ஜன நாயகன் படக் கசிவு: "தேர்தலைக் குறிவைத்து நடத்தப்பட்ட திட்டமிட்ட அரசியல் சதி" - அன்புமணி காட்டம்

Apr 12, 2026 - 11:02
 0
ஜன நாயகன் படக் கசிவு: "தேர்தலைக் குறிவைத்து நடத்தப்பட்ட திட்டமிட்ட அரசியல் சதி" - அன்புமணி காட்டம்

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக கூட்டணியில் இருக்கும் அன்புமணி தரப்பு பா.ம.க தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

திருவண்ணாமலையில் தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்ட அன்புமணி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது, ``நடப்பது சட்டமன்றத் தேர்தல்; இதில் போட்டி முதலமைச்சர் ஸ்டாலினுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும்தான். பா.ஜ.க-வைக் காட்டி இன்னும் எத்தனை காலம்தான் மக்களைப் பயமுறுத்துவீர்கள்? தி.மு.க அரசு தனது கடந்த கால சாதனைகளையோ அல்லது ‘திராவிட மாடல்’ என்ற சொல்லாடலையோ நம்பித் தேர்தலைச் சந்திக்கத் தயாராக இல்லை.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் தி.மு.க வேட்பாளர்கள் ரூ.8000 மதிப்பிலான கூப்பன்களை விநியோகித்து வருகிறார்கள். இதுவே அந்தக் கட்சிக்கு மக்கள் மீதும், தங்கள் தேர்தல் அறிக்கையின் மீதும் நம்பிக்கை இல்லை என்பதைக் காட்டுகிறது.

தமிழகத்தின் இரண்டாவது பெரிய மாவட்டமான திருவண்ணாமலையை நிர்வாக வசதிக்காகப் பிரிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கை. வேலூர், விழுப்புரம், காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்கள் பிரிக்கப்பட்ட நிலையில், திருவண்ணாமலை மட்டும் ஏன் பிரிக்கப்படவில்லை? தனது ஆதிக்கம் குறைந்துவிடும் என்ற சுயநலத்திற்காக அமைச்சர் எ.வ.வேலு இதற்கு முட்டுக்கட்டைப் போட்டு வருகிறார்.

சமூக நீதி பேசும் இந்த ஆட்சியில், விவசாயிகளை ஹிட்லரை விட மோசமாக ‘குண்டர் சட்டத்தில்’ அடைத்த பெருமை இந்த அமைச்சரையே சாரும். நந்தன் கால்வாய் திட்டத்தை 54 ஆண்டுகளாக நிறைவேற்றாமல், தனது சொந்த மருத்துவ மற்றும் பொறியியல் கல்லூரிகளின் வளர்ச்சிக்காக 18 கிராம ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்கத் துடிக்கிறார். இதனால் ஏழை, எளிய மக்களின் 100 நாள் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.

அமைச்சர் எ.வ.வேலுவின் மீது அடுக்கடுக்கான ஊழல் புகார்கள் உள்ளன. சென்னையில் தரம் குறைந்த மேம்பாலக் கட்டுமானம் மற்றும் டெண்டர் ஒதுக்கீட்டில் மிரட்டல்கள். அண்ணாமலையார் கோயில் அறங்காவலர் குழுவில் மண்ணின் மைந்தர்களுக்கு வாய்ப்பு தராமல், தனது ஆதரவாளர்களை மட்டுமே நியமிக்கிறார்.

அமைச்சர் எ.வ.வேலு
அமைச்சர் எ.வ.வேலு

'ஜன நாயகன்' திரைப்படம் தற்போது இணையதளத்தில் சட்டவிரோதமாக வெளியாகியுள்ளது. இந்த வெளியீடு தற்செயலானது அல்ல, இது வரவிருக்கும் தேர்தலை இலக்காகக் கொண்டு திட்டமிட்டுச் செய்யப்பட்ட ஒரு செயலாகவேத் தெரிகிறது.

உண்மையில், இந்தப் படம் மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு முன்பே திரையரங்குகளில் வெளியாகியிருக்க வேண்டும். ஆனால், பல்வேறு சட்டச் சிக்கல்கள் மற்றும் அரசியல் காரணங்களால் இதன் வெளியீடு தொடர்ந்து தள்ளிப்போனது.

தற்போது தேர்தல் நடைபெற இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில், 7 ஜிபி (HD) அளவிலான உயர்தரத்தில் இப்படம் முழுமையாக இணையத்தில் கசிந்திருப்பது பல கேள்விகளை எழுப்புகிறது. இந்தத் தருணத்தில் படம் வெளியாவது யாருக்குச் சாதகமானது? இதன் பின்னணியில் உள்ள அரசியல் சக்திகள் யார்? என்பதை நாம் தீவிரமாகச் சிந்திக்க வேண்டும்.

இப்படம் ஆளுங்கட்சிக்கும், எங்களது கூட்டணிக்கும் எதிராகச் சித்தரிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விவகாரத்தில் உண்மைத் தன்மையைக் கண்டறிய சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும். ஒரு திரைப்படத்தின் உயர்தரக் கோப்புகளில் பொதுவாக தயாரிப்பாளர், இயக்குநர் அல்லது படத்தொகுப்பாளர் ஆகியோருக்கெனத் தனித்துவமான 'வாட்டர்மார்க்' அடையாளங்கள் இருக்கும்.

ஜனநாயகன்
ஜனநாயகன்

அத்தகைய அடையாளங்கள் உள்ள கோப்புகளை அந்தப் படக்குழுவின் உள்வட்டத்தில் இருப்பவர்களால் மட்டுமே வைத்திருக்கவோ அல்லது வெளியிடவோ முடியும்.

தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், சிபிஐ விசாரணை அறிவிக்கப்பட்டு அதன் முடிவுகள் வருவதற்குள் தேர்தல் முடிந்துவிடக்கூடும். இருப்பினும், இவ்வளவு துல்லியமான தரத்தில் படம் கசிந்திருப்பதைக் கவனிக்கும்போது, இது ஒரு திட்டமிட்ட அரசியல் நகர்வு என்பது தெளிவாகிறது. இதன் பின்னணியில் உள்ள உள்நோக்கத்தை மக்கள் தீர்மானத்திற்கே விட்டுவிடுகிறேன்'' என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0