நொய்டா போராட்டம்: `பாக்கிஸ்தான் சதி' - அரசு குற்றச்சாட்டு; 2027 தேர்தலை நோக்கித் திரும்பும் அரசியல்

Apr 14, 2026 - 16:02
 0
நொய்டா போராட்டம்: `பாக்கிஸ்தான் சதி' - அரசு குற்றச்சாட்டு; 2027 தேர்தலை நோக்கித் திரும்பும் அரசியல்

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் குறைந்த ஊதியம் மற்றும் மோசமான பணிச்சூழலைக் கண்டித்து 40,000-க்கும் மேற்பட்ட தொழிற்சாலை தொழிலாளர்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக வெடித்தது. இந்த விவகாரம் அம்மாநிலத்தில் ஆளும் பா.ஜ.க மற்றும் எதிர்க்கட்சிகளிடையே பெரும் அரசியல் போரை மூட்டியுள்ளது.

இந்த வன்முறைக்கு பின்னால் 'திட்டமிட்ட சதி' இருப்பதாக உத்தரப் பிரதேச அரசு குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அனில் ராஜ்பர், ``நொய்டா வன்முறைக்கு பின்னால் பாக்கிஸ்தானைச் சேர்ந்த சில கைக்கூலிகளின் தொடர்பு இருப்பது போன்ற ஆதாரங்கள் கிடைத்துள்ளன. மாநிலத்தின் தொழில்துறை அமைதியைக் குலைக்கச் சதி நடக்கிறது." என்றார்.

நொய்டா போராட்டம்
நொய்டா போராட்டம்

காவல்துறை ஆணையர் லட்சுமி சிங், ``வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் வன்முறை தூண்டப்பட்டுள்ளது. தீவிர இடதுசாரிகள் இந்தப் போராட்டத்தைத் திசைதிருப்பி வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு வெளிநாட்டு நிதி கிடைத்திருக்கலாம் எனச் சந்தேகிக்கிறோம்," எனத் தெரிவித்தார். இதுவரை 300-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விவகாரத்தை மையமாக வைத்து சமாஜ்வாடி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மாநில அரசைச் சாடி வருகின்றன. சமாஜ்வாடி கட்சித் தலைவரும், எம்.பி-யுமான அகிலேஷ் யாதவ், ``அரசுக்கு இந்தப் போராட்டம் பற்றி முன்கூட்டியே தெரியும், ஆனால் அதைத் தடுக்காமல் வன்முறை நடக்க அனுமதித்துவிட்டது. 2027 சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க வீழ்த்தப்படுவது உறுதி." என்றார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், ``நொய்டாவில் ஒரு தொழிலாளியின் சராசரி ஊதியம் ரூ.12,000. ஆனால் வீட்டு வாடகை ரூ.4,000 முதல் ரூ.7,000 வரை உள்ளது. ஆண்டுக்கு ரூ.300 ஊதிய உயர்வு கிடைப்பதற்குள் வீட்டு வாடகை ரூ.500 உயர்ந்துவிடுகிறது. இதுதான் 'வளர்ச்சியடைந்த இந்தியாவின்' உண்மை நிலையா?" எனக் கேள்வி எழுப்பினார்.

போராட்டத்தைத் தொடர்ந்து, திறமையற்ற, அரை-திறன் கொண்ட மற்றும் திறன் கொண்ட தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை இடைக்காலமாக உயர்த்தி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி திறமையற்ற தொழிலாளர்களுக்கு ரூ.13,690, அரை-திறன் கொண்ட தொழிலாளர்களுக்கு ரூ.15,059, திறன் கொண்ட ஊழியர்களுக்கு ரூ.16,868 என ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது.

யோகி ஆதித்யநாத்
யோகி ஆதித்யநாத்

ஏப்ரல் 1 முதல் இந்த ஊதிய உயர்வு அமலுக்கு வரும் எனக் கூறப்படுகிறது. இருப்பினும், தொழிலாளர்கள் குறைந்தபட்ச ஊதியமாக ரூ.20,000 வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசு ஏற்கவில்லை.

உத்தரப் பிரதேசத்தில் மே-ஜூன் மாதங்களில் உள்ளாட்சித் தேர்தலும், 2027-ல் சட்டமன்றத் தேர்தலும் நடைபெறவுள்ளன. பா.ஜ.க-வின் கோட்டையாகக் கருதப்படும் இம்மாநிலத்தில், தொழிலாளர்களின் இந்தப் போராட்டம் எதிர்க்கட்சிகளுக்கு ஒரு புதிய அரசியல் ஆயுதமாக மாறியுள்ளது. எனவே, அவர்களைக் கட்டுக்குள் கொண்டுவர தொழில்துறையினருடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்துமாறு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தொழில்முனைவோருக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு இப்போதே களத்தை தயார் செய்துகொண்டிருக்கின்றன அரசியல் கட்சிகள்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0