MESSI : `களத்தில் அழுதது உண்மை தான்... Football காரணம் அல்ல.!' - உருகும் மெஸ்ஸி

Jun 17, 2026 - 15:01
0
MESSI : `களத்தில் அழுதது உண்மை தான்... Football காரணம் அல்ல.!' - உருகும் மெஸ்ஸி

2026 ஃபிஃபா உலகக் கோப்பை லீக் போட்டிகள் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. தனது முதல் போட்டியில் அர்ஜென்டினா அணி, அல்ஜீரியாவை எதிர்கொண்டது. இதில் 3-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தின் நாயகனாக கேப்டன் லியோனல் மெஸ்ஸி ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார். ஆனால், ஆட்டத்தின் முதல் கோலை அடித்த பிறகு, அவர் மைதானத்திலேயே அழுத சம்பவம், ரசிகர்களை அதிர்ச்சியிலும் குழப்பத்திலும் ஆழ்த்தியது.

கண்ணீருக்குப் பின்னணி என்ன?

போட்டி முடிந்த பிறகு, மெஸ்ஸியின் இந்த உணர்ச்சிகரமான தருணம் குறித்து அவரிடமே கேள்வி எழுப்பப்பட்டது. அப்போதுதான், தனது கண்ணீருக்கும் கால்பந்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்ற தகவலை அவர் வெளியிட்டார்.

"நான் சில கடினமான நாட்களைக் கடந்து வந்தேன். அது முற்றிலும் விளையாட்டுக்குத் தொடர்பில்லாத ஒரு விஷயம். மிகவும் சிக்கலான, கடினமான சில தினங்கள் அவை," என்று மெஸ்ஸி உருக்கமாகத் தெரிவித்தார். தனது தனிப்பட்ட வாழ்வில் ஏற்பட்ட பிரச்னை என்ன என்பது குறித்து மேலதிக விவரங்களைப் பகிர அவர் மறுத்துவிட்டார்.

மெஸ்ஸி

துணை நின்ற சக வீரர்கள்!

இந்தக் கடினமான சூழலில் தனக்கு ஆதரவாக இருந்த சக அணி வீரர்கள் மற்றும் அர்ஜென்டினா குழுவினருக்கு மெஸ்ஸி தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார். "நான் நலமாக இருப்பதை உறுதிசெய்ய, எனது சக வீரர்களும், குழுவில் உள்ள அனைவரும் பெரும் முயற்சி எடுத்தனர். அவர்கள் அனைவருக்கும் நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன்," என்று அவர் கூறினார்.

சாதனையின் உச்சத்தில் மெஸ்ஸி!

ஒருபுறம் தனிப்பட்ட போராட்டம் இருந்தாலும், மறுபுறம் களத்தில் சாதனைகளை முறியடித்தார் மெஸ்ஸி. இந்த ஹாட்ரிக் மூலம், உலகக் கோப்பை வரலாற்றில் தனது முதல் ஹாட்ரிக்கை பதிவு செய்தார். மேலும், உலகக் கோப்பை தொடர்களில் அதிக கோல்கள் அடித்த வீரரான மிரோஸ்லாவ் குளோஸின் சாதனையையும் சமன் செய்தார். தனது கரியரின் இந்த காலகட்டத்தை விவரித்த அவர், "நான் சந்தித்த அத்தனை அனுபவங்களுக்கும் பிறகு, இப்போது நான் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தத் தருணம் ஒரு 'செர்ரி ஆன் தி டாப்' போன்றது. இந்த அற்புதமான குழுவுடன் இருப்பதை நினைத்து நான் மிகவும் மகிழ்ச்சியாகவும் நன்றியுடனும் இருக்கிறேன்," என்றார்.

அர்ஜென்டினா அணியின் மேலாளர் லயோனல் ஸ்கலோனியும் மெஸ்ஸியின் ஆட்டத்தைக் கண்டு வியந்து போனார். "லியோவைப் பற்றிப் பேச என்னிடம் வார்த்தைகளே இல்லை. அவர் ஒரு நம்பமுடியாத வீரர்," என்று புகழாரம் சூட்டினார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User