"இந்த மண்ணின் பூர்வகுடிகளான வன்னியர்களும், பட்டியலின மக்களும் ஒன்றுசேர வேண்டும்" - அன்புமணி ராமதாஸ்
வேலூர் மாவட்டத்திலுள்ள கே.வி.குப்பம் தனித்தொகுதியில், அ.தி.மு.க-வின் இரட்டை இலை சின்னத்தில் மீண்டும் போட்டியிடும் புரட்சி பாரதம் கட்சித் தலைவரும் சிட்டிங் எம்.எல்.ஏ-வுமான பூவை ஜெகன்மூர்த்தியை ஆதரித்து, பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அன்புமணி ராமதாஸ் பேசுகையில், ``தமிழ்நாட்டில் எங்கு சமூகநீதி பிரச்னை வந்தாலும், அதற்கு தி.மு.க-வின் சூழ்ச்சியே காரணம். நண்பர் ஜெகன்மூர்த்தியின் மனநிலையும், என்னுடைய மனநிலையும் ஒன்றுதான். இந்த ஒடுக்கப்பட்ட மக்கள் முன்னேற வேண்டும்.
படிக்க வேண்டும். வேலைக்குப்போக வேண்டும். சுயமரியாதையுடன் வாழ வேண்டும் என்ற எண்ணம் எங்கள் இருவருக்கும் இருக்கிறது. இந்த இரண்டு சமுதாயங்களையும் காலங்காலமாக ஓட்டுக்காக, அரசியலுக்காகப் பிரித்துவைத்து சூழ்ச்சி செய்து சண்டையை மூட்டிவிட்டது யார்? இந்த மோசடி தி.மு.க. 
கடந்த கால வரலாற்றைத் திரும்பிப் பாருங்கள். தேர்தல் நேரத்தில், அம்பேத்கர் சிலைக்கு செருப்பு மாலைப் போடுவார்கள். அதை நாம்தான் போட்டுவிட்டோம் என்று கலவரத்தை உருவாக்குவார்கள். திண்டிவனம் தொகுதியில் பொன்முடி அப்படித்தான் செய்தார்.
தேர்தலுக்கு முன்பு ஒரு கலவரம் வந்தது. இதெல்லாம், தி.மு.க-வுக்குக் கைவந்த கலை. ஸ்டாலினுக்கு நிர்வாகம் தெரியவில்லை. கணக்குத் தெரியவில்லை. என்ன நடக்கிறது? எதுவுமே அவருக்குத் தெரியவில்லை. பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்க முடியவில்லை. குழந்தைகளுக்குப் பாதுகாப்பு வழங்க முடியவில்லை.
விவசாயிகளை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள முடியவில்லை. நெசவாளர்கள் வறுமையில் இருக்கிறார்கள். இளைஞர்களுக்கு வேலை இல்லை. அரசு ஊழியர்கள் ஏமாற்றப்பட்டுள்ளார்கள். பொம்மை முதலமைச்சர் அவர். நான்கைந்து அமைச்சர்களை வைத்துக்கொண்டு கொள்ளையடித்துக்கொண்டிருக்கிறார். எ.வ.வேலு, நேரு, சேகர்பாபு, பத்து ரூபாய் பாலாஜி. இவர்களுக்குக் கொள்ளையடிப்பது மட்டும்தான் தொழில்.
இந்தத் தேர்தலில், ஓட்டுக்கு இரண்டாயிரம் ரூபாய் தி.மு.க கொடுக்கிறது. தமிழ்நாடு முழுவதும் பதிமூனாயிரம் கோடி ரூபாயை வாக்குக்காக மட்டும் கொடுத்துக்கொண்டிருக்கிறது. ஐந்து ஆண்டுகாலம் ஆட்சி செய்த தி.மு.க எதைச் சொல்லி ஓட்டு கேட்கப் போகிறது? எதையுமே செய்யவில்லை.
இப்போது, `எட்டாயிரம் ரூபாய் கூப்பன் தருகிறேன்’ என்று ஓட்டு கேட்கிறார் ஸ்டாலின். உங்களுக்கு மானம், ஈனம் எதுவும் கிடையாது. எட்டாயிரம் ரூபாய் கூப்பனை வைத்துதான் நீங்கள் தேர்தலை நடத்துகிறீர்களா? அதுவும் டூப்ளிகேட் கூப்பன். ஐந்து ஆண்டுகாலம், மக்களுக்கு என்னதான் செய்தீர்கள்?
சமீபத்தில், வி.சி.க தலைவர் திருமாவளவன் ஒரு இடத்தில் பேசுகிறார். தி.மு.க தலைவர் ஸ்டாலின், `வி.சி.க கட்சி சார்பாக கே.வி.குப்பம் தொகுதியில் நீங்களும் போட்டியிட வேண்டும்’ என்று திருமாவளனிடம் கோரிக்கை வைத்தாராம்.
உடனடியாக திருமாவளவன் அதை ஏற்க மறுத்து, `அங்கு என்னைப் போன்ற ஒடுக்கப்பட்ட சமுதாயத்துக்கான தலைவர் ஜெகன்மூர்த்தி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து எங்கள் கட்சி போட்டியிடாது’ என்று சொல்லியிருக்கிறார். 
உண்மையிலேயே, திருமாவளவனைப் பாராட்டுகிறேன். இதுதான் சரியான மனநிலை. எங்களுக்கும், அவருக்கும் கட்சி வேறுபாடு, கருத்து வேறுபாடு, கொள்கை வேறுபாடு இருக்கலாம். ஆனால், சமூகநீதி, ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராட, பாடுபட நாங்கள் எல்லோரும் ஒன்றுசேர்ந்திருக்கிறோம்.
இதில், தி.மு.க-வின் மனநிலையை நீங்கள் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். பட்டியலினத் தலைவர்கள் இருவரும் மோத வேண்டும். அப்போதுதான் தி.மு.க குளிர்காயும். வன்னியர்களும், பட்டியலின மக்களும் அடித்துக்கொள்ள வேண்டும். இதுதான் தி.மு.க-வின் சூழ்ச்சி. இதைத்தான் காலங்காலமாக தி.மு.க செய்துகொண்டிருக்கிறது.
இந்த மண்ணுக்குச் சொந்தமான பூர்வகுடி மக்கள் நாம். எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து படித்து வேலைக்குப்போக வேண்டும். மானம் மரியாதையோடு வாழ வேண்டும். தி.மு.க-வின் சூழ்ச்சியில் நீங்கள் விழக்கூடாது. நமக்கு அரசியல் அதிகாரம் வேண்டும். இன்னும் எவ்வளவு காலமாக அடிமையாக இருப்போம். நாம் எல்லோரும் ஒன்றுசேர வேண்டும்’’ என்றார் அன்புமணி ராமதாஸ்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0