், போகப்போக அவர்களது ஆட்சியில் அடுத்தடுத்த சறுக்கல்கள் வந்துகொண்டே இருக்கின்றன. ஆட்சியாளர்களுக்கு நல்ல வழிகாட்டுதல் கொடுக்கக்கூடிய அளவுக்கு யாரும் இல்லை என்பது இதன்மூலம் தெரிகிறது.

அவர்களது கூடா நட்பு கேடாய் வந்துகொண்டிருக்கிறது. இதைப் புரிந்துகொண்டு அந்தக் கூடாநட்பை அவர்கள் விலக்கிக்கொண்டால், கச்சிதமான ஆட்சியைத் தர முடியும்!"

"தனியார் மய டெண்டர் அறிவிப்பு, இடதுசாரிகளுக்கு எதிரான சுற்றறிக்கை, புதிய தலைமைச்செயலகம் அறிவிப்பு என தொடர்ச்சியாக த.வெ.க அரசு, புதிய திட்டங்களை அறிவிப்பதும் திரும்பப் பெறுவதுமாக 'யு டர்ன்' அடித்துவருகிறதே?"

"அதை 'யு டர்ன்' என்று நீங்கள் சொல்கிறீர்கள்... ஆனால், புதிதாக ஆட்சிப் பொறுப்புக்கு வந்திருப்பவர்கள் தங்கள் அனுபவமின்மையால் தவறான அறிவிப்புகளைச் செய்துவிடுகிறார்கள். பின்னர் அந்த அறிவிப்பு தவறு என்று சுட்டிக்காட்டி எதிர்ப்புகள் வரும்போது, 'இல்லையில்லை சரிதான்' என்று வாதிடாமல் அறிவிப்பைத் திரும்பப் பெற்று தங்களைச் சரிசெய்துகொள்கிறார்கள்; திருத்திக்கொள்கிறார்கள். எனவே அவர்களது அந்தச் செயல்பாட்டை நான் வரவேற்கிறேன்"

"தாராபுரம், மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்துக்கு நீங்கள் செல்லவில்லையே ஏன்?"

"தமிழக பா.ஜ.க-வின் பிரசாரப் பட்டியல் எப்போது தீர்மானிக்கப்பட்டது என்றுகூட எனக்குத் தெரியாது. நான் பா.ஜ.க-வில் ஒரு கடைநிலைத் தொண்டன். அவ்வளவுதான். கட்சி சார்பில் பிரசாரத்துக்குச் செல்லவேண்டும் அல்லது தேர்தலில் போட்டியிடவேண்டும் என்ற எண்ணத்தில் எல்லாம் நான் கட்சியில் சேரவில்லை.

நடிகை கஸ்தூரி

கொள்கைக்காகவும், தமிழ் இனத்துக்குத் துரோகம் இழைத்துக்கொண்டிருக்கும் தி.மு.க-விடமிருந்து தமிழகத்தைப் பாதுகாக்கவும்தான் நான் பா.ஜ.க-வில் இணைந்திருக்கிறேன். பிரசாரத்துக்கு அழைத்திருந்தால் நிச்சயம் போயிருப்பேன்."

"எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைதான் தி.மு.க-வின் தோல்விக்குக் காரணம் என்கிறாரே வி.சி.க பொதுச்செயலாளர் ரவிக்குமார்?"

"த.வெ.க கூட்டணியில் இருக்கிற வி.சி.க., தி.மு.க-வின் தோல்வி குறித்து கவலைப்படுவது, ஆடு நனைகிறதே என ஓநாய் அழுத கதையாகத்தான் இருக்கிறது. ஆனால், 'வி.சி.க-வின் துரோகத்தால்தான் நாங்கள் தோற்றுவிட்டோம்' என தி.மு.க-வினர் சொல்லிவருகிறார்கள்.

'எஸ்.ஐ.ஆரினால்தான் நாங்கள் தோற்றுவிட்டோம்' என எந்தக் கட்சி சொன்னாலும், 'இத்தனை நாட்களாக இறந்தவர்கள், இல்லாதவர்களின் ஓட்டுகளை எல்லாம் போட்டு ஜெயித்துக்கொண்டிருந்தோம். இப்போது அந்த ஃப்யூஸைப் பிடுங்கிவிட்டார்கள்' என்று சொல்லவருகிறார்கள்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ப.சிதம்பரம் 'எஸ்.ஐ.ஆருக்கும் தோல்விக்கும் சம்பந்தம் இல்லை' என்கிறார். எனவே முடிவை மக்களே எடுத்துக்கொள்ளட்டும்."

"தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த பா.ஜ.க-வுக்கு எதிரான மாநிலக் கட்சிகள் அனைத்தும் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைக்குப் பிறகு தோல்வியடைந்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறதுதானே?"

"இது தவறான குற்றச்சாட்டு. ஏனெனில், மக்கள்தான் தங்களுக்கு விருப்பமான கட்சிகளுக்கு வாக்களித்து ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அப்படியிருக்கும்போது இதுபோன்ற குற்றச்சாட்டு, வாக்களித்த மக்களையே குறை சொல்வதாகிவிடும்.

நீங்கள் சொல்கிறபடி பார்த்தால்கூட, பா.ஜ.க-வுக்கு முக்கியமான எதிரி காங்கிரஸ்தான். கேரளத்தில் காங்கிரஸ்தானே வெற்றி பெற்றிருக்கிறது. இதை எப்படி பா.ஜ.க செய்யும்? இதில் ஏதாவது லாஜிக் இருக்கிறதா?

அடுத்து, மேற்கு வங்கத்தில் தொடர்ச்சியாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சிதான் ஆட்சிப் பொறுப்பில் இருந்துவந்தது. மக்களும் அக்கட்சியின் மீது கடும் வெறுப்பில் இருந்துவந்தனர். எனவே தேர்தலே வராமல் இருந்தாலும் மக்களே அந்தக் கட்சியை வீட்டுக்கு அனுப்பியிருப்பார்கள்.

தேர்தல் வந்ததால், அந்த வாய்ப்பை அந்த மக்கள் பயன்படுத்திக் கொண்டார்கள். அதேசமயம் திரிணாமுல் கட்சிக்கு எதிராக காங்கிரஸோ, கம்யூனிஸ்ட்டுகளோ தங்களை நிரூபிக்கத் தவறிவிட்டார்கள்.

நடிகை கஸ்தூரி

தமிழ்நாட்டிலும்கூட, த.வெ.க-தானே வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்திருக்கிறது. அப்படியென்றால், த.வெ.க என்ன பா.ஜ.க-வுக்கு நட்பான கட்சியா.... இல்லையே. இடைத்தேர்தல் பிரசாரத்தில்கூட, முதல்வர் விஜய், பா.ஜ.க-வுக்கு எதிராகத்தான் பிரசாரம் செய்துவருகிறார். எனவே தோல்விக்குக் காரணமாக எஸ்.ஐ.ஆரைக் காரணம் சொல்வதே லாஜிக் இல்லாதது! தோத்தாங்குளி கட்சிகள்தான் இந்தப் பொய்யைச் சொல்லிக்கொண்டே இருக்கின்றன!"

"ஆனால், 'எஸ்.ஐ.ஆர் இல்லையென்றால் த.வெ.க ஆட்சிக்கு வந்திருக்க முடியாது' என்று தமிழிசை சவுந்தரராஜனும் சொல்கிறாரே?"

"தமிழிசை மேடம் சொன்னது சரியான விஷயம். எஸ்.ஐ.ஆர் மட்டும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றால், இறந்தவன், இல்லாதவன் என அனைவரின் ஓட்டுகளையும் வைத்து, வழக்கம்போல் தி.மு.க-வே வெற்றி பெற்றிருக்கும்"

"கள்ள ஓட்டு போட்டு ஜெயிக்கிற கட்சி தி.மு.க என்றால், 2011, 2016 தேர்தல்களில் அந்தக் கட்சி தோற்றது ஏன்?"

"எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலம் வரை தி.மு.க-வால் ஆட்சிக்கு வர முடியவில்லை. ஜெயலலிதா காலத்திலும் தொடர்ச்சியாக 10 ஆண்டுகள் தி.மு.க-வால் ஜெயிக்க முடியவில்லை. ஆக மக்கள் விரோத கட்சியான தி.மு.க., 2021-ல் எதிர்க்கட்சிகள் வீக்காக இருந்ததால் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்துவிட்டது"

"வெற்றி, தோல்வி என மாறி மாறி வந்த தி.மு.க மீது 'கள்ள ஓட்டு' எனச் சந்தேகப்பட்டால், தொடர்ச்சியாக மூன்று நாடாளுமன்றத் தேர்தல்களிலும் வெற்றி பெற்றுவரும் பா.ஜ.க மீதும் சந்தேகம் எழும்தானே?"

"இது ரொம்ப அபத்தமான கேள்வி... பிரதமர் மோடியையும், மு.க.ஸ்டாலினையும் ஒரே தட்டில் வைத்து கேள்வி கேட்பதே தவறு."

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User