Delimitation: "அமித்ஷாவின் பதிலை ரிலே பண்ணுவதற்கு இபிஎஸ் என்ன ஒலிபெருக்கியா?" – ப.சிதம்பரம் கேள்வி

Apr 15, 2026 - 13:31
 0
Delimitation: "அமித்ஷாவின் பதிலை ரிலே பண்ணுவதற்கு இபிஎஸ் என்ன ஒலிபெருக்கியா?" – ப.சிதம்பரம் கேள்வி

கோவை தனியார் ஹோட்டலில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், ‘’தொகுதி மறுவரையறைக்காக நாடாளுமன்றத்தை அவசரமாகக் கூட்டுவதை எதிர்க்கிறோம். மக்களவை எண்ணிக்கையை அதிகரித்த பின், மறு சீரமைப்பு எனச் சொல்வது மாயை. தமிழகத்தின் தொகுதி எண்ணிக்கை 58 ஆக உயர்த்தப்பட்டு, மறுசீரமைப்பில் 46 ஆக குறைக்கப்படும். ஆனால் உத்தரப் பிரதேசத்தில் உள்ள 80 மக்களைவை தொகுதிகள் 120 தொகுதியாக உயரும். மறுசீரமைப்பிற்குப் பின்பு அது 140 ஆக உயரும். இந்த மறுவரையறை என்பது தென் மாநிலங்களை மிக மிக பாதிக்கும்.

மக்களவையில் தற்போதுள்ள உறுப்பினர்களில் 24.3 சதவீதம் தென்மாநிலங்களில் உள்ள 5 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இது 20.7 சதவீதமாகிவிடும். நாடாளுமன்ற வாக்கு சதவீதம் குறைக்கப்பட்டு, தென் மாநிலங்களின் குரல் அழுத்தப்படும். பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை ஆதரிக்கிறோம், இதைக் கொண்டு வந்ததே காங்கிரஸ் கட்சிதான்.

பா. சிதம்பரம்
பா. சிதம்பரம்

தொகுதி மறுவறையறை தொடர்பாக கூட்டத்தை ஏப்ரல் 29ம் தேதி கூட்டலாமே? ஏன் இவ்வளவு அவசரமாகக் கூட்டுகின்றனர்? நாடாளுமன்றக் கூட்டத்தை 13 நாட்கள் கடந்து போடுவதால் என்ன பிரச்னை? மேற்கு வங்கம், தமிழகத்தைச் சேர்ந்த 67 எம்.பி-க்கள் இந்த நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்து கொள்ளக்கூடாது என நினைக்கின்றனர்.

சட்டமன்றத் தேர்தலில் கடைசி 5 நாட்கள் தேர்தல் வேலை தீவிரமாக நடக்கும். இந்த நேரத்தில் பிரசாரத்தை முடக்கவே நாடாளுமன்றத்தைக் கூட்டுகின்றனர். இது திட்டமிட்ட சதி. 67 உறுப்பினர்கள் கலந்து கொள்ள முடியாத நாடாளுமன்றத்தைக் கூட்டுவதன் அவசியம் என்ன? இதனை முறியடிக்க காங்கிரஸ், தி.மு.க, தோழமை கட்சிகளைச் சேர்ந்த 39 பேரும் நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்து கொள்வார்கள்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்தத் தொகுதி வரையறையால் பாதகம் ஏற்படும் அல்லது பாதகம் ஏற்படாது என்று சொல்ல வேண்டும். ஆனால் அமித்ஷாவைக் கேட்டேன், அவர் பாதகம் வராது என்று சொன்னார். அதனால் பாதகம் வராது என்கிறார்.

அமித்ஷாவின் பதிலை ரிலே பண்ணுவதற்கு இவர் ஒலிபெருக்கியா? இது ஒரு கட்சித் தலைவருக்கு அழகா? நான் சொன்ன கணக்கில் என்ன பிழை என்பதை எடப்பாடி பழனிசாமி சொல்ல வேண்டும். நிதிஷ் குமார் எத்தனை நாள்களுக்கு முதல்வராக இருப்பார் என நான் ஆரம்பத்தில் கேட்டேன்.

நேற்று பா.ஜ.க. முதல்வர் பீகாரில் பொறுப்பேற்று விட்டார். எடப்பாடி பழனிசாமி ஆசை நிராசையாகப் போகிறது. அவர் முதல்வராக முடியாது. ஒருவேளை விபத்தில் எடப்பாடி பழனிசாமி முதல்வராக வந்தாலும், பிற மாநிலங்களைப் போல இங்கும் நடக்கும்.

சிதம்பரம்
ப.சிதம்பரம்

ராகுல்காந்தி தமிழகத்தில் இரு தினங்கள் பிரசாரம் மேற்கொள்வதாக தகவல்கள் இருக்கின்றன. நாடாளுமன்றத்தில் முழு பலம் இருந்தால் இந்த அரசியல் திருத்த மசோதா தோற்கடிக்கப்படும்” என்றார்.

கோவையில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் பிரசாரம் செய்யவில்லையே என்ற கேள்விக்கு, ”தி.மு.க-வினர் தேர்தல் பரப்புரை செய்ய என்னை கேட்டார்கள், அதனால் அவர்களது தொகுதியில் பிரசாரம் செய்கிறேன்” எனப் பதிலளித்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0