4 லட்சம் மரங்கள் அழிப்பு? AI டேட்டா சென்டருக்காக பலியாகும் இயற்கை - பின்லாந்தில் சிக்கலில் கூகுள்!

Oct 24, 2026 - 10:30
0
4 லட்சம் மரங்கள் அழிப்பு? AI டேட்டா சென்டருக்காக பலியாகும் இயற்கை - பின்லாந்தில் சிக்கலில் கூகுள்!

செயற்கை நுண்ணறிவு, தேடுபொறிகள் மற்றும் இணையச் சேவைகளின் அதிவேக வளர்ச்சிக்கு பிரம்மாண்டமான கணினித் திறனும் தரவு மையங்களும் (Data Centers) தேவைப்படுகின்றன. இதற்காகப் பெரிய அளவிலான தரவு மையங்களை அமைப்பதில் முன்னணித் தொழில்நுட்ப நிறுவனங்கள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில், அத்தகைய முதலீடுகளுக்கு முக்கிய இடமாகத் திகழும் பின்லாந்தில், கூகுளின் இரண்டு தரவு மையத் திட்டங்கள் மிகப்பெரிய சுற்றுச்சூழல் சர்ச்சையில் சிக்கியுள்ளன.

பின்லாந்தின் முஹோஸ் மற்றும் ஒட்டன்மாகி பகுதிகளில் கூகுளின் தரவு மையத் திட்டங்களுக்காகக் காடுகள் அழிக்கப்க்ட்ட விவகாரம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடுகள் முழுமையடைவதற்கு முன்பே நிலப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அங்கு பணிகளை நிறுத்துமாறு பின்லாந்தின் அனுமதி மற்றும் மேற்பார்வை அமைப்பான LVV உத்தரவிட்டுள்ளது. AI-ன் பிரம்மாண்ட வளர்ச்சிக்காக இயற்கை எந்த அளவுக்குப் பலிகடா ஆக்கப்படுகிறது என்ற விவாதத்தை இந்த விவகாரம் உலகளவில் தூண்டியுள்ளது.

சித்தரிக்கப்பட்ட படம்

4 லட்சம் மரங்கள் பலி?

பின்லாந்தின் முஹோஸ் பகுதியில் சுமார் 330 ஹெக்டேர் வனப்பகுதியிலும், கஜானி நகரின் ஒட்டன்மாகி பகுதியில் 200 ஹெக்டேருக்கு உட்பட்ட நிலப்பரப்பிலும் மரங்கள் வெட்டப்பட்டுள்ளதை கூகுள் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த இரு பகுதிகளிலும் சேர்த்து சுமார் 4 லட்சம் மரங்கள் வரை வெட்டப்பட்டிருக்கலாம் தகவல் வெளியாகியுள்ளது.

விதியை மீறித் தொடங்கிய பணிகள்!

ஒரு பெரிய கட்டுமானத் திட்டம் சுற்றுச்சூழலில் ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகளைக் கண்டறிய 'சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு' (EIA) செய்யப்படுவது கட்டாயமாகும். நிலம், நீர்நிலைகள், வனவிலங்குகள் மற்றும் இயற்கை வளங்கள் மீது ஏற்படக்கூடிய விளைவுகளை ஆராய்வதே இதன் முதன்மை நோக்கம்.

ஆனால், முஹோஸ் மற்றும் ஒட்டன்மாகியில் இந்த மதிப்பீடுகள் நிறைவடைவதற்கு முன்பே மரங்களை வெட்டுதல், மேற்பரப்பு மண்ணை அகற்றுதல், கட்டுமானப் பாதைகள் அமைத்தல் மற்றும் வடிகால் அமைப்புகளை மாற்றுதல் போன்ற பணிகள் தீவிரமாக நடைபெற்றுள்ளன.

Google

இதையடுத்து, அக்டோபர் 6-ம் தேதி LVV அமைப்பு, கூகுளின் துணை நிறுவனமான 'Tuike Finland Oy'-க்கு நோட்டீஸ் அனுப்பியது. சுற்றுச்சூழலைக் குறிப்பிடத்தக்க அளவில் மாற்றும் அனைத்துப் பணிகளையும் உடனடியாக நிறுத்துமாறு உத்தரவிட்டது. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடுகள் நிறைவடையும் வரை இந்தத் தடை அமலில் இருக்கும் என்றும், அக்டோபர் 23-ம் தேதிக்குள் பணிகளை நிறுத்துவதற்கான உத்தரவைப் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

தனது செயல்பாடுகள் நிறுவனத்தின் சொந்தத் தரநிலைகளை எட்டவில்லை என்று ஒப்புக்கொண்ட கூகுள், அதிகாரிகளின் உத்தரவுகளுக்குக் கட்டுப்படுவதாகத் தெரிவித்துள்ளது. அதேவேளையில், தாம் நல்நோக்கத்துடனேயே செயல்பட்டதாகவும் கூறியுள்ளது. இந்த விவகாரத்தில் சட்ட மீறல் தொடர்பான சந்தேகங்கள் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சிதையும் இயற்கைச் சமநிலை

முஹோஸ் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கட்டுமானப் பணிகளால் நீர்வழிகள் மற்றும் வடிகால் அமைப்புகள் பாதிக்கப்படக்கூடும் என அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். அந்தப் பகுதி மண்ணின் தன்மை காரணமாக நீரின் அமிலத்தன்மை அதிகரிப்பது, அபாயகரமான உலோகங்கள் நீரில் கலப்பது போன்ற ஆபத்துகள் குறித்தும் ஆராயப்பட்டு வருகிறது.

வனவிலங்குகளின் வாழிடங்கள் துண்டிக்கப்படுவதும், காடுகளின் கார்பன் சேமிப்புத் திறன் குறைவதும் நீண்டகால அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளன. முஹோஸ் பகுதியில் 130 ஹெக்டேர் நிலத்தில் மீண்டும் மரங்களை நடத் திட்டமிட்டுள்ளதாக கூகுள் கூறியிருந்தாலும், புதிதாக மரங்களை நடுவது பல்லாண்டுகளாக உருவான பழைய காடுகளின் மண் அமைப்பையும் உயிரினச் சூழலையும் உடனடியாக மீட்டெடுக்காது எனச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ரூ.1.15 லட்சம் கோடி முதலீடு... எழும் கேள்விகள்!

பின்லாந்தில் டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் எரிசக்தித் திட்டங்களுக்காக 2027 மற்றும் 2028-ம் ஆண்டுகளில் 13 பில்லியன் யூரோக்களை (சுமார் ரூ.1.15 லட்சம் கோடி) முதலீடு செய்யப்போவதாக கூகுள் அறிவித்திருந்தது. இத்திட்டம் மூலம் கட்டுமானக் காலத்தில் 37,000-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளும், செயல்பாட்டுக்கு வந்த பிறகு ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளும் உருவாகும் என நிறுவனம் கணித்துள்ளது.

தரவு மையங்கள் உள்ளூர் பொருளாதார வளர்ச்சிக்கு உதவக்கூடும் என்றாலும், அவற்றுக்குத் தேவைப்படும் நிலம், மின்சாரம் மற்றும் நீர் பயன்பாடு ஆகியவற்றை புறந்தள்ளிவிட முடியாததால், வெறும் முதலீட்டின் அளவை மட்டும் பார்க்காமல், அதனால் ஏற்படும் நீண்டகால சுற்றுச்சூழல் சேதாரங்களையும் ஒப்பீடு செய்து பார்ப்பது அவசியமாகிறது.

கொதித்தெழும் பின்லாந்து மக்கள்!

தரவு மையங்களுக்கான சுற்றுச்சூழல் விதிகளையும் அனுமதி நடைமுறைகளையும் பலப்படுத்தக் கோரி பின்லாந்தில் தொடங்கப்பட்ட குடிமக்கள் விழிப்புணர்வுப் போராட்டத்தில் 93,000-க்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டுள்ளனர். கட்டுமான அனுமதிகள், மின்சாரப் பயன்பாடு மற்றும் உள்ளூர் மக்களுக்கான இழப்பீடு ஆகியவற்றில் கடுமையான சட்டங்கள் தேவை என்பதே அவர்களின் கோரிக்கையாக உள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User