மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் ‘அறிவாசனம்’ நூல் வெளியீடு – அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார்

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் மருத்துவர் க. மகுடமுடி எழுதிய ‘அறிவாசனம்’ நூலை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார். கல்வி, தன்னம்பிக்கை, இலக்கு மற்றும் விடாமுயற்சியை வலியுறுத்தும் நூலாக இது அமைந்துள்ளது.

Sep 11, 2026 - 13:44
0
மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் ‘அறிவாசனம்’ நூல் வெளியீடு – அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார்

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் ராஜ்மோகன் நூலை வெளியிட்டார்

சென்னை, ஆக. 8: பரிதி பதிப்பக வெளியீட்டில் மருத்துவர் க. மகுடமுடி எழுதியுள்ள ‘அறிவாசனம்’ நூல் வெளியீட்டு விழா சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக கூட்டரங்கில் நடைபெற்றது.

விழாவில் பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன் கலந்துகொண்டு ‘அறிவாசனம்’ நூலை வெளியிட்டார்.

தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் லயோலா மணி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர் சிவா, பரிதி பதிப்பகத்தைச் சேர்ந்த இளம்பரிதி, தமிழ்நாடு–புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் வழக்கறிஞர் K. பாலு, ஆவணப்பட இயக்குநரும் கவிஞருமான ரவிசுப்ரமணியன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

நூலின் ஆசிரியரும் வளர்மதி மருத்துவமனை மருத்துவருமான க. மகுடமுடி ஏற்புரை ஆற்றினார். சென்னைப் பல்கலைக்கழக இயற்புவேதியியல் துறைத் தலைவர் பேராசிரியர் Dr. E. முருகன் வரவேற்புரை ஆற்றினார். செய்தி மக்கள் தொடர்புத் துறை இணை இயக்குநர் V.N. அண்ணாதுரை நன்றியுரை ஆற்றினார்.

மேலும் அரசு வழக்கறிஞர் R. ராஜ் பிரசன்னா, தமிழ்நாடு–புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் வழக்கறிஞர் A. ராஜேஸ்வரி, மேனாள் கல்லூரிக் கல்வி இயக்கக இணை இயக்குநரும் அரசு மொழிபெயர்ப்பு விருதாளருமான அ. மதிவாணன், மதுரை பராசக்தி கல்வி நிறுவனங்களின் தாளாளர் முனைவர் M. ஜெகதீசன், உடற்கல்வி ஆசிரியர் J. சங்கர் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் கருத்துகள்

இன்றைய மாணாக்கர், நாளைய பிரம்மாக்கள்’ என்ற சிந்தனையை முன்னிறுத்தும் வகையில் மாணவர்களின் கல்வி, ஒழுக்கம், மன உறுதி, தன்னம்பிக்கை, இலக்கு மற்றும் விடாமுயற்சி உள்ளிட்டவற்றின் முக்கியத்துவத்தை ‘அறிவாசனம்’ நூல் எடுத்துரைக்கிறது.

முயற்சியில் வெற்றி கிடைக்காதபோது மேலும் பயிற்சி பெறுவது, தேவைப்பட்டால் பாதையை மாற்றிக்கொண்டு இலக்கை நோக்கி தொடர்ந்து பயணிப்பது போன்ற தன்னம்பிக்கை சார்ந்த கருத்துகளும் நூலில் இடம்பெற்றுள்ளன.

மற்றவர்கள் ஒருவர் மீது வைக்கும் நம்பிக்கையைவிட, அவர் தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கை உறுதியானதாக இருக்க வேண்டும் என்பதையும் நூல் வலியுறுத்துகிறது.

“செயற்கை நுண்ணறிவு உங்கள் உயர்வுக்கான உந்து சக்தி; இயற்கை மெய்யறிவு உங்கள் அறிவாசனத்துக்கான ஆக்க சக்தி” என்ற கருத்துடன், முறையான கல்வி என்பது இருளிலிருந்து ஒளியை நோக்கிய பயணம் என்றும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உயர்ந்த இலக்கு, உள்ளத்தில் உறுதி, தெளிவான திட்டமிடல், இலட்சியத்தில் பற்று, விடாமுயற்சி மற்றும் கவனமான உழைப்பு ஆகியவை வெற்றியை நோக்கிய பயணத்தின் முக்கிய அம்சங்களாக நூலில் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User