Delimitation: '39 தொகுதிகளுக்குப் பதில் தமிழ்நாட்டிற்கு வெறும் 46; உபிக்கு 140ஆ?' - சீறும் தலைவர்கள்

Apr 15, 2026 - 12:03
 0
Delimitation: '39 தொகுதிகளுக்குப் பதில் தமிழ்நாட்டிற்கு வெறும் 46; உபிக்கு 140ஆ?' - சீறும் தலைவர்கள்

நாளை நாடாளுமன்றத்தில் நடக்கும் சிறப்புக் கூட்டத்தொடரில் தொகுதி மறுசீரமைப்பு மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.

இந்த மசோதாவிற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

தொகுதி மறுசீரமைப்பு மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கை...

"நாளை நடைபெறும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்படவுள்ள அரசியலமைப்பு (131வது திருத்தம்) மசோதா- 2026 நாம் அனைவரும் அஞ்சியதை விட மிகவும் ஆபத்தான அம்சங்களைக் கொண்டுள்ளது.

பிரதமர் மற்றும் அமைச்சர்களின் உறுதிமொழிக்கு மாறாக, ஒவ்வொரு மாநிலத்திற்குமான தற்போதைய இடங்களின் விகிதாச்சாரம் பராமரிக்கப்படும் என்பதை உறுதிசெய்ய இம்மசோதாவில் ஒரு வரி கூட இல்லை.

மக்கள் விரோத பா.ஜ.க. வைத் தலையில் வைத்துத் தூக்கித் திரியும் அ. இ.அ.தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையில் 25-வது வாக்குறுதியில் கீழ்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.

சு.வெங்கடேசன்
சு.வெங்கடேசன்

பழனிசாமியின் ஆவேச அறிக்கை எங்கே?

தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாட்டிற்கான தற்போதுள்ள விகிதாச்சார பிரதிநிதித்துவம் குறைந்துவிடாமல் இருக்க தொடர்ந்து வலியுறுத்துவோம்.

தற்போதைய இடங்களின் விகிதாச்சாரம் பராமரிக்கப்படும் என்பதை உறுதிசெய்யாத இம்மசோதாவிற்கு எதிராக எடப்பாடி பழனிசாமி ஆவேச அறிக்கை ஒன்றை இந்நேரம் வெளியிட்டிருக்க வேண்டும். தங்களது மாநிலங்களவை உறுப்பினர்கள் இம்மசோதா நகலைக் கிழித்தெறிய இந்நேரம் உத்தரவிட்டிருக்க வேண்டும்.

ஆனால், அப்படியெதுவும் நடந்ததாகத் தெரியவில்லை.

அவரின் அமைதி நமக்கு உணர்த்துவது ஒன்றுதான். கட்சியை பா.ஜ.க.விடம் அடகுவைத்துச் சரணடைந்ததைப் போல இப்போது நம் மாநில நலனையும் பலி கொடுக்கத் துணிந்துவிட்டார் என்பதே அவரது அமைதிக்கான அர்த்தம்" என்றார்.

ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்
இந்த மசோதா குறித்து காங்கிரஸின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள அறிக்கை...

"கடந்த வாரம் நான் கூறிய அச்சங்கள் இப்போது உண்மையாகிவிட்டன. மக்களவையின் மொத்த இடங்களின் எண்ணிக்கை 543-ல் இருந்து 815 ஆக (50%) உயர்த்தப்படும்போது, தமிழ்நாட்டின் பலம் 39-ல் இருந்து 58 ஆக அதிகரிப்பது போல் தோன்றும். ஆனால் இது ஒரு மாயை. தொகுதி மறுவரையறை நடைமுறைப்படுத்தப்படும்போது, அது 46 ஆகக் குறையும்.

அதே சமயம், உத்தரப் பிரதேசத்தின் பலம் முதலில் 80-ல் இருந்து 120 ஆக உயரும்; பின்னர் தொகுதி மறுவரையறைக்குப் பிறகு, அது தோராயமாக 140 ஆக மேலும் அதிகரிக்கும்.

தற்போது 24.3% பிரதிநிதித்துவத்தைக் கொண்டுள்ள அனைத்து தென்னிந்திய மாநிலங்களின் பிரதிநிதித்துவம் 20.7%-ஆகக் குறைக்கப்படும்.

இது கூட்டாட்சித் தத்துவத்தின் சமநிலையை அடியோடு மாற்றுவதற்கான ஒரு வஞ்சகமான மற்றும் கொடூரமான நடவடிக்கையாகும். இது கண்டிப்பாக எதிர்க்கப்பட வேண்டும்"

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0