Doctor Vikatan: இனி வாரம் ஒருமுறை ஊசி போட்டால் போதும்; இன்சுலின் போடுவோருக்கு குட் நியூஸ்!

Aug 21, 2026 - 08:00
0
Doctor Vikatan: இனி வாரம் ஒருமுறை ஊசி போட்டால் போதும்; இன்சுலின் போடுவோருக்கு குட் நியூஸ்!

Doctor Vikatan: என் வயது 52. கடந்த ஒரு வருடமாக சர்க்கரைநோய்க்கு இன்சுலின் போட்டுக்கொண்டிருக்கிறேன். தினமும் ஊசி குத்திக்கொள்வது வலியைத் தருகிறது. தவிர, சில நாள்களில் மறந்துவிடுகிறேன்.

இந்நிலையில்தான் வாரம் ஒருமுறை போட்டுக்கொள்ளக்கூடிய இன்சுலின் குறித்து செய்தி படித்தேன். அது நம்மூருக்கும் வந்துவிட்டதா... அதை எல்லோரும் போட்டுக்கொள்ளலாமா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, நீரிழிவு சிகிச்சை  மருத்துவர் சண்முகம்.

நீரிழிவுநோய் சிகிச்சை மருத்துவர் சண்முகம்.
நீரிழிவுநோய் சிகிச்சை மருத்துவர் சண்முகம்.

நீங்கள் கேள்விப்பட்டது உண்மைதான். வாரத்திற்கு ஒரு முறை செலுத்திக்கொள்ளும் புதிய இன்சுலினான 'ஐகோடெக்' (Icodec), இந்தியாவில் கடந்த ஒரு மாதமாகப் பயன்பாட்டில் உள்ளது.

பொதுவாக இன்சுலினைப் பொறுத்தவரை, மருத்துவர்கள் இரண்டு விதமாக வழங்குவோம். முதலாவது, உணவு சாப்பிட்ட பிறகு அதிகரிக்கும் சர்க்கரை அளவைக் குறைப்பதற்கான இன்சுலின். இதை காலை, மதியம் மற்றும் இரவு உணவிற்கு முன்பாகப் போட்டுக்கொள்ளப் பரிந்துரைப்போம். இதன் பெயர் 'ப்ராண்டியல் இன்சுலின்' (Prandial Insulin) ஆகும்.

இரண்டாவது வகை 'பேசல் இன்சுலின்' (Basal Insulin). இது 24 மணி நேரமும் உடலுக்குள் இயங்கும். இது முக்கியமாக, 'ஃபாஸ்டிங் சுகர்' (Fasting Sugar) எனப்படும் வெறும் வயிற்றுச் சர்க்கரை அளவைக் குறைப்பதற்காகத் தரப்படுகிறது.

சிலருக்கு இரவில் உடலில் இயல்பாக இன்சுலின் சரியாகச் சுரக்காது. அதுபோன்ற நபர்களுக்கு வெறும் வயிற்றுச் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும். அவர்களுக்கு உடலுக்குள் 24 மணி நேரமும் குறைந்த அளவில் இன்சுலின் இருந்துகொண்டே இருக்கும் வகையில் இந்த 'பேசல் இன்சுலின்' வழங்கப்படும். 

இதுநாள் வரை இருந்த பேசல் இன்சுலின்கள் அனைத்தும் 24 மணி நேரம் மட்டுமே வேலை செய்யக்கூடியவை. அதனால் இவற்றை தினமும் போட்டுக்கொள்ள வேண்டும். தினமும் போடும்போது 24 மணி நேரமும் உடலில் இன்சுலின் இருந்து, வெறும் வயிற்றுச் சர்க்கரை அளவைக் குறைக்கும்.

இதனால் உணவிற்குப் பின் சர்க்கரை அதிகரிப்பதும் தானாகவே கட்டுப்படும். தேவையான மாத்திரைகளை எடுத்துக்கொண்டால் போதுமானதாக இருந்தது.

தற்போது டென்மார்க்கைச் சேர்ந்த 'நோவோ நார்டிஸ்க்' (Novo Nordisk) என்ற நிறுவனம், 'ஐகோடெக்' என்ற இன்சுலினைக் கண்டுபிடித்து, ஆராய்ச்சி செய்து, ஆய்வறிக்கைகளைச் சமர்ப்பித்து அரசிடமிருந்து ஒப்புதல் பெற்றுள்ளது. மற்ற இன்சுலின்கள் 24 மணி நேரம் மட்டுமே வேலை செய்யும் நிலையில், இந்தப் புதிய இன்சுலின் உடலில் தொடர்ந்து 7 நாள்களுக்கு வேலை செய்யும்.

மற்ற இன்சுலின்கள் 24 மணி நேரம் மட்டுமே வேலை செய்யும் நிலையில், இந்தப் புதிய இன்சுலின் உடலில் தொடர்ந்து 7 நாள்களுக்கு வேலை செய்யும்.

ஏழு நாள்களும் உடலில் இன்சுலின் அளவைச் சீராகப் பராமரிப்பதால், வெறும் வயிற்றுச் சர்க்கரை அளவு குறையும். தினமும் ஊசி போட வேண்டிய அவசியமும் இருக்காது. தினமும் இரவில் பேசல் இன்சுலின் எடுத்துக்கொள்ளும் நோயாளிகள் அனைவரும் இந்த வாராந்தர இன்சுலினுக்கு மாற முடியும். ஆனால், உணவிற்குப் பின் ஏறும் சர்க்கரையைக் கட்டுப்படுத்த காலை, மதியம், இரவு உணவுக்கு முன் 'ப்ராண்டியல் இன்சுலின்' போடுபவர்கள் இந்த வாராந்தர இன்சுலினுக்கு மாற முடியாது. 

இரவு நேரத்தில் 24 மணி நேரம் வேலை செய்யும் இன்சுலின் எடுத்துக்கொள்பவர்கள் மட்டுமே இந்த வாராந்தர இன்சுலினுக்கு மாற முடியும்.

இந்த இன்சுலினை 18 வயதிற்கு மேற்பட்ட டைப்-2 (Type 2) மற்றும் டைப்-1 (Type 1) சர்க்கரை நோயாளிகளுக்கு வழங்கலாம். இப்போதைக்கு கர்ப்பிணிகளுக்கும், 18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கும் இந்த இன்சுலினுக்கு ஒப்புதல் அளிக்கப்படவில்லை. 

தினமும் ஊசி போடுபவர்கள் மாதத்திற்கு 30 ஊசிகள் போட வேண்டும். ஆனால், இது வாரத்திற்கு ஒன்று என்பதால், மாதத்திற்கு 4 அல்லது 5 ஊசிகள் போட்டால் போதுமானது.

இதுவே இதன் நன்மையாக இருந்தாலும், இந்த மருந்தின் குறைபாடும் இதுதான். ஒரு நோயாளி ஏதேனும் ஒரு காரணத்திற்காக திடீரென சாப்பிடாமல் இருக்கிறார் என்றால், அந்நிலையிலும் இந்த மருந்து உடலில் தொடர்ந்து வேலை செய்துகொண்டே இருக்கும். நோயாளி சாப்பிட்டாரா இல்லையா என்பதையெல்லாம் அது கணக்கில் கொள்ளாது. இதனால் சாப்பிடாமல் இருக்கும்போது ரத்தத்தில் சர்க்கரை அளவு மிகவும் குறைந்துவிடும்.

இந்த இன்சுலினை 18 வயதிற்கு மேற்பட்ட டைப்-2 (Type 2) மற்றும் டைப்-1 (Type 1) சர்க்கரை நோயாளிகளுக்கு வழங்கலாம்.

எனவே, நோயாளி ஒரே நேரத்தில், சீரான உணவு முறையைப் பின்பற்றி வந்தால் இந்த இன்சுலின், சர்க்கரை அளவைச் சரியாகக் கட்டுக்குள் வைக்கும். ஒருவேளை சாப்பிடாமல் இருந்தாலோ, அல்லது ஏதேனும் மருத்துவப் பரிசோதனை, ஸ்கேன் அல்லது அவசர அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சாப்பிடாமல் இருக்க நேரிட்டாலோ, சர்க்கரை அளவு குறைய வாய்ப்புள்ளது.

அதுபோன்ற சூழலில், 'நான் வாராந்தர இன்சுலின் எடுத்துக்கொள்கிறேன்' என்று மருத்துவரிடம் முன்கூட்டியே தெரிவித்துவிட்டால், மருத்துவர்கள் அதற்கேற்ப சிகிச்சையை மேற்கொள்வார்கள்.

மற்றபடி இந்த இன்சுலின் பாதுகாப்பானது, வசதியானது மற்றும் நோயாளிக்கு மிகுந்த சௌகர்யத்தைத் தரக்கூடியது. நீங்களாக இந்த வாராந்தர இன்சுலினுக்கு மாறாமல், இது குறித்து உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசித்துவிட்டு பிறகு முடிவெடுப்பதுதான் சரியானது.


டாக்டர் சண்முகம்:

சென்னை அசோக்நகரில் செந்தூர் டயாபட்டீஸ் ஸ்பெஷாலிட்டி சென்டர் என்ற பெயரில் கிளினிக் வைத்திருக்கிறார். நீரிழிவு மருத்துவத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர்.


உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.   

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User