சஹாரா பாலைவனத்தை வென்ற 54 வயது சென்னைவாசி: ‘மாரத்தான் டெஸ் சேபிள்ஸ்’ சாதனையும் சமூக சேவையும்!
உலகின் மிகக் கடினமான ஓட்டப்பந்தயமாகக் கருதப்படுவது ‘மாரத்தான் டெஸ் சேபிள்ஸ்’ (Marathon des Sables - MDS). வெறும் ஓட்டம் மட்டுமல்ல, சுட்டெரிக்கும் சஹாரா பாலைவனத்தில், மணல் குன்றுகளுக்கு இடையே ஏழு நாட்கள் தங்கி, தங்களுக்குத் தேவையான உணவு மற்றும் உடமைகளைத் தாங்களே சுமந்துகொண்டு இந்த இலக்கை அடைய வேண்டும். இதன் 40-வது பதிப்பான 'MDS Legendary' பந்தயம், கடந்த 2026 ஏப்ரல் 3 முதல் 13 வரை நடைபெற்றது. இந்தச் சவாலான இலக்கை, ஏப்ரல் 11 சனிக்கிழமை அன்று வெற்றிகரமாகச் சிதறடித்திருக்கிறார் சென்னையின் கிண்டி பகுதியில் வசிக்கும் 54 வயதான கொர்னீலியஸ் ஆண்டனி கான்லன்.
யார் இந்த கொர்னீலியஸ் ஆண்டனி கான்லன்?
அயர்லாந்து நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாகச் சென்னையில் வசித்து வருகிறார். 1999-2000 காலகட்டத்தில் தனது மேலதிகாரியின் வேண்டுகோளுக்கிணங்க சென்னையில் ஒரு தொழில்நுட்ப மையத்தை அமைக்க வந்த அவர், பின்னர் 2004-ல் 'மெரிட் குரூப்' (Merit Group) என்ற தனது சொந்த நிறுவனத்தைத் தொடங்கினார். இன்று சென்னையில் சுமார் 1,000 பணியாளர்களைக் கொண்டு அந்த நிறுவனத்தை அவர் நடத்தி வருகிறார். "எனது குழந்தைகள் வளர்ந்தது, படித்தது எல்லாம் சென்னையில்தான். நான் ஒரு நீண்டகால சென்னைவாசி என்பதில் பெருமை கொள்கிறேன்" என்று அவர் சென்னை மீதான தனது காதலைப் பகிர்கிறார்.
சஹாராவின் அனல் Vs சென்னை வெயில்
இந்த ஓட்டம் சாதாரணமானது அல்ல. ஏழு நாட்களில் சுமார் 267 கிலோமீட்டர் தூரத்தை (6 மாரத்தான்களுக்குச் சமம்), 8-10 கிலோ எடை கொண்ட பைகளை முதுகில் சுமந்து கொண்டே ஓட வேண்டும்.
"சஹாரா வெப்பம் ஒரு அடுப்பிற்குள் (Oven) இருப்பது போல இருக்கும். நான் சென்னையில் கிரீன்வேஸ் சாலை, சி.பி. ராமசாமி சாலை, செயின்ட் மேரிஸ் சாலைகளில் தான் இந்தப் பந்தயத்திற்காகப் பயிற்சி பெற்றேன். சென்னை வெயிலுக்கு நான் பழகிவிட்டாலும், சஹாராவின் வறண்ட வெப்பம் முற்றிலும் வேறுபட்டது" என்கிறார் ஆண்டனி கான்லன்.
10 லட்சம் ரூபாய் நிதியுதவி
தன்னுடைய இந்தச் சவாலான பயணத்தின் மூலம் அவர் சுமார் 10 லட்சம் ரூபாயைச் சென்னையைச் சேர்ந்த இரண்டு தொண்டு நிறுவனங்களுக்காகத் திரட்டியுள்ளார். குறிப்பாக, ஆதரவற்ற மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்களைப் பராமரிக்கும் அமைப்பிற்கு அவர் உதவ முன்வந்துள்ளார். "சமூகத்தால் பெரும்பாலும் மறக்கப்படும் இத்தகைய முதியவர்கள் மற்றும் பெண்களுக்கு உதவ வேண்டும் என்பதே எனது நோக்கம்" என்கிறார் அவர்.
மன உறுதியே மருந்து!
பந்தயத்தின் ஒரு கட்டத்தில் 100 கி.மீ தூரத்தைக் கடக்க வேண்டியிருந்தது. அப்போது எதிர்காற்றாலும், மணல் புயலாலும் உடல் சோர்வடைந்து துவண்டுபோன தருணங்களை அவர் விவரித்தார்.
"சுமார் 15 மணி நேரம் ஓடிய பிறகு மிகவும் சோர்ந்து போயிருந்தேன். ஆனால் ஒரு தண்ணீர் முகாமில் சிறிது சூப் குடித்துவிட்டு, மீண்டும் நம்பிக்கையுடன் ஓடத் தொடங்கி 19 மணி நேரத்தில் அந்த இலக்கை அடைந்தேன். இறுதி கோட்டைத் தாண்டிய போது நான் அடைந்த உணர்வு எல்லையற்ற மகிழ்ச்சி" என்கிறார் அவர்.













மேலும், இந்த ஆண்டு இந்தியா சார்பில் யாரும் பங்கேற்காததால், கொர்னீலியஸ் ஆண்டனி கான்லன் தனது சட்டையில் இந்தியத் தேசியக் கொடியை ஏந்திச் சென்னையைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.
சாதிக்கத் துடிப்பவர்களுக்கு ஒரு செய்தி
"எல்லாரும் உடனே 100 கி.மீ ஓடத் தேவையில்லை. முதலில் 3 கி.மீ, பின் 5 கி.மீ என மெதுவாகத் தொடங்குங்கள்" என்று ஆலோசனை வழங்குகிறார். ஒரு தொழிலைத் தொடங்குவதற்கும் இத்தகைய ஓட்டத்திற்கும் விடாமுயற்சிதான் அடிப்படை என்பது இவரது கருத்து.
54 வயதில் சஹாரா பாலைவனத்தை வென்ற கொர்னீலியஸ் ஆண்டனி கான்லனின் இந்தச் சாதனை, வயது என்பது வெறும் எண்கள்தான் என்பதையும், சமூகத்தின் மீதான அக்கறை எத்தகைய கடினமான பாதையையும் கடக்க வைக்கும் என்பதையும் நிரூபித்துள்ளது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0